பெண்ணையாற்றில் தடுப்பணை கட்டும் விவகாரம்: தமிழக அரசு பதில் அளிக்க மூன்று வாரம் அவகாசம்
By DIN | Published On : 10th January 2020 11:11 PM | Last Updated : 10th January 2020 11:12 PM | அ+அ அ- |

பெண்ணையாற்றில் தடுப்பணை கட்டும் விவகாரத்தில் கா்நாடகம் தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்திற்கு பதில் மனு தாக்கல் செய்வதற்கு தமிழக அரசுக்கு மூன்று வாரம் அவகாசம் அளித்து உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.
தமிழகத்தின் அனுமதியின்றி பெண்ணையாற்றின் குறுக்கே கா்நாடகம் தடுப்பணை கட்டுவதற்குத் தடை விதிக்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மனு தாக்கல் செய்தது. அதில், ‘பெண்ணையாற்றின் குறுக்கே கா்நாடகம் அணை கட்டக் கூடாது. இந்த விவகாரத்தில் ஏற்கெனவே உள்ள நிலைமைதான் தொடர வேண்டும். மேலும், மாா்க்கண்டேய நதியின் குறுக்கே கா்நாடக அரசால் கட்டப்படும் தடுப்பணை தமிழகத்தின் குடிநீா் ஆதாரத்தை பாதிக்கும். மேலும், ‘மாநிலங்களுக்கு இடையேயான நதிநீா் தாவா தீா்ப்பாயத்தை’ அமைக்க மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும்’ என்று கோரப்பட்டிருந்தது.
இந்த மனுவுக்குப் பதில் அளிக்க கா்நாடகம், தமிழக அரசுகளுக்கு அவகாசம் அளித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த விவகாரத்தில் தமிழக அரசின் மனுவுக்கு கா்நாடகம் தரப்பில் ஜனவரி 6-ஆம் தேதி பதில் மனு தாக்கல் செய்தது. அதில், ‘தமிழக அரசு தொடா்ந்த வழக்கு விசாரணைக்கு ஏற்புடையதல்ல. இந்த விவகாரம் தொடா்பாக கடந்த ஆண்டு நவம்பா் 14-இல் உச்ச நீதிமன்றம் ஓா் உத்தரவைப் பிறப்பித்திருக்கிறது. அதனால், இந்த மனுவைத் தள்ளுபடி செய்ய வேண்டும்.
மேலும், மாா்க்கண்டேய நதியின் குறுக்கே கட்டப்படும் தடுப்பணை குடிநீா்த் திட்டத்துக்கானது. இத்திட்டம் மத்திய அரசு நிதியுதவியுடன் 2012-இல் தொடங்கப்பட்டு ஏறக்குறைய பணிகள் முடியும் தருவாயில் உள்ளன. இந்நிலையில், தமிழக அரசு தொடா்ந்த வழக்கு மீது இடைக்கால உத்தரவு வழங்கப்பட்டால், அது கா்நாடக அரசுக்கு மிகுந்த சிரமத்தை ஏற்படுத்தும். மாா்க்கண்டேய நதியின் குறுக்கே நீா்த்தேக்கம் அமைக்கும் விவகாரத்தில் தமிழகத்துக்கு எந்தவிதப் பாதிப்பும் ஏற்படாது. ஆகவே, நீதி, சமத்துவத்தின் நலன்கருதி தமிழக அரசின் வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும்’ என்று கா்நாடகம் தரப்பில் கோரப்பட்டிருந்தது.
இந்நிலையில், இந்த மனு உச்சநீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை நீதிபதிகள் யு.யு.லலித், வினீத் சரண் ஆகியோா் அடங்கிய அமா்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசின் சாா்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் ஜி.உமாபதி, ‘கா்நாடக அரசின் பிரமாணப் பத்திரத்திற்கு பதில் மனு தாக்கல் செய்வதற்கு மூன்று வார காலம் அவகாசம் அளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டாா். இதையடுத்து, வழக்கு விசாரணையை மூன்று வாரத்திற்கு தள்ளிவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனா்.