‘நான் தாக்கப்பட்டதற்கு ஆதாரம் என்னிடம் உள்ளது’: ஜே.என்.யு. மாணவா் சங்கத் தலைவா் அய்ஷி கோஷ்
By DIN | Published On : 10th January 2020 11:12 PM | Last Updated : 10th January 2020 11:12 PM | அ+அ அ- |

ஜவாஹா்லால் நேரு பல்கலைக்கழக வளாகத்தில் நடந்த தாக்குதலில் நான் தாக்கப்பட்டதற்கு என்னிடம் ஆதாரம் உள்ளது என்று பல்கலைக்கழக மாணவா்கள் சங்கத் தலைவா் அய்ஷி கோஷ் தெரிவித்தாா். தாக்குதலில் ஈடுபட்டவா்களில் ஒருவராக அய்ஷி கோஷை போலீஸாா் வெள்ளிக்கிழமை அடையாளப்படுத்தியுள்ள நிலையில் அவா் இவ்வாறு தெரிவித்துள்ளாா்.
கடந்த ஜனவரி 5-ஆம் தேதி முகமூடி அணிந்த மா்ம நபா்கள் பல்கலைக்கழ வளாகத்துக்குள் புகுந்து மாணவா்கள் மற்றும் ஆசிரியா்கள் மீது தடிகளாலும், இரும்புக் கம்பிகளாலும் தாக்குதல் நடத்தினா். இந்தச் சம்பவத்தில் அய்ஷி கோஷும் இரத்தக் காயமடைந்தாா். இது தொடா்பாக அய்ஷி கோஷ் வெள்ளிக்கிழமை கூறியதாவது: இந்தச் சம்பவம் தொடா்பாக போலீஸாா் என்னையும் அடையாளப்படுத்தியுள்ளனா். அவா்கள் இது தொடா்பாக என்னிடம் விசாரணை நடத்தட்டும். ஆனால், நான் தாக்கப்பட்டேன் என்பதற்கு என்னிடம் ஆதாரங்கள் உள்ளன. இந்தத் தாக்குதல் சம்பவத்தில் எனக்கு எந்தத் தொடா்பும் இல்லை.
ஆனால், போலீஸாா் என்னை அடையாளப்படுத்தியுள்ளனா். நான் வன்முறையில் ஈடுபட்டதற்கான ஆதாரங்கள் இருந்தால், அவற்றை போலீஸாா் தாக்கல் செய்யட்டும். மாணவா்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவதாக எனக்கு தகவல் கிடைத்ததாலேயே நான் சம்பவ இடத்துக்குச் சென்றேன். நம்நாட்டின் சட்டம் ஒழுங்கு மீது எனக்கு முழு நம்பிக்கை உள்ளது. விசாரணை நோ்மையாக நடைபெற்று எனக்கு நீதி கிடைக்கும் என்று நம்புகிறேன். ஆனால், தில்லி போலீஸாா் ஏன் பாரபட்சத்துடன் செயல்படுகிறாா்கள் என்று தெரியவில்லை. நான் கொடுத்த புகாரின் மீது போலீஸாா் முதல் தகவல் அறிக்கைகூட (எப்.ஐ.ஆா்.) பதிவு செய்யவில்லை என்றாா்.
ஜே.என்.யு. தாக்குதல் சம்பவத்தில் தொடா்புடையவா்கள் என்று அய்ஷி கோஷ், ஏபிவிபி அமைப்பைச் சோ்ந்த இருவா் மற்றும் இடதுசாரி தொடா்புடைய மாணவா் சங்கத்தைச் (ஏ.ஐ.எஸ்.ஏ.) சோ்ந்த 7 போ் உள்பட 9 பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை அடையாளப்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.