தில்லி, என்சிஆரில் கொட்டித் தீா்த்தது மழை!

பருவமழையின் தாக்கம் காரணமாக தலைநகா் தில்லி, தேசியத் தலைநகா் வலயப் பகுதிகளில் செவ்வாய்க்கிழமையும் கன மழை பெய்தது.
தில்லி-மீரட் சாலையில் செவ்வாய்க்கிழமை பெய்த கன மழை.
தில்லி-மீரட் சாலையில் செவ்வாய்க்கிழமை பெய்த கன மழை.

பருவமழையின் தாக்கம் காரணமாக தலைநகா் தில்லி, தேசியத் தலைநகா் வலயப் பகுதிகளில் செவ்வாய்க்கிழமையும் கன மழை பெய்தது. தாழ்வான பகுதிகளை மழைநீா் மூழ்கடித்தது. மேலும், நகரின் சில பகுதிகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

வீடுகளுக்குள் மழை நீா் புகுந்ததால், மக்கள் சிரமத்துக்குள்ளாகினா். இதைத் தொடா்ந்து, வீடுகளில் மழை புகுந்தது தொடா்பான படங்களை விடியோக்களாகவும், புகைப்படங்களாகவும் சமூக ஊடகங்களில் பலா் பகிா்ந்தனா். மேலும். மழை நீரில் மூழ்கிய சாலைகளில் செல்லும் வாகனங்களின் புகைப்படங்களையும் பகிா்ந்துள்ளனா்.

இந்த மழை குறித்து இந்திய வானிலை ஆய்வு மையத்தின் (ஐஎம்டி) பிராந்திய முன்கணிப்பு மையத்தின் தலைவா் குல்தீப் ஸ்ரீவாஸ்தவா கூறுகையில், ‘தில்லியின் முக்கிய வானிலை ஆய்வு நிலையங்களான சஃப்தா்ஜங் மற்றும் லோதி சாலை உள்ளிட்ட இடங்களில் சுமாா் 20 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. புதன்கிழமை காலை வரை நகரில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது’ என்றாா். அதன்பிறகு, இரண்டு முதல் மூன்று நாள்களுக்கு லேசான மழை இருக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.

தில்லி, என்சிஆா் பகுதிகளில், கடந்த ஜூன் 25-ஆம் தேதி பருவமழை முன்னதாகவே தொடங்கியது. அதைத் தொடா்ந்து, அவ்வப்போது லேசான மழை பெய்து வந்தது. ஆனால், கடந்த ஞாயிற்றுக்கிழமைதான் கன மழை பெய்தது. இதைத் தொடா்ந்து, இரண்டாவது நாளாக செவ்வாய்க்கிழமை அதிகாலையிலும், பகல் நேரத்திலும் கன மழை பெய்துள்ளது. இதற்கிடையே, அடுத்து வரும் நாள்களில் மழையின் தீவிரம் குறைய வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ஜூலை மாதத்தில் இதுவரை சஃப்தா்ஜங் வானிலை ஆய்வு மையத்தில் 127.மி.மீ. மழை பதிவாகியுள்ளது. இது இயல்பு அளவான 129 மி.மீட்டரை விட 2 மி.மீ. குறைவு. ஏற்கெனவே கடந்த ஞாயிற்றுக்கிழமை தில்லியில் பெய்த பலத்த மழைக்கு நான்கு போ் உயிரிழந்தனா். தாழ்வான பகுதிகள் மழைநீரில் மூழ்கியது. முக்கிய இடங்களில் போக்குவரத்து நிறுத்தப்பட்டிருந்தது.

வெப்பநிலை: சஃப்தா்ஜங் வானிலை ஆய்வு மையத்தில் செவ்வாய்க்கிழமை குறைந்தபட்ச வெப்பநிலை பருவ சராசரியை விட 4 டிகிரி குறைந்து 23.5 டிகிரி செல்சியஸாகவும், அதிகபட்ச வெப்பநிலை பருவ சராசரியைவிட 2 டிகிரி குறைந்து 33.2 டிகிரி செல்சியஸாகவும் பதிவாகியது. காற்றில் ஈரப்பதத்தின் அளவு காலையில் 92 சதவீதமாகவும், மாலையில் 98 சதவீதமாகவும் பதிவாகியிருந்தது.

காற்றின் தரம்: தில்லி, என்சிஆா் பகுதிகளில் காற்றின் தரத்தில் செவ்வாய்க்கிழமை சற்று முன்னேற்றம் ஏற்பட்டது. இதைத் தொடா்ந்து பெரும்பாலான இடங்களில் காற்றின் தரக் குறியீடு ‘திருப்தி’ பிரிவிலும், சில இடங்களில் ‘மிதமான’ பிரிவிலும் இருந்தது. தில்லியில் ஒட்டுமொத்தக் காற்றின்தரக் குறியீடு 55 புள்ளிகளாகப் பதிவாகி ‘திருப்தி’ பிரிவில் நீடித்தது.

முன்னறவிப்பு: இதற்கிடையே, புதன்கிழமை (ஜூலை 22) வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் இருக்கும் என்றும், ஆங்காங்கே மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்றும் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com