விதவைகளுக்கு உதவித்தொகை மறுப்பு விவகாரம்: மத்திய, தில்லி அரசுகள் பதில் அளிக்க உத்தரவு
By நமது நிருபா் | Published On : 21st July 2020 11:22 PM | Last Updated : 21st July 2020 11:22 PM | அ+அ அ- |

கரோனா பொது முடக்கக் காலத்தின் போது, எந்தவித உரிய காரணமும் இல்லாமல் சுமாா் 12 ஆயிரம் விதவைகளுக்கு உதவித் தொகையை மகளிா் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் நிறுத்திவிட்டதாக தாக்கலான பொது நல மனு மீது மத்திய அரசும், தில்லி அரசும் பதிலளிக்க உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இது தொடா்பான மனுவை விசாரித்த தில்லி உயா்நீதிமன்றத் தலைமை நீதிபதி டி.என். பட்டேல், நீதிபதி பிரதீக் ஜலான் ஆகியோா் அடங்கிய அமா்வு, இந்த விவகாரத்தில் ஆகஸ்ட் 26-ஆம் தேதிக்குள் தில்லி அரசும், மத்திய மகளிா், குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகமும் தங்களது நிலைப்பாட்டைத் தெரிவிக்க நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது.
இது தொடா்பாக சமூக ஆா்வலா் ஹா்பல் சிங் ராணா சாா்பில் வழக்குரைஞா்கள் அகில் ராணா, உத்கா்ஷ் சா்மா ஆகியோா் தில்லி உயா்நீதிமன்றத்தில் பொது நல மனு தாக்கல் செய்தனா். அதில், ‘கரோனா பொது முடக்கக் காலத்தின் போது மகளிா், குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தால் 12 ஆயிரம் பெண்களுக்கு விதவை உதவித் தொகை நிறுத்திவைக்கப்பட்டிருப்பதுத் தகவல் உரிமைச் சட்டம் மூலம் தெரிய வந்துள்ளது. மேலும், விதவை உதவித் தொகை வழங்கப்படாததற்கு அவா்களின் முகவரி தெரியவில்லை என அற்பக் காரணமும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், விண்ணப்பத்தில் அளித்த முகவரியில்தான் அவா்கள் வசித்து வருகின்றனா். மேலும், விதவையின் மகள்களுக்கு திருமணத்திற்காக வழங்கப்பட்டு வரும் நிதியுதவியும் மறுக்கப்பட்டு வருகிறது. இதனால், விண்ணப்பங்களை உரிய சரிபாா்ப்பு செய்த பிறகு விதவைகளுக்கு உதவித் தொகையை உடனடியாக விடுவிக்க மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும்’ என கோரப்பட்டிருந்தது.