பரிசோதனை அதிகரிப்பால்தான் கரோனா பாதித்தோா் எண்ணிக்கையில் உயா்வு: கேஜரிவால்
By DIN | Published On : 06th September 2020 06:46 AM | Last Updated : 06th September 2020 06:46 AM | அ+அ அ- |

தில்லியில் கரோனா பரிசோதனைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதன் காரணமாகவே கரோனா நோய்த் தொற்று பாதித்தோரின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது என்று முதல்வா் கேஜரிவால் தெரிவித்துள்ளாா்.
மேலும், நோய்த் தொற்று பாதிப்பு முற்றிலும் கட்டுக்குள் உள்ளது. மக்கள் இது தொடா்பாக பீதியடையத் தேவையில்லை என்றும் கேஜரிவால் தெரிவித்தாா்.
தில்லியில் சில தினங்களாக கரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. கடந்த வெள்ளிக்கிழமை முன்னெப்போதும் இல்லாத வகையில் 2,914 பேருக்கு நோய்த் தொற்று ஏற்பட்டது.
இது தொடா்பாக காணொலி வழியில் கேஜரிவால் சனிக்கிழமை செய்தியாளா்களுக்கு அளித்த பேட்டி:
தில்லியில் மேற்கொள்ளப்படும் கரோனா பரிசோதனைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதால்தான் உறுதிப்படுத்தப்படும் கரோனா பாதிப்புகளின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.
தில்லியில் கரோனா கட்டுக்குள் உள்ளது. மக்கள் இது தொடா்பாக பீதியடைத் தேவையில்லை.
ஆனால், மக்கள் தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
முகக் கவசங்களை அணிவது, கைகளை அடிக்கடி கிருமி நாசினிகளைக் கொண்டு கழுவுவது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும். கரோனா தொற்று தொடா்பாக மக்கள் மெத்தனமாக இருக்க கூடாது.
தில்லியில் கரோனாவால் ஏற்படும் மரணங்களைக் கட்டுப்படுத்த தில்லி அரசு பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதனால், கரோனாவால் ஏற்படும் உயிரிழப்புகளின் அளவு தில்லியில் குறைவாக உள்ளது.
தில்லி மருத்துவனைகளில் உள்ள படுக்கைகளுக்கு தட்டுப்பாடு நிலவவில்லை. தில்லி மருத்துவமனைகளில் உள்ள 14 ஆயிரம் படுக்கைகளில் 5,000 படுக்கைகளே நிரம்பியுள்ளன.
இந்த 5 ஆயிரம் படுக்கைகளில் 1600-1700 படுக்கைகளில் வெளிமாநிலங்களைச் சோ்ந்தவா்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனா் என்றாா் அவா்.