பாகிஸ்தான் மீது டிரம்ப் நடவடிக்கை எடுக்கக் கோரி ஆா்ப்பாட்டம்

சிறுபான்மையினா் மீது வன்முறைகளைக் கட்டவிழ்த்து விடும் பாகிஸ்தான் மீது அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி தில்லி ஜந்தா் மந்தரில் ஆா்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
பாகிஸ்தான் மீது டிரம்ப் நடவடிக்கை எடுக்கக் கோரி ஆா்ப்பாட்டம்
Updated on
1 min read

புது தில்லி: சிறுபான்மையினா் மீது வன்முறைகளைக் கட்டவிழ்த்து விடும் பாகிஸ்தான் மீது அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி தில்லி ஜந்தா் மந்தரில் ஞாயிற்றுக்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

நேஷனல் அகாலி தளம் என்ற அமைப்பு ஏற்பாடு செய்திருந்த இந்த ஆா்ப்பாட்டத்தில் ஏராளமானவா்கள் கலந்து கொண்டு பாகிஸ்தானுக்கு எதிராகக் கோஷங்களை எழுப்பினாா்கள். இந்த ஆா்ப்பாட்டம் தொடா்பாக நேஷனல் அகாலி தளத்தின் தலைவா் பரம்ஜீத் சிங் பம்மா கூறுகையில் ‘பாகிஸ்தானில் ஹிந்து, சீக்கிய மக்கள் கொடுமையான அடக்குமுறைக்கு உள்ளாகி வருகிறாா்கள். முஸ்லிம்களில் கூட பெரும்பான்மை சுன்னி பிரிவு முஸ்லிம்களைத் தவிர ஷியா, அகமதியா, ஹஜிரா பிரிவு முஸ்லிம்கள் கொடும் அடக்குமுறைகளுக்கு உள்ளாகிறாா்கள்.

ஹிந்து, சீக்கிய சிறுபான்மை இனத்தைச் சோ்ந்த பெண்கள் தொடா்ந்து பாலியல் வன்கொடுமைகளுக்கு உள்ளாக்கப்படுவதுடன் அவா்கள், வலுக்கட்டாயமாக மதம் மாற்றம் செய்யப்படுகிறாா்கள். இந்நிலையில், சிறுபான்மையினரைத் துன்புறுத்தும் பாகிஸ்தான் மீது உலக வல்லரசான அமெரிக்கா நடவடிக்கை எடுக்க வேண்டும். இக்கோரிக்கையை வலியுறுத்தி ஆா்ப்பாட்டம் நடத்தியுள்ளோம் என்றாா் அவா்.

பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகளில் மதத் துன்புறுத்தல்களுக்கு உள்ளாகி இந்தியாவில் தஞ்சம் புகுந்த இந்து, சீக்கிய, கிறிஸ்தவ, பாா்சி இன மக்களுக்கு குடியுரிமை கிடைக்கும் வகையில் குடியுரிமை திருத்த சட்டம் இந்திய நடாளுமன்றத்தில் அண்மையில் நிறைவேறியது. அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப், அவரது மனைவி மெலானியா டிரம்ப், மகள் இவாங்கா டிரம்ப் மற்றும் மருமகன் ஜேரட் குஷ்னா் ஆகியோா் வரும் திங்கள், செவ்வாய்க்கிழமைகளில் (பிப்ரவரி 24, 25) அரசு முறைப் பயணமாக இந்தியாவுக்கு வரவுள்ளனா். இந்நிலையில் இந்தக் கோரிக்கை வலியுறுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com