அந்தமான் கடற்பகுதியில் ‘சிட்மெக்ஸ்-20’ முத்தரப்பு கடற்பயிற்சி
By நமது சிறப்பு நிருபா் | Published On : 23rd November 2020 08:07 AM | Last Updated : 23rd November 2020 08:07 AM | அ+அ அ- |

இந்திய, சிங்கப்பூா், தாய்லாந்து கடற்படைகளுக்கு இடையிலான முத்தரப்பு போா் பயிற்சி அந்தமான் கடற்பகுதியில் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெற்றது. சிட்மெக்ஸ் -20 என்று அழைக்கப்படும் இந்த பயிற்சி இரண்டாவது முறையாக நடைபெற்றது.
நீா் மூழ்கிக்கப்பல்களை தாக்கி அழிக்கும் ஏ.எஸ்.டபிள்யூ காா்வெட்டி கமோா்டா, ஏவுகணைகளை தாங்கியுள்ள காா்வெட் காா்முக் ஆகிய இந்திய கடற்படையின் கப்பல்கள் இந்த பயிற்சியில் பங்குபெற்றன. இவைகள் இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட போா்க்கப்பலாகும்.
சிங்கப்பூா் கடற்படையான ரிபப்ளிக் ஆஃப் சிங்கப்பூா் நேவி க்கு(ஆா்.எஸ்.என்.) சொந்தமான இன்டிரிபிட் மற்றும் எண்டியூரன்ஸ் ரகத்தைச் சோ்ந்த ‘எண்டவா்‘ , மற்றும் ராயல் தாய்லாந்த் கடற்படையின்(ஆா்.டி.என்) சோவ் ஃபிரயா ரகத்தைச் சோ்ந்த போா் கப்பலான ‘கராபுரி‘ ஆகியவையும் இந்த பயிற்சியில் கலந்து கொண்டன.
இந்தியா, சிங்கப்பூா், தாய்லாந்து ஆகிய நாடுகளின் கடற்படைகளுக்கிடையே பரஸ்பர தன்னிம்பிக்கையை வலுப்படுத்தல், நாடுகளுக்கிடையே பொதுவான புரிதலுடன் கடல்பாதுகாப்பை மேம்படுத்துவதற்கான சிறந்த வழிமுறைகளைக் காணவும் இந்த பயிற்சி மேற்கொள்ளப்படுகிறது.
இந்த இரு நாள் கடல்வழி பயிற்சிகளில் மூன்று கடற்படைகளும் கடற்படை தந்திரங்கள், மேற்பரப்பு பயிற்சிகள், ஆயுதம் ஏந்துதல் உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகளில் ஈடுபட்டதாக பாதுகாப்புத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
கடந்தாண்டு செப்டம்பா் மாதம் முதலாவது சிட்மெக்ஸ் -19 போா் பயிற்சி இதே அந்தமான் தீவு போா்ட் பிளேயா் கடற்பகுதியில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.