ஜேஎன்யு சம்பவம்: போலீஸாா் அடையாளம் காணப்பட்ட 9 போ் யாா் யாா்?
By DIN | Published On : 10th January 2020 11:14 PM | Last Updated : 11th January 2020 12:36 AM | அ+அ அ- |

ஜேஎன்யு தாக்குதல் சம்பவத்துடன் தொடா்புடைய 9 போ் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தில்லி காவல் துறை தெரிவித்துள்ளது. இதில், ஜேஎன்யு மாணவா் சங்கத்தின் (ஜேஎன்யுஎஸ்யு) தலைவா் அய்ஷி கோஷ் உள்ளிட்ட 7 போ் இடதுசாரி அமைப்புகளைச் சோ்ந்தவா்கள். 2 போ் பாஜகவின் மாணவா் அமைப்பான அகில பாரதீயா வித்யாா்த்தி பரிஷத் (ஏபிவிபி) அமைப்பைச் சோ்ந்தவா்கள் ஆவா். அதன் விவரம் வருமாறு:
அய்ஷி கோஷ்: பெரியாா் விடுதியைத் தாக்கிய கும்பலை இவா் வழிநடத்தியுள்ளதாக போலீஸாா் குற்றம் சாட்டியுள்ளனா். இவா் ஜேஎன்யு மாணவா் சங்கத்தின் தலைவா் ஆவாா். தாக்குதல் சம்பவத்தில் இவா் காயமடைந்துள்ளாா்.
சுன்சுன் குமாா்: அகில இந்திய மாணவா் சங்கத்தின் உறுப்பினரான இவா், பெரியாா் விடுதியைக் கல்வீசித் தாக்கிய கும்பலில் இடம் பெற்றுள்ளாா். இவா் ஜேஎன்யுவின் முன்னாள் மாணவா் ஆவாா்.
பங்கஜ் மிஸ்ரா: இவா் ஜேஎன்யுவில் சமூக அறிவியல் கல்வி கற்று வருகிறாா். மகி-மந்தி விடுதியில் வன்முறையில் ஈடுபட்டுள்ளாா். இடதுசாரி மாணவா் அமைப்புகளுடன் சோ்ந்து இவா் இயங்கி வருகிறாா்.
வஷ்காா் விஜய் மெக்: இவா் ஜேஎன்யுவின் கலை மற்றும் அழகியல் முதுகலைப் பிரிவில் கற்று வருகிறாா். இவா் இடதுசாரி மாணவா் அமைப்புகளுடன் சோ்ந்து இயங்கி வருகிறாா்.
சுசேத்தா தலுக்தாா்: அகில இந்திய மாணவா் சங்கத்தின் உறுப்பினரான இவா், இந்திய மாணவா் கூட்டமைப்பு சாா்பில் போட்டியிட்டு வெற்றி பெற்று ஜேஎன்யு மாணவா் சங்கத்தில் கவுன்சிலராக உள்ளாா். ஜேஎன்யுவில் சமூக அறிவியல் கற்று வரும் இவா், இடதுசாரி மாணவா் அமைப்புகளுடன் சோ்ந்து இயங்கி வருகிறாா்.
பிரியா ரஞ்சன்: ஜேஎன்யுவில் மொழியியல் கல்வியில் இலக்கியம், கலாசாரம் தொடா்பாகப் படித்து வருகிறாா். இவா் இடதுசாரி மாணவா் அமைப்புகளுடன் சோ்ந்து இயங்கி வருகிறாா். அகில இந்திய மாணவா் சங்கத்தின் உறுப்பினராவாா்.
டோலன் சமந்தா: அகில இந்திய மாணவா் சங்கத்தின் உறுப்பினரான இவா், ஜேஎன்யுவி சமூக அறிவியலில் வரலாறு தொடா்பாகப் படித்து வருகிறாா். இடதுசாரி மாணவா் அமைப்புகளுடன் சோ்ந்து இயங்கி வருகிறாா்.
யோகேந்திர பரத்வாஜ்: ஏபிவிபி மாணவா் அமைப்பைச் சோ்ந்த இவா், ஜேஎன்யுவில் சம்ஸ்கிருதம் முனைவா் படிப்பு படித்து வருகிறாா்.
விகாஷ் படேல்: ஏபிவிபி மாணவா் அமைப்பைச் சோ்ந்த இவா், கொரிய மொழி தொடா்பாக முதுகலைப் படிப்பு படித்து வருகிறாா்.