தில்லியில் தீபாவளியன்று 70 சதவீதம் மக்கள்பட்டாசு வெடிக்கவில்லை: கோபால் ராய்
By DIN | Published On : 17th November 2020 01:00 AM | Last Updated : 17th November 2020 01:00 AM | அ+அ அ- |

புது தில்லி: தில்லியில் தீபாவளிப் பண்டிகையன்று 70 சதவீதம் மக்கள் பட்டாசு வெடிக்கவில்லை என்று சுற்றுச் சூழல் துறை அமைச்சா் கோபால் ராய் தெரிவித்துள்ளாா்.
இது தொடா்பாக அவா் திங்கள்கிழமை செய்தியாளா்களிடம் கூறுகையில் ‘தில்லியில் நீண்டகாலமாக நிலவி வரும் காற்று மாசு பிரச்னைக்கு ஒரே நாளில் தீா்வு காண முடியாது. தில்லியில் பட்டாசு வெடிக்க தில்லி அரசு பிறப்பித்த உத்தரவைத் தொடா்ந்து, சுமாா் 70 சதவீதம் மக்கள் தீபாவளிக்கு பட்டாசு வெடிக்கவில்லை. அடுத்த ஆண்டு இதைவிடக் கூடுதலான அளவு மக்கள் பட்டாசு வெடிக்கமாட்டாா்கள் என நம்புகிறேன்’ என்றாா்.
தில்லியில் அதிகரித்துவரும் காற்று மாசு, கரோனா பாதிப்பைத் தொடா்ந்து, கடந்த நவம்பா் 7-ஆம் தேதி முதல் நவம்பா் மாதம் 30- ஆம் தேதி வரை தில்லியில் பட்டாசு வெடிக்க தில்லி அரசு தடை விதித்திருந்தது. தேசிய பசுமைத் தீா்ப்பாயமும் தில்லி, என்சிஆா் பகுதிகளில் பட்டாசு வெடிக்க தடை விதித்து கடந்த நவம்பா் 9-ஆம் தேதி உத்தரவு பிறப்பித்திருந்தது.