கரோனா: பணியாளர்கள் மீதான விதிமீறல் அபராதத்தை தள்ளுபடி செய்ய நீதிமன்றம் மறுப்பு
By DIN | Published On : 16th June 2020 12:36 AM | Last Updated : 16th June 2020 12:36 AM | அ+அ அ- |

புது தில்லி: பொது முடக்கத்தின் இரு கட்டங்களின் போது, சுகாதாரப் பணியாளர்கள் உள்பட கரோனாவுக்கு எதிரான பணியில் ஈடுபட்ட அனைத்துப் பணியாளர்களுக்கும் போக்குவரத்து விதிமீறலுக்காக விதிக்கப்பட்ட அபராதத்தைத் தள்ளுபடி செய்யுமாறு மருத்துவர்கள் சங்கம் தாக்கல் செய்த மனுவை விசாரணைக்கு ஏற்க தில்லி உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது.
இந்த விவகாரம் தில்லி உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி டி.என். பட்டேல் , நீதிபதி பிரதீக் ஜலான் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, போக்குவரத்து விதி மீறலில் ஈடுபடும் நபருக்கு அது தொடர்பான தகவலை உடனே தெரிவிக்குமாறு போலீஸாருக்கும், வேகக் கட்டுப்பாடு குறித்த தகவல் பலகைகளை காட்சிப்படுத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்குவது தொடர்பான கோரிக்கையை போக்குவரத்து போலீஸாரிடம் தெரிவிக்குமாறும் மருத்துவர் சங்கத்தை நீதிபதிகள் அமர்வு கேட்டுக் கொண்டதாக தில்லி அரசின் வழக்குரைஞர் சந்தோஷ் திரிபாதி தெரிவித்தார்.
மேலும், அவர் கூறுகையில், "இந்த விவகாரம் குறித்து கோரிக்கை வைக்கப்படும் போது, சம்பந்தப்பட்ட துறையினர் சட்ட விதிகளுக்கு ஏற்ப முடிவு செய்வார்கள் என்றும், முடிந்தவரை விரைவில் இதற்கான நடவடிக்கை எடுப்பார்கள் என்றும் தெரிவித்து மனுவை நீதிமன்றம் முடித்துவைத்தது' என்றார்.
முன்னதாக, தில்லி மருத்துவ சங்கத்தின் மாவட்ட கிளை தில்லி உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், "பொது முடக்கத்தின் முதல், இரண்டாவது கட்டத்தின் போது அனைத்துப் போக்குவரத்து சமிக்ஞைகளும் செயல்படவில்லை. இதை போக்குவரத்து விதிமீறலாக கருதக் கூடாது. மேலும், மின்னணு கண்காணிப்பு அடிப்படையில் மட்டுமே மின்னணு அபராத நோட்டீஸ் அனுப்பப்படுகிறது. அத்தியாவசிய சேவை அளிக்கும் நபர்களை குறிவைத்தே அபராதம் விதிக்கப்படுகிறது.
எனவே, அபராதத்தைத் தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும் வேகக் கட்டுப்பாடு தகவல்கள் பலகைகளைக் காட்சிப்படுத்தும் விவகாரத்தில் விரிவான வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்க உத்தரவிட வேண்டும்' என தெரிவிக்கப்பட்டிருந்தது.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...