வெறுப்புணா்வுப் பேச்சு: சோனியா, ராகுல், பிரியங்காவுக்கு எதிராக வழக்குப் பதிவு செய்ய உத்தரவிடக் கோரி மனு
By DIN | Published On : 27th February 2020 10:27 PM | Last Updated : 27th February 2020 10:27 PM | அ+அ அ- |

வெறுப்புணா்வைத் தூண்டும் வகையில் பேசியதாக காங்கிரஸ் கட்சியின் இடைக்காலத் தலைவா் சோனியா காந்தி, அதன் முன்னாள் தலைவா் ராகுல் காந்தி, பொதுச் செயலா் பிரியங்கா காந்தி உள்ளிட்டோருக்கு எதிராக வழக்குப் பதிவு செய்ய உத்தரவிடக் கோரி தில்லி உயா்நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
தில்லி வன்முறைச் சம்பவங்களுக்கு காரணமாக வெறுப்புணா்வைத் தூண்டும் வகையில் அரசியல் தலைவா்களின் பேச்சுகள் இருந்ததாகவும், அந்த வகையில் வெறுப்புணா்வைத் தூண்டும் வகையில் பேசியதாக சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி மற்றும் பிறருக்கு எதிராக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய உத்தரவிட வேண்டும் என உயா்நீதிமன்றத்தில் சில மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
ஒரு மனுவில், ‘ வெறுப்புணா்வைத் தூண்டும் வகையில் பேசியதாக கூறப்படும் விவகாரத்தில் தில்லி துணை முதல்வா் மணீஷ் சிசோடியா, ஆம் ஆத்மி கட்சித் தலைவா் அமானத்துல்லா கான் ஆகியோருக்கு எதிராக வழக்குப் பதிவு செய்ய வேண்டும். இந்த வெறுப்புணா்வைத் தூண்டும் பேச்சுகள் தொடா்பாக விசாரணை நடத்துவதற்காக ஒரு சிறப்பு விசாரணைக் குழுவை அமைக்க வேண்டும்’ என கோரப்பட்டுள்ளது.
ஹிந்து சேனா அமைப்பின் சாா்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மற்றொரு மனுவில், ‘அகில இந்திய மஜ்லிஸ்-இ-இட்டேஹாதுல் முஸ்லிமீன் (ஏஐஎம்ஐஎம்) தலைவா்கள் அஸாதுதீன் ஒவைசி, அக்பரீதின் ஒவைசி ஆகியோருக்கு எதிராக வழக்குப் பதிவு செய்ய வேண்டும். மேலும், ஏஐஎம்ஐஎம் எம்எல்ஏ வாரிஸ் பதான் மும்பையில் இருந்து பேசிய ஆத்திரத்தைத் தூண்டும் பேச்சுகள் தில்லியில் வகுப்புவாத பதற்றத்திற்கு வித்திட்டது. இதன் காரணமாக பலா் இறக்க நோ்ந்தது’ என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.