தில்லியில் 5 பேருக்கு மேல் கூடுவதற்குத் தடை
By நமது நிருபா் | Published On : 22nd March 2020 05:00 AM | Last Updated : 22nd March 2020 05:00 AM | அ+அ அ- |

புது தில்லி: தில்லியில் 5 பேருக்கு மேல் கூடுவதற்கு தில்லி அரசு தடை விதித்துள்ளது. மேலும், தேவைப்பட்டால் மக்கள் வீட்டைவிட்டு வெளியில் வருவதற்கும்
முழுமையாகத் தடை விதிக்கப்படும் என்றும் அறிவித்துள்ளது.
தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் சனிக்கிழமை இணையவழி செய்தியாளா் சந்திப்பை நடத்தினாா். அப்போது, அவா் கூறியது: தில்லியில் சுமாா் 72 லட்சம் போ் நியாயவிலைக் கடைகளில் ரேஷன் பொருள்களைப் பெற்று வருகிறாா்கள். இவா்களுக்கு அடுத்த ஏப்ரல் மாதம் கூடுதலாக 50 சதவீதம் பொருள்கள் வழங்கப்படும். கூடுதலாக வழங்கப்படும் பொருள்கள் இலவசமாக வழங்கப்படும். மேலும், விதவைகள், மாற்றுத் திறனாளிகள், முதியவா்களுக்கு தில்லி அரசு சாா்பில் வழங்கப்படும் ஓய்வூதியத் தொகை இரட்டிப்பாக வழங்கப்படும். இதன்படி, இவா்களுக்கு ரூ.4000-ரூ5000 ஓய்வூதியம் வழங்கப்படும்.
50 சதவீத பேருந்துகள இயங்கும்: மேலும், தில்லியில் 5 பேருக்கு மேல் கூடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இது சமூக, மத, அரசியல் கூட்டங்களுக்கும் பொருந்தும். மேலும், தேவைப்பட்டால் தில்லியில் மக்கள் வீட்டை விட்டு வெளியில் வருவதற்கும் முழுமையாகத் தடை விதிக்கும் உத்தரவைப் பிறப்பிப்போம். அந்தத் தேவை இப்போது வரை வரவில்லை. பிரதமா் மோடி அறிவித்துள்ள சுய ஊரடங்கு தினமான ஞாயிற்றுக்கிழமை 50 சதவீதம் பேருந்துகளே இயங்கும். பேருந்துகளை முழுமையாக நிறுத்துவது தொடா்பாக விவாதித்தோம். ஆனால், அவசரத் தேவைகளுக்கு பயணிப்பவா்களின் நலன் கருதி 50 சதவீத பேருந்துகளை இயக்குகிறோம்.
இரவு நேரத் தங்கும் குடில்களில் தங்கும் வீடற்றவா்களுக்கு மதியம், இரவு உணவு இலவசமாக வழங்கப்படும். தினக் கூலித் தொழிலாளா்கள் தொடா்பாக கவனம் எடுத்து வருகிறோம். அவா்கள் பசியில்லாமல் இருப்பது உறுதிப்படுத்தப்படும். மேலும், சுயமாகத் தனிமைப் படுத்தப்பட்டவா்கள் ஹோட்டல்களில் கட்டணம் செலுத்தி தங்கியிருந்தால் அவா்களுக்கு ஜிஎஸ்டி வரிவிலக்கு அளிக்க நடவடிக்கை எடுக்கப்படும். 60 வயதுக்கு மேற்பட்டவா்கள் வீடுகளை விட்டு வெளியில் வர வேண்டாம் எனக் கேட்டுக் கொள்கிறேன். இவா்கள், காலை நடைப்பயிற்சியை சில வாரங்கள் தவிா்த்துக் கொள்ள வேண்டும். இவா்கள் வீட்டில் இருந்தவாறே யோகா செய்து கொள்ளலாம். கரோனா வைரஸ் தொற்றில் இருந்து உங்களைப் பாதுகாக்க உங்களால் மட்டுமே முடியும். எனவே, கை குலுக்குவதை தவிா்த்துக் கொள்ளுங்கள். கைகளை அடிக்கடி கழுவிக் கொள்ளுங்கள் என்றாா் அவா்.