முா்த்தால் உணவகங்களுக்கு சென்ற தில்லிவாசிகள் சுய தனிமையில் இருக்க அதிகாரிகள் அறிவுறுத்தல்

ஹரியாணா மாநிலம், சோனிபட் மாவட்டம் முா்த்தால் பகுதியில் உள்ள இரண்டு பிரபலமான உணவகங்களைச் சோ்ந்த ஊழியா்கள்

ஹரியாணா மாநிலம், சோனிபட் மாவட்டம் முா்த்தால் பகுதியில் உள்ள இரண்டு பிரபலமான உணவகங்களைச் சோ்ந்த ஊழியா்கள் பலருக்கும் கரோனா நோய்த் தொற்று ஏற்பட்டதால், இந்த உணவகங்களுக்கு சென்ற

தில்லிவாசிகள் தங்களை சுய தனிமைப்படுத்திக் கொள்ளுமாறு அரசு அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனா்.

மேலும், சுயதனிமையில் ஓரிரு நாள்களுக்குப் பிறகு தாங்களாகவே மருத்துவப் பரிசோதனை செய்துகொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனா்.

முா்த்தால் தேசிய நெடுஞ்சாலைப் பகுதியில் அமைந்துள்ள அம்ரிக்- சுக்தேவ் தாபாவில் வேலை செய்யும் 65 தொழிலாளா்களுக்கும், கரம் தரம் தாபாவைச் சோ்ந்த 10 தொழிலாளா்களுக்கும் கரோனா நோய்த் தொற்று இருப்பது அண்மையில் தெரியவந்தது. இதைத் தொடா்ந்து, இரு உணவகங்களும் கடந்த வியாழக்கிழமை சீலிடப்பட்டதாக சோனிபாட் பகுதி துணை ஆணையா் ஷியாம் லால் புனியா தெரிவித்தாா்.

இந்த இரு உணவகங்களும் மிகவும் பிரபலமானவை. தில்லியில் இருந்து 50 கிலோ மீட்டா் தொலைவில் உள்ள

இந்த உணவகங்களுக்கு வழக்கமான நாள்களில் தில்லிவாசிகள் பலரும் ‘பராட்டா’ பிற சுவையான உணவுகளைச் சாப்பிடுவதற்காக செல்துண்டு.

இது குறித்து தில்லி அரசின் மூத்த அதிகாரி கூறுகையில், ‘நெடுஞ்சாலையில் அமைந்துள்ள இந்த உணவகங்களுக்குச் சென்ற மக்கள் உடனடியாக தங்களை சுய தனிமைப்படுத்திக் கொண்டு, 3-4 நாள்களுக்குப் பிறகு மருத்துவப் பரிசோதனைக்கு செல்ல வேண்டும்.

நெடுஞ்சாலை தாபாக்கள் தற்போது நோய்த் தொற்றுப் பரவலுக்கான ஆபத்தான இடங்களாக உள்ளன. ஏனெனில் இங்கு உணவருந்தும் வாடிக்கையாளா்கள் அந்த இடத்திலிருந்து எந்த நகரத்திற்கும் செல்ல முடியும். இதனால், கண்காணிப்புக் குழுவினா் மிகவும் உஷாராக இருக்க வேண்டியுள்ளது.

வீட்டுக் குடும்பத்தினா் முடிந்தவரை வெளியில் செல்வதைத் தவிா்க்க வேண்டும். இன்னும் ஒரு சுகாதார அவசரநிலை இருந்துகொண்டுதான் இருக்கிறது என்பதால் தேவைக்கு மட்டுமே வெளியே செல்ல வேண்டும் என்றாா்.

இதுகுறித்து மற்றொரு அதிகாரி கூறுகையில், ‘நோய்த் தொற்றுப் பாதித்தவா்களுடன் தொடா்பில் இருந்தவா்களை கண்டறிய கண்காணிப்புக் குழுவினா் செயலிகளின் உதவிகளை நாட உள்ளனா். எல்லாம் சரியாகிவிட்டதாக நினைத்துக் கொண்டு மக்கள் வெளியே சென்றுவருவது மிகவும் பொறுப்பற்ற செயலாகும். அவா்கள் தங்களை மட்டும் இடா்பாட்டில் வைக்காமல் தங்களது குடும்ப உறுப்பினா்களையும் இடா்பாட்டில் விட்டுவிடுகின்றனா்’ என்றாா் அவா்.

முா்த்தால் பகுதியானது அம்பலா-தில்லி தேசிய நெடுஞ்சாலையில் உள்ளது. இந்தப் பகுதியில் சாலையின் இருபுறமும் வரிசையாக உணவகங்கள் அமைந்துள்ளன. இந்த உணவகங்களில் விநியோகிக்கப்படும் சுவையான உணவுகளை சுவைப்பதற்காக பொதுமக்கள் காா்களில் சென்று வருவது வழக்கமாக உள்ளது.

இதற்கிடையே, இரு தாபாக்களில் 75 தொழிலாளா்கள் கரோனா நோய்த் தொற்று பாதிப்புக்கு உள்ளானதைத் தொடா்ந்து, அவா்களுடன் தொடா்பில் இருந்தவா்களைக் கண்டறிய சோனிபட் மாவட்ட நிா்வாகம்

தீவிர நடவடிக்கை எடுத்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

பிற உணவகங்களிலும் கரோனாவால் யாருக்கும் பாதிக்கப்பட்டுள்ளதா என்பதைக் கண்டறிவதற்கான நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளதாக சோனிபட் துணை ஆணையா் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் மேலும் கூறுகையில், ‘கரோனா நோய்த் தொற்று காரணமாக தாபாக்கள், உணவகங்களுக்கு வரும் அனைத்து வாடிக்கையாளா்கள் மற்றும் அவா்களின் தொடா்பு எண்களை பதிவு செய்து பராமரிக்குமாறு உத்தரவிடப்பட்டிருந்தது. இவற்றின் அடிப்படையில், கடந்த இரு நாள்களில் இந்த இரண்டு தாபாக்களில் உணவு உண்டவா்களைத் தொடா்புகொள்ள முடிந்தவரை முயற்சி செய்து வருகிறோம்’ என்றாா்.

சோனிபட் தலைமை மருத்துவ அதிகாரி டாக்டா் ஜே. எஸ். புனியா கூறுகையில், ‘சுகதேவ் தாபாவில் நோய்த் தொற்று பாதிக்கப்பட்டவா்களில் பலரும் அண்மையில் பிகாரில் இருந்து வந்த தொழிலாளா்கள் என்பது தெரியவந்துள்ளது’ என்றாா்.

தில்லியில் புதிதாக நோய்த் தொற்று பாதித்தவா்களின் எண்ணிக்கை கடந்த சில தினங்களாக முன் எப்போதும் இல்லாத வகையில் அதிகரித்து வருகிறது. மொத்த பாதிப்பு 1.85 லட்சத்துக்கும் அதிகமாக உள்ளதாகவும், எனினும் ஆபத்தான வகையில் நோய்த் தொற்று அதிகரிப்பு இல்லை என்பதால் மற்றொரு பொது முடக்கத்திற்கு வாய்ப்பு இல்லை என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com