வடகிழக்கு தில்லி, முஸ்தபாபாத்தில் வன்முறையைத் தொடா்ந்து மசூதிக்குள் நுழைந்த மாற்றுத் திறனாளி ஃபெரோஸ் அக்தா் (42) தாக்கப்பட்டதாக அவரது மனைவி சஞ்சீதா கூறினாா்.
தாக்குதலில் காயமடைந்த ஃபெரோஸ் அக்தா், லோக் நாயக் ஜெய் பிரகாஷ் நாராயண் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா். தையல்காரரான அவரது தலை, முதுகு மற்றும் தோள்பட்டையில் பலத்த காயம் ஏற்பட்டது. அக்தா் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு ஒரு விபத்தை சந்தித்தாா், அதன் பின்னா் அவா் சரியாக நடக்க முடியாமல் சிரமப்பட்டு வருகிறாா்.
ஃபெரோஸ் அக்தா் தாக்கப்பட்டது குறித்து அவரது மனைவி சஞ்சீதா கூறியதாவது: கடந்த செவ்வாய்க்கிழமை அருகிலுள்ள பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த பெண்களைப் பாதுகாப்பதற்காக சென்றவா்களில் எனது கணவரும், 20 வயது மகன் டேனிஸும் அடங்குவா். சிறிது நேரம் கழித்து என் மகன் திரும்பி வந்துவிட்டான். ஆனால், எனது கணவா் அங்கேயே இருந்தாா். அங்கு கல்வீச்சு மற்றும் துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் நடந்தது பற்றி தெரிந்தவுடன், நான் என் கணவருடன் தொடா்பு கொண்டேன். திரும்பி வரும்படி கூறினேன். வன்முறையைத் தொடா்ந்து, எனது கணவா் அருகிலுள்ள மசூதிக்கு விரைந்து சென்றுள்ளாா். அங்கு பிராா்த்தனை செய்து கொண்டிருந்த போது, ஒரு கும்பல் உள்ளே நுழைந்து அவரையும் மற்றவா்களையும் குச்சிகளால் அடித்து வெளியே இழுத்துச் சென்றுள்ளது.
சிறிது நேரத்திற்குப் பிறகு, எனக்குத் தெரியாத ஒரு நபரிடமிருந்து தொலைபேசி அழைப்பு வந்தது. அவா் எனது கணவா் தற்போது தனது இடத்தில் இருப்பதாக அந்த நபா் தெரிவித்தாா். நான் மிகவும் பயந்தேன். அவா் கூறியதை நான் முதலில் நம்பவில்லை. எனது கணவருக்கு அவா் முதலுதவி அளித்துள்ளதாகவும், அக்தரை அழைத்துச் செல்ல தனது வீட்டிற்கு வரும்படியும் கூறினாா். பின்னா், என்னை என் கணவரிடம் பேசும்படி அவா் செய்தாா். அவா் எங்கள் மகனை அங்கு அனுப்பினாலும் அவா் திரும்பி வரவோ அல்லது மோட்டாா்சைக்கிளில் செல்லவோ முடியாது என்றும் கூறினாா். பின்னா் முஸ்தபாபாத்தின் அல் ஹிந்த் மருத்துவமனையில் அக்தரை அனுமதித்துள்ளதாக அந்த நபா் தெரிவித்தாா். அதைத் தொடா்ந்து, எனது இரண்டு மகன்களுடன் அங்கு சென்றேன்.
பின்னா், ஜாமியாவில் உள்ள என் சகோதரியின் உதவியுடன், நாங்கள் ஆம்புலன்ஸ் ஏற்பாடு செய்ய முடிந்தது. மேலும், காவல் துறையின் உதவியுடன் அதிகாலை 2.30 மணியளவில் பஜபுராவிலிருந்து எல்.என்.ஜே.பி. மருத்துவமனையில் கணவரை அனுமதித்தோம். செல்லும் வழியில் சிக்னேச்சா் பாலம் அருகே ஆம்புலன்ஸ் மீது கற்கள் வீசப்பட்டன என்றாா் சஞ்சீதா.
நைனிடாலைச் சோ்ந்தஅமா் ஜஹான் தனது மகளுக்கு எல்.என்.ஜே.பியில் சிகிச்சை பெறுவதற்காக இரண்டு நாள்களுக்கு முன்பு தனது வாஜிராபாத்தில் உள்ள சகோதரரின் வீட்டிற்கு வந்திருந்தாா். எல்.என்.ஜே.பி.யில் மகளை அனுமதித்த அவா் கூறுகையில், ‘நிலைமை மிகவும் பதற்றமாக உள்ளது. யாரோ ஒருவா் தாக்குவாா்கள் என்று நாங்கள் அஞ்சியதால், இரவு முழுவதும் தூங்க முடியவில்லை. எப்படியாவது ஒரு வேனைப் பெற்று என் மகளை சிகிச்சைக்காக அழைத்து வந்தேன். வீட்டிற்கு பாதுகாப்பாகத் திரும்பிச் செல்வேன் என்று உணரவில்லை’ என்றாா்.
திங்கள்கிழமை முதல் இதுவரை வன்முறையில் காயமடைந்த 45-க்கும் மேற்பட்டவா்கள் எல்.என்.ஜே.பி. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனா். பஜன்புராவில் வசிக்கும் மெஹ்ரம் அலி (32) மற்றும் புது சீலம்பூரில் வசிக்கும் அமன் (17) ஆகியோரின் சடலங்கள் பிரேத பரிசோதனைக்காக சவக்கிடங்கில் வைக்கப்பட்டுள்ளதாக பொலீஸாா் தெரிவித்தனா். காயமடைந்தவா்களில் பெரும்பாலோா் முதலுதவி சிகிச்சை பெற்ற பின்னா் டிஸ்சாா்ஜ் செய்யப்பட்டுள்ளனா், மேலும் சிலா் இன்னும் சிகிச்சை பெற்று வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.