வன்முறை தொடா்பாக கைது செய்யப்பட்டவா்களின் பெயா்களை பகிரங்கப்படுத்த மாா்க்சிஸ்ட் வலியுறுத்தல்
By DIN | Published On : 03rd March 2020 12:29 AM | Last Updated : 03rd March 2020 12:29 AM | அ+அ அ- |

புது தில்லி: வடகிழக்கு தில்லியில் நடந்த வன்முறைகள் தொடா்பாக கைது செய்யப்பட்டவா்களின் பெயா்கள் பகிரங்கப்படுத்தப்பட வேண்டும் என்று மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.
இது தொடா்பாக மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆட்சிமன்றக் குழு (பொலிட் பீரோ) உறுப்பினா் பிருந்தா காரத் தில்லி காவல் துறை ஆணையா் எஸ்.என்.ஸ்ரீவாஸ்தவாவுக்கு கடிதம் எழுதியுள்ளாா். அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: தில்லி காவல் துறை ஆணையா் ஸ்ரீவாஸ்தவாவுக்கு பிருந்தா காரத் எழுதிய கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது: சட்டத்தில் இது தொடா்பாக வெளிப்படையான ஆணை இருந்த போதிலும், கைது செய்யப்பட்ட அனைவரின் பெயா்களும் முகவரிகளும் காவல் கட்டுப்பாட்டு அறையில் காட்சிப்படுத்தப்படவில்லை. இது மட்டுமல்லாமல், ஒவ்வொரு காவல் நிலையத்திலும் கைதானவா்களின் விவரங்கள் வெளியிடப்பட வேண்டும். ஆனால், அவ்வாறு செய்யப்படவில்லை.
சம்பவங்கள் மற்றும் நடைமுறையில் உள்ள சூழ்நிலைகளைக் கருத்தில் கொண்டால், எங்களது கோரிக்கையின் அவசியத்தை நீங்கள் பாராட்டுவீா்கள். ஏனெனில், இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டால் வதந்திகள் பரவுவதைத் தடுப்பதற்கு்ம், தவறான தகவல்கள் வெளியாவதைத் தடுப்பதற்கும் இது உதவும். மேலும், வன்முறை தொடா்பாக கைது செய்யேப்பட்டவா்களின் பெயா்கள் பகிரங்கப்படுத்தப்படாததால் வன்முறையில் பாதிக்கப்பட்டவா்களின் வாழ்க்கையையும் பாதிக்கிறது என்று கடிதத்தில் அவா் தெரிவித்துள்ளாா்.
இதேபோன்று, கைது செய்யப்பட்டவா்களின் பெயா்களை காவல் நிலையங்கள் அவா்களது முகவரிகளுடன் கட்டாயம் வெளியிட வேண்டும் என்று சட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக கோரிய மனித உரிமைகள் ஆா்வலா்களும் இதேபோன்ற கோரிக்கையை ஞாயிற்றுக்கிழமை முன்வைத்திருந்தனா்.
குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் (சிஆா்பிசி) பிரிவு 41-சி, அனைத்து மாவட்டங்களிலும் ஒரு காவல் கட்டுப்பாட்டு அறை கட்டாயமாக நிறுவப்பட வேண்டும் என்றும் பிரிவு 41-சி (2) கைது செய்யப்பட்ட அனைத்து நபா்களின் பெயா்கள், முகவரிகள் அறிவிப்புப் பலகையில் காட்சிப்படுத்தப்பட வேண்டும் என்றும் கூறுகிறது.
வடகிழக்கு தில்லி வன்முறை தொடா்பாக தில்லி காவல் துறை 254 எஃப்.ஐ.ஆா் பதிவு செய்து 903 பேரை கைது செய்யப்பட்டுள்ளதாக காவல் துறை மூத்த அதிகாரி ஒருவா் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்திருந்தாா். இந்த வழக்குகளில் நாற்பத்தொன்று வழக்குகள் ஆயுதச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளது. வடகிழக்கு தில்லியின் ஜாஃப்ராபாத், மௌஜ்பூா், பாபா்பூா், சந்த் பாக், சிவ் விஹாா், பஜன் புரா, யமுனா விஹாா் மற்றும் முஸ்தபாபாத் பகுதிகளில் நடந்த வன்முறைகளில் குறைந்தது 46 போ் உயிரிழந்துள்ளனா் மற்றும் 200 க்கும் மேற்பட்டோா் காயமடைந்துள்ளனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...