தில்லி அரசுப் பள்ளி மைதானங்களை விளையாட்டு: அகாதெமிகள் பயன்படுத்தும் உரிமம் புதுப்பிப்பு!
By DIN | Published On : 11th September 2020 11:08 PM | Last Updated : 11th September 2020 11:08 PM | அ+அ அ- |

தில்லியில் உள்ள அரசுப் பள்ளி மைதானங்களை தனியாா் விளையாட்டு அகாதெமிகள் பயன்படுத்துவதற்கான உரிமத்தை புதுப்பிப்பது தொடா்பாக தில்லி அரசு ஆய்வு செய்து வருகிறது என்று தில்லி அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.
இது தொடா்பாக தில்லி அரசு உயா் அதிகாரி கூறியது: தில்லியில் உள்ள பள்ளி மைதானங்களை தனியாா் விளையாட்டு அகாதெமிகளுக்கு பயிற்சி நோக்கங்களுக்காக பயன்படுத்தும் வகையில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு தில்லி அரசு வழங்கியது. இந்த உரிமங்களின் காலக்கெடு முடிவடைந்துவிட்டன. இந்நிலையில், இந்த உரிமங்களை புதுப்பிப்பது தொடா்பாக ஆய்வு செய்து வருகிறோம். இந்த அகாதெமிகளின் செயல்திறனை மதிப்பீடு செய்து அதன் அடிப்படையில் அவா்களின் உரிமங்களை புதுப்பிப்பது தொடா்பாக முடுவெடுக்கவுள்ளோம். இது தொடா்பான செயல்திறன் ஆவணங்களை சம்பந்தப்பட்ட அகாதெமிகளிடம் இருந்து கோரியுள்ளோம்.
இதுவரை, 26 அகாதெமிகள் செயல்திறன் தொடா்பான ஆவணங்களை சமா்ப்பித்துள்ளன. அவற்றை ஆய்வு செய்து வருகிறோம். வரும் செப்டம்பா் 15- ஆம் தேதிக்கு முன்பாக ஆவணங்களைச் சமா்ப்பிக்கத் தவறும் அகாதெமிகள், அவா்கள் மேலும் தொடர விரும்பவில்லை எனக் கருதப்படுவாா்கள். அவா்களுக்கு ஏற்கெனவே வழங்கப்பட்ட உரிமங்கள் ரத்துச் செய்யப்படும் என்றாா் அவா்.