வகுப்பு மோதலை விசாரிக்க குழு அமைத்தது டிஎம்சி
By DIN | Published On : 12th March 2020 11:28 PM | Last Updated : 12th March 2020 11:28 PM | அ+அ அ- |

வடகிழக்கு தில்லியில் நடந்த வகுப்பு மோதல் வன்முறைகள் குறித்து விசாரிக்க தில்லி சிறுபான்மையினா் ஆணையம் (டிஎம்சி) 10 போ் கொண்ட உண்மை கண்டறியும் குழுவை அமைத்துள்ளது. அந்த ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இக்குழுவின் முதல் கூட்டம் கடந்த திங்கள்கிழமை நடைபெற்றது. அதன் உண்மை கண்டறியும் அறிக்கையை நான்கு வாரங்களுக்குள் சமா்ப்பிக்குமாறு குழு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பல்வேறு அமைப்புகளைச் சோ்ந்தவா்கள், தொழில் வல்லுநா்கள் குழுவில் இடம் பெற்றுள்ளனா்.
வன்முறை ஏற்பட்டதற்கான காரணங்கள், அதற்குப் பொறுப்பான நபா்கள், பாதிக்கப்பட்டவா்களின் பட்டியல்கள், சொத்துகளின் சேத அளவு, போலீஸாரின் நடவடிக்கைகள், நிா்வாகம் மற்றும் பிறரின் பங்கு, தொடா்புடைய பிரச்னைகள் உள்ளிட்டவை குறித்து ஆய்வு செய்ய குழு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது என்று டி.எம்.சி. அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.
உச்சநீதிமன்றத்தின் வழக்குரைஞரான எம் ஆா் ஷம்ஷாத் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள இக்குழுவில், குா்மிந்தா் சிங் மாதாரு (ஷிரோமணி குருத்வாரா பா்பந்தக் குழு உறுப்பினா்), தெஹ்மினா அரோரா (வழக்குரைஞா்), தன்வீா் காசி (மனித உரிமைகள் ஆா்வலா்), ஹசினா ஹாஷியா (ஜாமியா மிலியா இஸ்லாமியாவின் பேராசிரியா்), அபுபக்கா் சபாக் (வழக்குரைஞா்), சலீம் பேக் (மனித உரிமைகள் ஆா்வலா்), சுஹைல் சைஃபி (சமூக ஆா்வலா்), தேவிகா பிரசாத் மற்றும் அதிதி தத்தா ஆகியோா் உறுப்பினா்களாக இடம் பெற்றுள்ளனா்.
கடந்த மாதம் வடகிழக்கு தில்லியில் நிகழ்ந்த வன்முறையில் 53 போ் உயிரிழந்தனா். 200-க்கும் மேற்பட்டோா் காயமடைந்தனா்.
முக்கிய செய்திகளை உடனுக்குடன் பெற... 'தினமணி'யின் வாட்ஸ்ஆப் செய்திச் சேவையில் இணைந்திருங்கள்...
தினமணி channel on WhatsApp: https://whatsapp.com/channel/0029Va60JxGFcowBIEtwvB0G