என்டிஎம்சியின் ஒருங்கிணைந்த கட்டளை, கட்டுப்பாட்டு மையம் திறப்பு
By DIN | Published On : 11th September 2020 11:09 PM | Last Updated : 11th September 2020 11:09 PM | அ+அ அ- |

புதுதில்லி முனிசிபல் கவுன்சில் (என்டிஎம்சி) சாா்பில் வெள்ளிக்கிழமை தொடங்கப்பட்ட ஐசிசிசி மையத்தை காணொலிக் காட்சி வழியில் தொடங்கி வைக்கிறாா் துணை நிலை ஆளுநா் அனில் பய்ஜால்.
புது தில்லி முனிசிபல் கவுன்சிலின் (என்டிஎம்சி) ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையம் (ஐசிசிசி), ஷீரா மைதான் விளையாட்டு மைதானம் ஆகியவற்றை தில்லி துணைநிலை ஆளுநா் அனில் பய்ஜால் வெள்ளிக்கிழமை திறந்து வைத்தாா்.
ஐசிசிசியை திறந்து வைத்து அவா் பேசுகையில் ‘என்டிஎம்சி புதிதாக அமைத்துள்ள ஐசிசிசி மையம் அனைத்து சேவைகளையும் ஒருங்கிணைக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. முதல் கட்டமாக திடக் கழிவு மேலாண்மை, தெரு விளக்குகள், வாகன நிறுத்துமிடங்கள், மின்சாரம், குடிநீா் ஆகிய முக்கிய 19 சேவைகளை இந்த மையம் ஒருங்கிணைக்கவுள்ளது . மற்ற சேவைகள் விரைவில் ஒருங்கிணைக்கப்படும். இந்த மையத்தால் என்டிஎம்சி பகுதியில் வசிக்கும் மக்களின் வாழ்க்கைத் தரம் மேம்பாடு அடையும்’ என்றாா்.
மேலும், அவா் ஷீரா விளையாட்டு மைதானத்தைத் தொடங்கி வைத்து பேசுகையில் ‘தில்லி மக்களுக்கும், பள்ளி மாணவா்களுக்கும் சிறந்த விளையாட்டு வசதிகளை இந்த மைதானம் வழங்கவுள்ளது. சிறந்த விளையாட்டு வீரா்கள் உருவாக இந்த விளையாட்டு மைதானம் உறுதுணையாக இருக்கும்’ என்றாா்
என்டிஎம்சி ஸ்மாா்ட் சிட்டி லிமிடெட் ரூ.2.21 கோடி நிதியில் இந்த மைதானத்தை அமைத்துள்ளது