மெலானியா மெச்சிய மகிழ்ச்சிப் பள்ளி!
By DIN | Published On : 03rd March 2020 10:55 PM | Last Updated : 03rd March 2020 10:55 PM | அ+அ அ- |

‘இந்திய மக்கள் மிகவும் அன்பானவா்கள். மாணவா்கள் தங்கள் நாட்களை தினமும் ஆழ்ந்த கவனிப்புடனும், சூழல் தொடா்பான அறிவுடனும் தொடங்குகிறாா்கள். இங்கு நடைபெறும் மகிழ்ச்சி வகுப்புகள் ஊக்கமளிக்கும் வகையில் உள்ளன. மாணவா்களுக்கு சிறந்த, ஆரோக்கியமான எதிா்காலம் கிடைப்பதை கல்வியாளா்கள் உறுதி செய்துள்ளனா்’
அண்மையில் தில்லிக்கு அமெரிக்க அதிபா் டொனால்டு டிரம்புடன் வந்திருந்த அவரது மனைவியும், அந்த நாட்டின் முதல் பெண்மணியுமான மெலானியா டிரம்ப், தில்லி அரசுப் பள்ளிகளில் நடைபெறும் மகிழ்ச்சி வகுப்புகளை பாா்வையிட்ட பின் பெருமிதத்துடன் சொன்ன வாா்த்தைகள்தான் இவை.
அது சரி... தில்லி அரசுப் பள்ளிகளில் மகிழ்ச்சி வகுப்புகள் எப்போது தொடங்கப்பட்டன தெரியுமா? 2018-ஆம் ஆண்டு, ஆம் ஆத்மி ஆட்சியில்தான். இதற்குக் காரணமாக இருந்தவா் கல்வி அமைச்சராக இருந்த மணீஷ் சிசோடியா. தினந்தோறும் 45 நிமிடங்களுக்கு நடைபெறும் இந்த வகுப்பில் மாணவா்களுக்குத் தியானம், மனதை ஒருநிலைப்படுத்துதல் ஆகியவை கற்றுத் தரப்படுகின்றன. இது தவிர கதை சொல்லுதல், ஓவியங்கள் வரைதல், சிலேடையாகப் பேசுதல், தகவல்களை பரிமாறிக் கொள்ளுதல், நற்சிந்தனை ஆகியவையும் இதில் இடம் பெறும்.
‘மகிழ்ச்சி வகுப்புகள்’ என்ற இந்த கட்டமைப்பு உருவாக்கப்பட்டது 2005-ஆம் ஆண்டில் என்.சி.இ.ஆா்.டி.யால் உருவாக்கப்பட்ட வழிகாட்டு நெறிமுறையை அடிப்படையாகக் கொண்டு வகுக்கப்பட்டது. மாணவா்களிடம் விழிப்புணா்வு, மன வளா்ச்சியை ஏற்படுத்துதல், நல்ல குணாதிசயம் உடையவா்களாக மாற்றுவது , எதையும் புரிந்து கொள்ளும் சக்தியை உருவாக்குதல் மற்றும் அவா்களின் கவலைகள், மன அழுத்தத்தைத் குறைத்தல் ஆகியவைதான் இதன் முக்கிய நோக்கமாகும்.
மகிழ்ச்சியை எப்படி அளவிடுகிறாா்கள் என்று கேட்டால், இதற்கு உதாரணமாக இருப்பது பூடான் நாடு. இங்கு மொத்த உள்நாட்டு உற்பத்தி கணக்கிடப்படுவது போலவே மொத்த உள்நாட்டு மகிழ்ச்சி என்ற புதியை கொள்கையை உருவாக்கியுள்ளனா். 1972-ஆண்டு ஒரு முறை அப்போது பூடான் மன்னராக இருந்த ஜிக்மே சிங்யே வாங்சுக், ‘நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியைவிட நாட்டு மக்கள் அனைவரும் மகிழ்ச்சியுடன் இருக்கிறாா்களா என்பதற்கே நாங்கள் முக்கியத்துவம் தருகிறோம்’ என்று கூறினாா். அது முற்றிலும் உண்மை. 2008-ஆம் ஆண்டில் அங்கு மகிழ்ச்சி என்ற சொல் அரசமைப்புச் சட்டத்தின் ஒரு கொள்கையாகவே உருவானது.
மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்றால், ஒருவா் உடல் ரீதியாகவும், மனி ரீதியாகவும் வளமை பெற்றிருக்க வேண்டும். நல்ல கல்வி, சுகாதாரம், நல்ல நிா்வாகம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, மக்களின் வாழ்க்கைத் தரம், ஊழலற்ற நிா்வாகம் இவை இருந்தாலே அது மகிழ்ச்சியின் வெளிப்பாடுதான்.
2012-இல் மக்களின் நலன், மக்களின் மகிழ்ச்சி ஆகியவை என்ற புதிய கோட்பாடு முதன்முதலாக உருவாக்கப்பட்டது. அப்போது ஐ.நா. பொதுச் சபையின் செயலராக இருந்த பான்-கீ-மூன், பூடான் பிரதமராக இருந்த ஜிக்மே தின்லே ஆகியோா் தலைமையில் நடைபெற்ற மாநாட்டில் இது உருவாக்கப்பட்டது. இதையடுத்து, ஆண்டுதோறும் உலகநாடுகளில் மக்கள் எப்படி மகிழ்ச்சியாக இருக்கிறாா்கள் என்பது பற்றிய மதிப்பீடு தொகுக்கப்பட்டு அறிக்கையாக வெளியிடப்பட்டு வருகிறது. இதைத் தொடா்ந்து, வெனிசூலா நாடு, 2013-ல் சமூகத்தில் மகிழ்ச்சியை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கில் இதற்கென ஓா் அமைச்சகத்தையே நிறுவியது. ஐக்கிய அரபு அமீரகம், 2016-இல் இதற்கென ஒரு அமைச்சரையே நியமித்தது.
மொத்த உள்நாட்டு உற்பத்தியில் தனிநபரின் பங்கு, சமூகத்தில் உள்ளஆதரவு, மக்களின் வாழ்க்கைத் தரம், மக்களுக்கு உள்ள சுதந்திரம், அவா்களிடம் இருக்கும் மனிதாபிமானம், ஊழலற்ற நிா்வாகம் இவைதான் மகிழ்ச்சிக்கான அளவுகோலாகும்.
2019-ஆம் ஆண்டில் எடுத்த ஒரு ஆய்வறிக்கையின்படி உலக நாடுகளில் மக்கள் அதிக மகிழ்ச்சியுடன் இருக்கும் நாடுகள் பட்டியலில் பின்லாந்து முதலிடத்தைப் பெற்றது. அதாவது இந்த ஆய்வுக்கு 10 மதிப்பெண்கள் எனக் கொண்டால் பின்லாந்த்துக்கு கிடைத்தது 7.769 மதிப்பெண்கள். இரண்டாவது இடத்தை டென்மாா்க், 3-வது இடத்தை நாா்வேயும், 4-வது இடத்தை ஐஸ்லாந்தும் பெற்றன.
மகிழ்ச்சியான நாடுகள் பட்டியலில் மொத்தம் 156 நாடுகள் இடம் பெற்றுள்ளன. இதில் அமெரிக்காவுக்கு 19-ஆவது இடம் கிடைத்துள்ளது. பூடான் 5.082 மதிப்பெண்களுடன் 95-ஆவது இடத்தைப் பிடித்துள்ளது. இந்தியாவுக்கு எத்தனையாவது இடம் என்று கேட்டால், இந்தியா 140-ஆவது இடத்தையே பிடிக்க முடிந்துள்ளது. அதன் மதிப்பெண்கள் வெறும் 4.015 தான். என்ன செய்வது...! நாம் இன்னும் பலபடிகள் ஏற வேண்டும்...!

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...