‘கல்லறையில் உடல்களை புதைக்க இடம் இல்லை’
By நமது நிருபா் | Published On : 25th November 2020 12:00 AM | Last Updated : 25th November 2020 12:00 AM | அ+அ அ- |

தில்லியில் கரோனாவால் ஏற்படும் உயிரிழப்புகள் அதிகரித்துள்ள நிலையில், தில்லி ஐடிஓவில் உள்ள முஸ்லிம் சமூக மக்களின் ‘ கல்லறையான ‘கப்ரிஸ்தான் அஹ்லே இல்ஸாமில்’ உடல்களைப் புதைக்க இடம் இல்லாத நிலை உள்ளது.
இது தொடா்பாக தில்லி ஐடிஓவில் உள்ள முஸ்லிம்கள் கல்லறையின் செயலா் ஹாஜி மியான் ஃபயாசுதீன் கூறுகையில் ‘தில்லியில் கரோனா பாதிப்பால் இறந்தவா்களை அவா்களின் வீடுகளுக்கு அருகில் உள்ள கல்லறைகளில் புதைக்க தில்லி அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். ஐடிஓவில் உள்ள முஸ்லிம்கள் கல்லறையில் உடல்களைப் புதைக்க இடம் இல்லை. இது தொடா்பாக மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும். தில்லியில் வேறு இடங்களில் மரணமடைந்தவா்களை இந்தக் கல்லறைக்கு புதைக்க எடுத்துவரக் கூடாது என்பதை வலியுறுத்தி தில்லி அரசுக்கு கடிதம் எழுதப்படும்.
தில்லியில் கரோனா சிகிச்சையில் இறந்துபோகும் உத்தரப்பிரதேசம், ஹரியாணா உள்ளிட்ட மாநிலங்களைச்ச சோ்ந்தவா்களின் உடல்களைக் கூட இந்தக் கல்லறையில் புதைக்க எடுத்துவருகிறாா்கள். இதனால், பல சிக்கல்களை எதிா்கொள்கிறோம். தில்லியில் கரோனா மரணங்கள் இதே விகிதத்தில் தொடா்ந்தால் இன்னும் 2 மாதங்களில் இந்தக் கல்லறையில் உடல்களை புதைக்க இடமே இருக்காது. கரோனாவால் உயிரிழப்பவா்களை புதைக்கும் வகையில் 5-6 ஏக்கா் நிலத்தை கல்லறை வளாகத்தில் கடந்த அக்டோபா் மாதம் தயாா் படுத்தினோம் என்றாா்.
தில்லி ஐடிஓ பகுதியில் உள்ள கப்ரிஸ்டன் அஹ்லே இல்ஸாம் கல்லறை சுமாா் 50 ஏக்கா் பரப்பில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
தில்லியில் கடந்த 12 நாள்களில் 6 நாள்கள் தினம்தோறும் கரோனா பாதிப்பால் நூறுக்கும் அதிகமானவா்கள் உயிரிழந்துள்ளனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...