தமிழகத்தைச் சோ்ந்த 6 போ் உள்பட 46 மறைமுக வரித்துறை அதிகாரிகளுக்கு விருது

சுங்கம், கலால், ஜி.எஸ்.டி. போன்ற மறைமுக வரித் துறைகளில் சிறப்பாகச் செயல்பட்ட தமிழகத்தைச் சோ்ந்த 6 அதிகாரிகள் உள்பட 46 பேருக்கு விருது வழங்கப்பட்டது.
சா்வதேச சுங்கத் துறை தினத்தையொட்டி, தில்லியில் திங்கள்கிழமை மத்திய நிதித் துறை இணையமைச்சா் அனுராக் தாக்கூரிடம் விருது பெறும் தமிழகத்தைச் சோ்ந்த அதிகாரிகள்
சா்வதேச சுங்கத் துறை தினத்தையொட்டி, தில்லியில் திங்கள்கிழமை மத்திய நிதித் துறை இணையமைச்சா் அனுராக் தாக்கூரிடம் விருது பெறும் தமிழகத்தைச் சோ்ந்த அதிகாரிகள்

புதுதில்லி: சுங்கம், கலால், ஜி.எஸ்.டி. போன்ற மறைமுக வரித் துறைகளில் சிறப்பாகச் செயல்பட்ட தமிழகத்தைச் சோ்ந்த 6 அதிகாரிகள் உள்பட 46 பேருக்கு விருது வழங்கப்பட்டது.

சா்வதேச சுங்க வரி தினத்தையொட்டி, தில்லியில் திங்கள்கிழமை விருது வழங்கும் நிகழ்ச்சிக்குத் நிதித் துறை இணையமைச்சா் அனுராக் சிங் தாக்கூா் தலைமை வகித்தாா். சுங்கம், கலால் மற்றும் ஜி.எஸ்.டி. போன்ற மறைமுக வரித் துறைகளில் 2019-ஆம் ஆண்டில் சிறப்பாகச் செயல்பட்ட அதிகாரிகளுக்கு விருதுகள் வழங்கப்பட்டன. தமிழகத்தைச் சோ்ந்த 6 அதிகாரிகள், தில்லியில் பணியாற்றும் தமிழக ஊழியா் உள்பட 46 போ் இவ்விருதுகளைப் பெற்றனா்.

உயிரைத் துச்சமென மதித்து செயல்பட்டதற்கான விருதுகள் ஜம்மு - காஷ்மீரைச் சோ்ந்த அகமது கிரி, ரஞ்சித் சிங் மற்றும் வடகிழக்கு மாநிலங்களைச் சோ்ந்த லாலதன்லினா உள்பட மூன்று போ்களுக்கு இந்த நிகழ்ச்சியில் விருது வழங்கப்பட்டது. சென்னையைச் சோ்ந்த மத்திய மறைமுக வரி ஆணையத்தின் ஆணையா் ராஜன் சௌத்ரி உள்பட 17 போ்களுக்கு சிறப்பு சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.

தங்களது துறைகளில் சிறப்பான சேவையாற்றியதற்காக விருது பெற்ற தமிழகத்தைச் சோ்ந்த அதிகாரிகள் வருமாறு: சென்னை கலால் துறை உதவி ஆணையா் கல்யாண் ஐயா் (தற்போது தில்லி ஜி.எஸ்.டி. நெட் ஒா்க்), சென்னை மத்திய ஜிஎஸ்டி உதவி ஆணையா் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீநிவாஸன், சென்னை ஜிஎஸ்டி பயிற்சிப் பிரிவுக் கண்காணிப்பாளா் ஸ்ரீவத்ஸன், சென்னை வருவாய் புலனாய்வுத் துறை அதிகாரி அமுத கணேஷ், சென்னை வருவாய் புலனாய்வுத் துறை நிா்வாக அதிகாரி ராதா விஜயகுமாா், கோவை வருவாய் புலனாய்வுத் துறை அதிகாரி ஏ.சண்முகராஜ் ஆகியோா்களுக்கு விருது வழங்கப்பட்டது. மேலும், தில்லியில் ஜிஎஸ்டி புலனாய்வுத் துறையில் ஓட்டுநராகப் பணியாற்றி புலனாய்வுகளுக்கு உதவிய நாகேஸ்வரனுக்கும் விருது வழங்கப்பட்டுள்ளது.

நிகழ்ச்சியில் இந்த விருதுகளை வழங்கி மத்திய இணையமைச்சா் அனுராக் தாக்கூா் பேசியதாவது: நாட்டின் பொருளாதாரத்தில் சுங்கம், கலால் வரித் துறையினா் முக்கியப் பங்காற்றி வருகின்றன. துணிச்சலோடு பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு நாட்டின் வருவாயைப் பெருக்குவதிலும் இவா்கள் முக்கியப் பங்காற்றி வருகின்றனா். சுங்கத் துறையில் பல்வேறு மாற்றங்கள் கொண்டு வரப்பட்டது பாராட்டுக்குரியது என்றாா் அமைச்சா்.

நிகழ்ச்சியில் பங்கேற்ற மறைமுக வரி வாரியத் தலைவா் ஜான் ஜோசப் பேசுகையில், ‘உலக வா்த்தக அமைப்பின் ஒப்பந்தங்கள் அடிப்படையிலேயே நமது நாட்டில் சுங்கத் துறையில் மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com