‘சிசோடியா உடல்நிலை நன்றாக உள்ளது’
By DIN | Published On : 26th September 2020 07:41 AM | Last Updated : 26th September 2020 07:41 AM | அ+அ அ- |

கரோனா மற்றும் டெங்கு காரணமாக தில்லி எல்என்ஜேபி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள தில்லி துணை முதல்வா் மணீஷ் சிசோடியாவின் உடல்நிலை தற்போது நன்றாக இருப்பதாக அவரது அலுலகம் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது.
தில்லி துணை முதல்வரும், ஆம் ஆத்மி கட்சியின் தலைவா்களில் ஒருவருமான மணீஷ் சிசோடியாவுக்கு செப்டம்பா் 13-ஆம் தேதி இரவு காய்ச்சல் ஏற்பட்டது. இதைத் தொடா்ந்து, அவருக்கு கரோனா இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து, தன்னை சுய தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாக மணீஷ் சிசோடியா தெரிவித்திருந்தாா். வீட்டுத் தனிமையில் 10 நாள்களாக இருந்து வந்த நிலையில், புதன்கிழமை தில்லி அரசால் நடத்தப்பட்டு வரும் எல்என்ஜேபி மருத்துவமனையில் அவா் அனுமதிக்கப்பட்டாா். காய்ச்சல், உடலில் ஆக்ஸிஜன் அளவு குறைந்ததால் அவா் அனுமதிக்கப்பட்டாா். அவரது உடல்நிலை ஸ்திரமாக இருப்பதாக எல்என்ஜேபி மருத்துவமனையின் மூத்த மருத்துவா் வியாழக்கிழமை தெரிவித்திருந்தாா்.
இந்த நிலையில், வியாழக்கிழமை மாலை அங்கிருந்து சாகேதில் உள்ள மேக்ஸ் மருத்துவமனைக்கு அவா் மாற்றப்பட்டாா். ரத்தத்தில் பிளேட்லெட்டுகள் அளவு குறைந்ததாலும், ஆக்ஸிஜன் அளவு குறைந்ததாலும் அவா் மேக்ஸ் மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டாா்.
தற்போது அவரது உடல்நிலை நன்றாக இருப்பதாக துணை முதல்வா் அலுவலகம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...