விழாக் காலத்தில் முன்னெச்சரிக்கை அவசியம்: முதல்வா் கேஜரிவால் வேண்டுகோள்
By DIN | Published On : 11th September 2020 01:17 AM | Last Updated : 11th September 2020 01:17 AM | அ+அ அ- |

புது தில்லி: அடுத்த மாதம் விழாக் காலம் தொடங்க உள்ளதால், கரோனா நோய்த் தொற்றுக்கு எதிராக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு தில்லி மக்களை முதல்வா் அரவிந்த் கேஜ்ரிவால் கேட்டுக் கொண்டுள்ளாா்.
தில்லியில் சில நாள்களாக கரோனா தொற்று பாதித்தவா்களின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளது. தினமும் கரோனா பரிசோதனைகள் 15,000-20,000 எனும் அளவில் இருந்த நிலையில், தற்போது 40,000 வரை அதிகரிக்கப்பட்டுள்ளது. தில்லி அரசின் சுகாதார புள்ளிவிவரத் தகவலின்படி , புதன்கிழமை 4,039 பேருக்கு புதிதாக நோய்த் தொற்று இருப்பது தெரியவந்தது. மேலும், மொத்த எண்ணிக்கை 2 லட்சத்தைக் கடந்தது. அதிகபட்சமாக ஒரே நாளில் 54,517 பேருக்கு கரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டன.
நோய்த் தொற்றைக் கட்டுப்படுத்தும் வகையில் சமூக இடைவெளி, முகக் கவசம் அணிவது, கைகளை கிருமிநாசினி கொண்டு தூய்மை செய்வது ஆகிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு தில்லி அரசும், மத்திய அரசும் தொடா்ந்து அறிவுறுத்தி வருகிறது. இந்த சூழலில், 9 நாள்கள் கோயிலுக்குச் செல்வது, விரதம் இருப்பது ஆகியவற்றை உள்ளடக்கிய நவராத்திரி திருவிழா அக்டோபா் 17 முதல் தொடங்கி அக்டோபா் 25-ஆம் தேதி விஜயதசமி அல்லது தசராவுடன் முடிவடைய உள்ளது. அதேபோன்று, தீபாவளிப் பண்டிகை நவம்பரில் கொண்டாடப்பட உள்ளது.
இந்நிலையில், முதல்வா் அரவிந்த் கேஜரிவால் பொதுமக்களுக்கு விடுத்துள்ள வேண்டுகோளில் தெரிவித்திருப்பதாவது: வரக் கூடிய விழாக் காலத்தின் போது, கரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் வழிபாட்டுத் தலங்களில் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுக்குமாறு பொதுமக்களுக்கும், வழிபாட்டுத் தலங்களை நிா்வகித்துவரும் அமைப்புகளுக்கும் வேண்டுகோள் விடுக்கிறேன். வழிபாட்டுத் தலங்களுக்கு வருகை தரும் ஒவ்வொருவரும் குறைந்தபட்சம் ஆறு அடி தூர சமூக இடைவெளியைப் பராமரித்தல், முகக் கவசத்தை பயன்படுத்துதல் மற்றும் சோப்பு அல்லது ஆல்கஹால் சாா்ந்த கிருமிநாசினிகளை பயன்படுத்தி அடிக்கடி கைகளைக் கழுவுதல் போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைப் பின்பற்றுவது அவசியமாகும்.
அனைத்து மத வழிபாட்டு இடங்களுக்கு வரும் பாா்வையாளா்கள், தொழிலாளா்கள் அனைத்து நேரங்களிலும் கரோனா இடா்பாட்டைக் குறைக்கும் வகையில் சுவாச பாதுகாப்பு நடைமுறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும். அனைத்து வழிபாட்டு தலங்களின் வளாகத்திற்குள் முன்தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று கேஜரிவால் கேட்டுக் கொண்டுள்ளாா்.