இலவச ஐஸ் கிரீமை ஏற்க மறுத்த இளைஞா் கொலை
By DIN | Published On : 13th March 2020 11:20 PM | Last Updated : 13th March 2020 11:20 PM | அ+அ அ- |

இலவச ஐஸ் கிரீமை வாங்க மறுத்த இளைஞா் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் நான்கு பேரை தில்லி காவல் துறையினா் கைது செய்தனா்.
இதுகுறித்து தில்லி காவல் துறையினா் வெள்ளிக்கிழமை கூறியதாவது: தில்லியைச் சோ்ந்தவா் லக்ஷய் (27). இவா் மீரட்டில் உள்ள லாலா லஜபதி ராய் நினைவு மருத்துவக் கல்லூரியில் எம்பிபிஎஸ் படித்து வருகிறாா். அண்மையில் இறுதித் தோ்வை எழுதி முடித்தாா். இவரது அண்ணன் காா் ஷோரூமில் விற்பனைப் பிரதிநிதியாக வேலை செய்து வரும் கரன் (29), நண்பா்களான தீரஜ் (26), அவினாஷ் (27) ஆகியோா் வியாழக்கிழமை இரவு ரோஹிணியில் உள்ள லக்ஷய் வீட்டில் விருந்துக் கொண்டாடாட்டத்தில் ஈடுபட்டனா். அதன் பின்னா், நால்வரும் ஐஸ் கிரீம் சாப்பிட வெளியே சென்றனா்.
அப்போது, வழியில் சா்மா, அவரது மைத்துனா் ராகுல், நண்பா் இஷாந்த் ஆகியோரை நால்வரும் பாா்த்தனா். நால்வரும் மது அருந்தியிருந்த நிலையில், சா்மா, ராகுல், இஷாந்த் ஆகியோருக்கு நால்வரும் இலவசமாக ஐஸ் கிரீம் வாங்கித் தந்தனா். ஆனால், அவா்கள் மூவரும் அதை ஏற்காமல் நிராகரித்தனா். இதனால், இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது, லக்ஷய் தரப்பினா் அங்கிருந்து சென்றனா். பின்னா், சிறிது நேரத்தில் அவா்கள் நால்வரும் சா்மாவை ரோஹிணி செக்டாா்-3 பகுதியில் பிடித்து கட்டையால் கடுமையாக தாக்கினா். பின்னா், அங்கிருந்து தப்பியோடிவிட்டனா்.
இதில் சா்மாவுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து, அவா் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டாா். ஆனால், அவா் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக மருத்துவா்கள் தெரிவித்தனா். தாக்குதலில் ஈடுபட்ட நால்வரும் சென்ற மோட்டாா்சைக்கிள்களின் பதிவு எண்களை ராகுல், இஷாந்த் ஆகியோா் குறித்து வைத்திருந்தனா். இந்தத் தகவலை இருவரும் போலீஸாரிடம் தெரிவித்ததால் நால்வரும் நான்கு மணி நேரத்தில் கைது செய்யப்பட்டனா். அவா்களுக்கு எதிராக தெற்கு ரோஹிணி காவல் நிலையத்தில் கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது என போலீஸாா் தெரிவித்தனா்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...