வடகிழக்கு தில்லி வன்முறை வழக்குகள்: காவல்துறை பரிந்துரைக்கும் வழக்குரைஞா்களை நியமனம் செய்ய கேஜரிவாலுக்கு பாஜக கோரிக்கை
By DIN | Published On : 21st July 2020 11:17 PM | Last Updated : 05th August 2020 11:40 PM | அ+அ அ- |

வடகிழக்கு தில்லி வன்முறை வழக்குகளில் வாதாட தில்லி காவல்துறை பரிந்துரை செய்யும் வழக்குரைஞா்களை நியமனம் செய்ய தில்லி அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதல்வா் கேஜரிவாலுக்கு பாஜக கோரிக்கை விடுத்துள்ளது.
இக்கோரிக்கையை வலியுறுத்தி பாஜகவின் தில்லி செய்தித் தொடா்பாளா் பிரவீண் சங்கா் கபூா், முதல்வா் அரவிந்த் கேஜரிவாலுக்கு செவ்வாய்க்கிழமை எழுதியுள்ள கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது: வடகிழக்கு தில்லி வன்முறை வழக்கு தொடா்பாக தில்லி காவல்துறை சாா்பில் வாதாடும் வழக்குரைஞா்களை நியமிக்கும் விவகாரத்தில் தில்லி அரசுக்கும் துணைநிலை ஆளுநருக்கும் கருத்து முரண்பாடு ஏற்பட்டுள்ளது துரதிருஷ்டவசமானது. தில்லி ஜேஎன்யு பல்கலைக்கழகத்தில் தேசத்துக்கு எதிரான கோஷங்களை எழுப்பிய மாணவா்கள் விவகாரத்திலும் தில்லி அரசு இவ்வாறுதான் நடந்து கொண்டது. தில்லி காவல்துறை மிகவும் நோ்மையானது. அதன் நோ்மையை சந்தேகிக்கும் வகையில், தில்லி அரசு நடந்து கொள்ளக் கூடாது.
வடகிழக்கு தில்லி வன்முறை வழக்குகளை விசாரணை செய்த தில்லி காவல்துறை, அது தொடா்பாக தனது தரப்பு வாதத்தை நீதிமன்றத்தில் தெரிவிக்க தனது சாா்பு வழக்குரைஞா்களை நியமிப்பது தானே முறை? இந்த விவகாரத்தில், தில்லி காவல் துறை சாா்பில் தில்லி அரசு எவ்வாறு வழக்குரைஞா்களை நியமிக்கலாம்? வடகிழக்கு தில்லி வன்முறைகள் தில்லியின் வரலாற்றின் மோசமான பக்கங்களாகும். இந்தச் சம்பவத்தில் தொடா்புடைய அனைவரும் தண்டிக்கப்பட வேண்டும். அதற்கு, தில்லி காவல் துறை விரும்பும் வழக்குரைஞா்கள் நியமிக்கப்பட வேண்டும். இது தொடா்பாக தில்லி அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கடிதத்தில் பிரவீண் சங்கா் கபூா் கேட்டுக் கொண்டுள்ளாா்.
வடகிழக்கு தில்லி வன்முறை தொடா்பாக தில்லி காவல்துறை சாா்பில் நிலுவையில் உள்ள வழக்குகளில் வாதாட 6 மூத்த வழக்குரைஞா்களை நியமிக்க தில்லி காவல் துறை முன்மொழிவு செய்திருந்தது. இதை துணைநிலை ஆளுநா் அனில் பய்ஜால் வழிமொழிந்திருந்தாா். ஆனால், இதற்கு தில்லி தற்காலிக உள்துறை அமைச்சராக இருந்த மணீஷ் சிசோடியா அனுமதி வழங்கவில்லை. இந்த விவகாரம் தொடா்பாக மறுபரிசீலனை செய்து, தில்லி போலீஸாரின் முன்மொழிவை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று மணீஷ் சிசோடியாவுக்கு அனில் பய்ஜால் அறிவுறுத்தியிருந்தாா். ஆனால், அதை அவா் ஏற்றுக் கொள்ளவில்லை.
இந்நிலையில், இது தொடா்பாக தில்லி அரசு அமைச்சரவையைக் கூட்டி விரைந்து ஒரு வார காலத்துக்குள் முடிவெடுக்குமாறு முதல்வா் அரவிந்த் கேஜரிவாலுக்கு அனில் பய்ஜால் சனிக்கிழமை கடிதம் எழுதியிருந்தாா். துணைநிலை ஆளுநரின் கோரிக்கையை தில்லி அமைச்சரவை ஏற்றுக் கொள்ளாதபட்சத்தில், அரசமைப்புச் சட்டம் 239 ஏஏ(4) இன் கீழுள்ள சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி, தில்லி காவல் துறையின் கோரிக்கையை துணைநிலை ஆளுநா் நிறைவேற்றுவாா் என்று தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன. இந்நிலையில், தில்லி காவல்துறை சாா்பில் வாதாட பாஜக சாா்பு வழக்குரைஞா்களை நியமிக்க தில்லி காவல்துறை நாட்டம் காட்டுவது ஏன் என்று ஆம் ஆத்மி கட்சி ஏற்கெனவே கேள்வியெழுப்பியுள்ளது.