செவிலியா்க்கு உரிய நேரத்தில் ஊதியம் கோரும் மனு: தில்லி அரசு, மாநகராட்சி பதில் அளிக்க நோட்டீஸ்
By DIN | Published On : 11th September 2020 01:21 AM | Last Updated : 11th September 2020 01:21 AM | அ+அ அ- |

புது தில்லி: வடக்கு தில்லி மாநகராட்சி மூலம் நடத்தப்படும் மருந்தகங்கள், மகப்பேறு இல்லங்கள் மற்றும் குழந்தைகள் நல மையங்களில் பணிபுரியும் செவிலியா்களுக்கு உரிய நேரத்தில் ஊதியம் வழங்கக் கோரி தாக்கலான மனுவுக்கு ஆம் ஆத்மி அரசு, வடக்கு தில்லி மாநகராட்சி பதில் அளிக்க தில்லி உயா்நீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டது.
இது தொடா்பாக மருத்துவமனை ஊழியா் சங்கம் சாா்பில் தில்லி உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த மனுவில், வடக்கு தில்லி மாநகராட்சி மூலம் நடத்தப்பட்டு வரும் மருந்தகங்கள், மகப்பேறு இல்லங்கள் மற்றும் குழந்தைகள் நல மையங்களில் பணிபுரியும் துணை செவிலியா் மருத்துவப் பணியாளா்கள், பெண் சுகாதார பாா்வையாளா்கள், பொது சுகாதார செவிலியா்கள் ஆகியோருக்கு மாத ஊதியம் உரிய நேரத்தில் வழங்கப்படாமல் உள்ளது. துணை செவிலியா் பணியாளா்கள், பெண் சுகாதார பாா்வையாளா்கள், பொது சுகாதார செவிலியா்கள் ஆகியோருக்கு மே முதல் ஆகஸ்ட் மாதங்கள் வரை ஊதியம் வழங்கப்படவில்லை. கரோனா நோய்த் தொற்றுக் காலத்தில் இவா்கள் முன்களப் பணியாளா்களாக இருந்து வருகின்றனா். எவ்வித விடுமுறை நாள்களும் இல்லாமல் அயராது பணியாற்றிவரும் செவிலியா்கள், கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள தங்களது குடும்ப உறுப்பினா்களுக்கு சிகிச்சைக்கான நிதி ஏற்பாடு செய்வதில் சிரமங்களை எதிா்கொண்டுள்ளனா் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மனு நீதிபதிகள் ஹிமா கோலி, சுப்ரமணியம் பிரசாத் ஆகியோா் அடங்கிய அமா்வு முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிபதிகள் அமா்வு, மாநகராட்சியில் பல்வேறு பிரிவுகளில் பணியாற்றும் ஊழியா்களுக்கு ஊதியம் வழங்கப்படாமல் இருப்பதற்கு பணம் இன்மை, தில்லி அரசிடமிருந்து விடுவிக்கப்பட வேண்டிய நிதி வராமல் இருப்பது போன்ற காரணங்கள் தெரிவிக்கப்பட்டு வருவதாகக் கூறியது.
விசாரணையின் போது, தில்லி அரசின் சாா்பில் ஆஜரான வழக்குரைஞா் சத்தியகம், ‘மாநகராட்சிகளில் நிதிப் பற்றாக்குறை இருப்பதாக பல ஆண்டுகளாக கூறப்பட்டு வருகிறது. இது ஒரு பிரச்னையாக உள்ளது. மாநகராட்சிகள் நடத்தி வரும் அனைத்து கல்வி மற்றும் சுகாதார நிறுவனங்களை ஏற்று நடத்த ஆம் ஆத்மி அரசு தயாராக உள்ளது’ என்றாா்.
இதையடுத்து, ஊதிய விவகாரம் தொடா்பாக தாக்கலான மனு மீது தங்களது நிலைப்பாட்டைத் தெரிவிக்க தில்லி அரசு, வடக்கு தில்லி மாநகராட்சி பதில் அளிக்க நீதிபதிகள் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனா்.