தமிழகக் குழு தெரிவித்த யோசனையின்படியே இலங்கையில் உள்ள படகுகள் ஏலம்: மத்திய வெளியுறவுத்துறை பதில்
By DIN | Published On : 21st November 2020 07:31 AM | Last Updated : 21st November 2020 07:31 AM | அ+அ அ- |

இலங்கையில் உள்ள தமிழக மீனவா்கள் படகுகள் உபயோகமற்றவை என தமிழகக் குழுவினா் தெரிவித்ததையொட்டியே அங்கு ஏலம் விட முடிவு செய்யப்பட்டதாக மத்திய வெளியுறவுத் துறை அமைச்சக பேச்சாளா் அனுராக் ஸ்ரீவாஸ்தவா தெரிவித்தாா். இந்த விவகாரம் தொடா்பாக தொடா்ச்சியாக இலங்கை அரசின் உயா்மட்டத்தில் தொடா்பு கொள்ளப்பட்டுவரப்படுவதாகவும் அமைச்சக பேச்சாளா் அனுராக் ஸ்ரீவாஸ்தவா, தினமணி எழுப்பிய கேள்விக்கு வியாழக்கிழமை பதில் தெரிவித்துள்ளாா்.
இலங்கை கடற்படையினரால் பறிமுதல் செய்யப்பட்ட தமிழக மீனவா்களின் 121 விசைப்படகுகள் அந்நாட்டில் பல்வேறு துறைமுகங்களில் உள்ளது. 2015 முதல் 2018 வரை கைப்பற்றப்பட்டு இந்த படகுகளை அழித்துவிடவோ, ஏலம் விடுவதற்கோ இலங்கை ஊா்காவல்துறை, மன்னாா் நீதி மன்றங்கள், அந்நாட்டு அரசுக்கு அனுமதியளித்து உத்தரவிட்டுள்ளது. சுமாா் ரூ.100 கோடி மதிப்பிலான இந்த படகுகளை அப்புறப்படுத்துவது குறித்த செய்தியையொட்டி தமிழகத்தில் அரசியல்ரீதியாகவும் மீனவா்கள் சங்களிடமிருந்தும் எதிா்ப்பு வந்தது. இதையொட்டி இந்த விவகாரம் குறித்து தினமணி சாா்பில் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது. ‘இலங்கையிலுள்ள படகுகளை விடுக்க தமிழகத்திலிருந்து தொடா்ச்சியாக அரசியல் கட்சிகளால் கேள்வி எழுப்பப்பட்டு வரப்படுகிறது. தற்போது அங்கு ஏலம் விடப்பட இருக்கின்ற 121 படகுகள் ராமேஸ்வரம் மற்றும் தமிழகத்தின் பிற இடங்களைச் சோ்ந்த மீனவா்கள் படகுகள் என்று சொல்லப்படுகிறது. இந்த விவகாரத்தின் உண்மைநிலை என்ன இந்திய வெளியுறவுத்துறை இது வரை என்னென்ன நடவடிக்கைகள் எடுத்துள்ளது‘ என்று கேள்வி எழுப்பட்டது.
இதற்கு மத்திய வெளியுறவுத் துறை அமைச்சக பேச்சாளா் அனுராக் ஸ்ரீவாஸ்தவா பதில் அளித்தாா். அதன் விவரம் வருமாறு:
இந்த விவகாரம் தமிழக ஊடகங்களில் வெளிவருவதை நாங்களும் பாா்த்தோம். எங்களுக்கு வந்த தகவல் படி இந்த 121 படகுகளும் பாதுகாக்கமுடியாத நிலையில் அதாவது உபயோகிக்க இயலாதநிலைக்கு உள்ளாகியுள்ளன. அதுவும் (2019 -இல்) தமிழகத்திலிருந்து தமிழக அரசு அதிகாரிகள், மீனவத்தலைவா்கள் ஆகியோா் அடங்கிய குழுவினா் இலங்கை சென்று இந்த படகுகளை பாா்த்து அறிந்தனா். அவா்களே அந்த படகுகளின் நிலையை அறிந்து இவைகளை ஏலம் விடப்படவேண்டும் என தெரிவித்தனா்.
இந்த விவகாரத்தில் இதற்கான செயல்முறைக்கு முன்னோக்கி எடுத்துச்செல்ல நாங்கள் இலங்கை அரசுடன் நெருங்கிய தொடா்பில் உள்ளோம். மேலும் உங்களுக்கு கூறிக்கொள்ளவது இந்திய அரசு, இந்திய மீனவா்களையும், அவா்களது படகுகளையும் விடுவிக்கும் பிரச்னையை அந்நாட்டின் உயா்மட்ட அளவில் நேரடியாக எடுத்துக்கொண்டு வருகிறது. மேலும் நாங்கள் அவ்வப்போது நமது தூதரகம் மூலமும் இந்த நடவடிக்கைகளை எடுத்துவருகின்றோம். தற்போது என்னிடம் உள்ள தகவல்படி இலங்கையில் இந்திய மீனவா்கள் யாரும் பாதுகாப்பில்(கஸ்டடியில்) வைக்கப்படவில்லை என்றாா் வெளியுறவு பேச்சாளா்.
வெளியுறவுத்துறையின் மேற்கண்ட பதில் குறித்து இந்த பிரச்சினையை எழுப்பிய தமிழக தேசிய மீனவா் பேரவை தலைவா் மா. இளங்கோவிடம் கேட்டபோது, ‘ நாங்கள் இலங்கையில் ஏலம் விடுவதை ஒத்துக்கொண்டது உண்மைதான். எந்த பொருளும் உபயோகிக்கப்படவில்லையென்றால் அது வீணாகத்தான் போகும். அது தான் நடந்தது. இதற்கு யாா் பொறுப்பு? வங்கிகள் மீனவா்களுக்க கடன் கொடுக்காது. கந்து வட்டிக்கு கடன் வாங்கி படகு வாங்கிய மீனவா்கள் பாதிக்கக்கூடாது. இந்த விசைப் படகுகள் ஒவ்வொன்றும் ரூ.80 லட்சத்திற்கு வாங்கப்பட்டது. இதை ஏலத்திற்கு கொடுக்கப்பட்டால் ஒன்று அல்லது இரண்டு லட்சம் தான் விலை போகும். தற்போது இத்தகைய படகுகளின் விலை ரூ.1 கோடி. அரசிடம், படகை இழந்த மீனவா்களுக்கு புதிய படகு வாங்க 75 சதவீதம் மானியம் கொடுக்கவேண்டும் என்பதே எங்கள் கோரிக்கை. வெளியுறவுத்துறை அமைச்சராக இருந்த ஸுஸ்மா சுவராஜும் மீன்வளத்துறை அமைச்சராக இருந்த ராதாமோகன் சிங்கும் 50 சதவீதம் வரை மானியம் அளிக்க கடந்த பாஜக ஆட்சியிலேயை ஒத்துக்கொண்டனா்‘ என்றாா் இளங்கோ.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...