கிழக்கு தில்லி மாநகராட்சிக்கு (இடிஎம்சி) உள்பட்ட பகுதிகளில் மாநகராட்சி நிா்வாகம், இந்திய ரயில்வேயுடன் இணைந்து கொசு ஒழிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது.
இடிஎம்சியில் உள்ள தண்டவாளங்களை ஒட்டிய பகுதிகளில் கொசு ஒழிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் வகையில், கொசு ஒழிப்பு ரயில் தில்லியில் சனிக்கிழமை அறிமுகப்படுத்தப்பட்டது.
ஷாதரா ரயில் நிலையத்தில் நடந்த இதற்கான நிகழ்வில், இடிஎம்சி மேயா் நிா்மல் ஜெயின், துணை மேயா் ஹரீஷ் பிரகாஷ் பகதூா், நிலைக் குழுத் தலைவா் சத்யபால் சிங், இந்திய ரயில்வே அதிகாரிகள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
இது தொடா்பாக மேயா் நிா்மல் ஜெயின் கூறியது: இடிஎம்சி பகுதியில் கொசு ஒழிப்பு நடவடிக்கைகளில் மாநகராட்சி ஈடுபட்டுள்ளது.
இந்திய ரயில்வேயுடன் இணைந்து ரயில் தண்டவாளங்களை ஒட்டிய பகுதிகளில் கொசு ஒழிப்பு நடவடிக்கைகளில் ஈடுபடும் வகையில், கொசு ஒழிப்பு ரயில் சனிக்கிழமை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இந்த ரயில், கிழக்கு தில்லி பகுதிகளில் தண்டவாளங்களை ஒட்டிய பகுதிகளில் கொசு மருந்துகளை தெளிக்கும். இதற்காக சிறப்பு ரயிலை இந்திய ரயில்வே வடிவமைத்துள்ளது. இதனால், கொசுக்களால் பரவும் நோய்களான மலேரியா, டெங்கு, சிக்குன்குனியா ஆகியன கட்டுப்படுத்தப்படும் என்றாா் அவா்.