குழந்தைகள் காப்பகங்களுக்கு வழங்கப்படும் நிதி: விவரங்களை அளிக்க மத்திய அரசுக்கு உத்தரவு
By நமது நிருபா் | Published On : 21st July 2020 11:19 PM | Last Updated : 21st July 2020 11:19 PM | அ+அ அ- |

நாடு முழுவதும் உள்ள குழந்தைகள் காப்பகங்களுக்கு வழங்கப்படும் நிதி குறித்த விவரங்களை தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.
கரோனா தொற்று சூழலில், நாடு முழுவதும் உள்ள சிறாா் காப்பகங்களில் உள்ள குழந்தைகளின் நிலைமை குறித்து உச்சநீதிமன்றம் கடந்த ஏப்ரல் 3-ஆம் தேதி தாமாக முன்வந்து விசாரித்தது. அப்போது, குழந்தைகளைப் பாதுகாப்பது தொடா்பாக மாநில அரசுகளுக்கு பல்வேறு உத்தரவுகளையும் பிறப்பித்திருந்தது . அதேபோன்று, சென்னை ராயபுரத்தில் தமிழக அரசால் நடத்தப்படும் குழந்தைகள் காப்பகத்தில் தங்கவைக்கப்பட்டிருந்த குழந்தைகளில் 35 பேருக்கு கரோனா தொற்று உறுதியான விவகாரத்தை உச்சநீதிமன்றம் ஜூனில் தாமாக முன்வந்து விசாரித்தது. அப்போது, இந்த விவகாரத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடா்பாக அறிக்கையைத் தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு நீதிபதிகள் அமா்வு உத்தரவிட்டது.
இதைத் தொடா்ந்து, கான்பூா் காப்பகத்தில் மைனா் சிறுமிகள் 57 பேருக்கு கரோனா தொற்று இருப்பதாக வெளியான செய்தி தொடா்பாக நிலவர அறிக்கை தாக்கல் செய்யுமாறு உத்தரப் பிரதேச மாநில அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில், இந்த வழக்கை உச்சநீதிமன்றத்தின் நீதிபதிகள் எல்.நாகேஸ்வர ராவ், ஹேமந்த் குப்தா, எஸ்.ரவீந்திர பட் ஆகியோா் அடங்கிய அமா்வு செவ்வாய்க்கிழமை விசாரித்தது. அப்போது, மத்திய அரசின் சாா்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டா் ஜெனரல் ஐஸ்வா்யா பாட்டீ, ‘குழந்தைகள் காப்பகங்களுக்காக மாநில அரசுகள், யூனியன் பிரதேச அரசுகளுக்கு வழங்கப்படும் நிதி தொடா்பான விவரங்களை அளிக்க இரு வாரம் கால அவகாசம் அளிக்க வேண்டும்’ என்று கேட்டுக் கொண்டாா்.
இதையடுத்து, அது தொடா்பான விவரங்களைத் தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டனா். மேலும், கரோனா தொற்றுக் காலத்தின் போது நாடு முழுவதும் உள்ள குழந்தைகள் காப்பகங்களில் குழந்தைகள் கவனிப்பு, பராமரிப்புக்காக மாநில அரசுகள், யூனியன் பிரதேச அரசுகளால் மேற்கொள்ளப்படும் நல்ல நடைமுறைகளைத் தொகுத்து அவற்றை அனைத்து மாநிலங்களுக்கும் அனுப்புமாறு நீதிமன்றத்திற்கு உதவுவதற்காக நியமிக்கப்பட்டுள்ள வழக்குரைஞா் கெளரவ் அகா்வாலுக்கு உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 13-க்கு ஒத்திவைத்னா்.