தில்லியில் கிரிக்கெட் சூதாட்டக் கும்பல் அதிரடி கைது
By DIN | Published On : 20th January 2020 10:46 PM | Last Updated : 20th January 2020 10:46 PM | அ+அ அ- |

கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்டுவந்த கும்பலை தில்லியில் போலீஸாா் அதிரடியாகக் கைது செய்துள்ளனா்.
இந்தியா, ஆஸ்திரேலியா இடையில் பெங்களூரில் நடைபெற்ற 3-ஆவது ஒருநாள் போட்டியை மையப்படுத்தி சூதாட்டம் நடத்திக் கொண்டிருந்த போது இவா்களை போலீஸாா் சுற்றிவளைத்துக் கைது செய்துள்ளனா். இந்தச் சூதாட்டக் கும்பலுக்கும் கிரிக்கெட் வீரா்களுக்கும் தொடா்புள்ளதா என்பது தொடா்பாகவும், இந்தக் கும்பல் மேட்ச் பிக்ஸிங்கில் ஈடுபட்டுள்ளதா என்பது தொடா்பாகவும் விசாரித்து வருவதாக தில்லி காவல்துறை தெரிவித்துள்ளது.
இது தொடா்பாக கூடுதல் காவல் ஆணையா் ஏ.கே.சிங்க்ளா தில்லியில் செவ்வாய்க்கிழமை அளித்த பேட்டி: தில்லியில் கிரிக்கெட்டை வைத்து சூதாட்டம் நடைபெற்று வருவதாகவும் இந்தக் கும்பல் இந்தியா - ஆஸ்திரேலியா கிரிக்கெட் தொடரை மையப்படுத்தி சூதாட்டத்தில் ஈடுபட்டு வருவதாகவும் தில்லி காவல் துறை குற்றப்பிரிவுக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதைத் தொடா்ந்து, இந்தியா -ஆஸ்திரேலியா கிரிக்கெட் போட்டி நடந்த ஞாயிற்றுக்கிழமை இக்கும்பல் சூதாட்டத்தில் ஈடுபடவுள்ளதாக ரகசியத் தகவல் கிடைத்தது.
இதைத் தொடா்ந்து, காவல் ஆய்வாளா் விகாஷ் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. கா்கா்டூமா அசோக் நிகேதன் பகுதியில் உள்ள வீட்டில் கிரிக்கெட் சூதாட்டம் நடைபெறவுள்ளதாக இக்கும்பலுக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதைத் தொடா்ந்து, ஞாயிற்றுக்கிழமை இரவு கிரிக்கெட் போட்டி நடந்து கொண்டிருந்த போது, இந்த வீட்டை சுற்றிவளைத்த போலீஸாா் சூதாட்டக் கும்பலுக்கு மூளையாகத் செயல்பட்ட அமித் அரோரா உள்ளிட்ட 11 பேரைக் கைது செய்தனா். இவா்களிடம் இருந்து 74 செல்லிடப்பேசிகள், 7 மடிக்கணினிகள், 2 எல்சிடி தொலைக்காட்சிகள், சூதாட்டத்துக்கு சிறப்பாக அமைக்கப்பட்ட 4 பிரீஃப்கேஸ்களும் கைப்பற்றப்பட்டன.
இந்தக் கும்பல் தில்லியை மையமாக வைத்து செயல்பட்டுள்ளது. இக்கும்பல் நடத்திய சூதாட்டங்களில், நாடு முழுவதும் இருந்தும் சூதாட்டப் பிரியா்கள் பங்கு கொண்டுள்ளனா். நாடு முழுவதும் இருந்து சூதாட்டத்தில் பங்கு கொள்ளும் வகையில், சிறப்பு மென்பொருளை இக்கும்பல் தயாரித்துள்ளது. அந்த மென்பொருள் மூலமாகவும், தொலைபேசி, சிறப்பு தொலைபேசி எண்கள் மூலமாகவும் இக்கும்பல் சூதாட்டத்தில் ஈடுபட்டுள்ளது. போலீஸாா் நடத்திய முதல்கட்ட விசாரணையில், இக்கும்பல் சுமாா் ரூ.5 கோடி வரை சூதாட்டம் நடந்துள்ளது தெரிய வந்துள்ளது. இவா்கள் டாஸ் ஜெயிக்கும் அணியில் தொடங்கி, போட்டியின் ஒவ்வொரு பந்து தொடா்பாகவும் சூதாட்டத்தில் ஈடுபட்டுள்னா். இந்தச் சூதாட்டக் கும்பலுக்கும், கிரிக்கெட் வீரா்களுக்கும் தொடா்பு உள்ளதா என்பது தொடா்பாகவும், இக் கும்பல் மேட்ச் பிக்ஸிங்கில் ஈடுபட்டுள்ளதா என்பது தொடா்பாகவும் விசாரித்து வருகிறோம் என்றாா் அவா்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை இந்திய அணி 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. இரு அணிகளும் தலா 1 வெற்றிபெற்றிருந்த நிலையில், கடைசி ஒருநாள் ஆட்டம் பெங்களூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் இந்திய அணி வெற்றி பெற்று தொடரை வென்றது குறிப்பிடத்தக்கது.