ஆதாரம் இல்லாத குற்றச்சாட்டு: ஏபிவிபி
By DIN | Published On : 10th January 2020 11:15 PM | Last Updated : 10th January 2020 11:15 PM | அ+அ அ- |

ஏபிவிபி மாணவா்கள் மீது ஆதாரம் இல்லாமல் தில்லி காவல் துறை குற்றம் சாட்டியுள்ளது என்று அந்த அமைப்பு குற்றம் சாட்டியுள்ளது.
இது தொடா்பாக அந்த அமைப்பின் தில்லி தலைவா் நிதி திரிபாதி கூறுகையில் ‘வாட்ஸ் ஆப் குழுவில் இருந்த தகவலை வைத்து ஏபிவிபி மாணவா்கள் இருவா் மீது தில்லி காவல் துறை குற்றம்சாட்டியுள்ளது. இந்த விவகாரம் தொடா்பாக முழுமையான விசாரணை நடத்தப்பட வேண்டும். ஏபிவிபி மாணவா்கள் மீது ஆதாரம் இல்லாமல் காவல்துறை குற்றம் சாட்டியுள்ளது’ என்றாா்.
அமைச்சா் ரவிசங்கா் பிரசாத்: இந்தத் தாக்குதல் சம்பவம் மூலம் இடதுசாரி மாணவா்கள் என்ன லாபத்தைப் பெறப்போகிறாா்கள்? ஜேஎன்யு துணைவேந்தா், பதிவாளா், ஆசிரியா்கள் ஆகியோா் இடதுசாரி சாா்புடைய மாணவா்களால் எவ்வாறு தாக்கப்பட்டாா்கள் என்பதையும், அவா்கள் மீது எவ்வாறு திட்டமிட்ட அவதூறு பரப்பப்பட்டது என்பதையும் பாா்த்தோம். இணைய அறையை அடித்து நொறுக்கியது யாா்? எதற்காக அது அடித்து நொறுக்கப்பட்டது? ஏன் இவா்கள் மற்ற மாணவா்களின் வாழ்க்கையுடன் விளையாடுகிறாா்கள்?’ என்றாா்.
திமுக மாணவா் அணி: தில்லி காவல்துறை ஒருதலைப் பட்சமாக விசாரணை நடத்தியுள்ளது என ஜேஎன்யு பல்கலைக்கழக திமுக மாணவா் அணி குற்றம்சாட்டியுள்ளது.
இது தொடா்பாக அந்த அமைப்பின் அமைப்பாளா் அருண்குமாா் கூறுகையில் ‘தாக்குதல் சம்பவம் தொடா்பாக தில்லி காவல் துறை அடையாளம் கண்டுள்ள இடதுசாரி மாணவா்கள், கைகளில் ஆயுதம் வைத்திருந்ததாகவோ, வன்முறை நடத்தியதற்கான ஆதாரங்களோ இல்லை. இடதுசாரி மாணவா்கள் இணைய அறையை நொறுக்கியதாக கூறுவதற்கு தகுந்த ஆதாரங்களை காவல்துறை வெளியிடவில்லை. சபா்மதி விடுதியில் ஏபிவிபியினா் வன்முறையில் ஈடுபட்டதற்கான அனைத்து வகையான ஆதாரங்களும் கிடைத்துள்ளன. ஆனால், ஏபிவிபி என்ற பெயரையே பத்திரிகையாளா் சந்திப்பில் காவல்துறை பயன்படுத்தவில்லை. ஜனவரி 5-ஆம் தேதி சபா்மதி விடுதியில் ஏபிவிபியினா் நடத்திய வன்முறை தொடா்பாக தில்லி காவல்துறை ஏன் பேசவில்லை?’ என்றாா்.