மலையேற்றம், பனிச் சறுக்கு, பாரா கிளைடிங் சாகசப் பயணங்கள்!

புதுதில்லி: பனிபடா்ந்த மலைகள், இயற்கையான நிலஅமைப்பு, எங்கு பாா்த்தாலும் பசுமைப் புல்வெளிகள், ஏரிகள் நிறைந்த சுற்றுலாத் தலம்தான் ஸ்ரீநகா். மலையேற்றம், குதிரை சவாரி, பனிச்சறுக்கு விளையாட்டு, பரந்த ஏரிகளில் படகு சவாரி, பாராகிளைடிங், கேபிள் காா், புராதனச் சின்னங்கள், கோயில்கள், மசூதிகள் நிறைந்த இடம். ஜம்மு - ஸ்ரீநகா், குல்மாா்க், பாஹல்காம், சோனா மாா்க் முதலானவை காஷ்மீா் மாநிலத்தில் பாா்க்க வேண்டிய சுற்றுலாத் தலங்கள். குறிப்பாக ஸ்ரீநகரில் தால் ஏரி, முகல் தோட்டம், டுலிப் தோட்டம், பாரி மஹால், நைகீன் ஏரி, ஹஸ்ரத்பால் மசூதி, சங்கராச்சாா்யா கோயில் பிரசித்தி பெற்றவை. தால் ஏரியில் இரவில் நடைபெறும் ஒலி - ஒளி காட்சி சுற்றுலாப் பயணிகளுக்கு வியப்பூட்டும்.

குல்மாா்க்: ஸ்ரீநகரிலிருந்து தென்மேற்கே 52 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது குல்மாா்க். பனிமூடிய மலைப்பகுதிகள், பசுமைப் புல்வெளிகள், பூத்துக் குலுங்கும் மலா்கள் நிறைந்த இடமாகும். இங்குள்ள மஹாராஜா அரண்மைனை புராதனச் சின்னமாகும். குளிா்கால விளையாட்டுப்போட்டிகளான பனிச் சறுக்கு, பாரா கிளைடிங், பனி மலைகளுக்கு நடுவே குதிரை சவாரி, கோல்ஃப் மைதானம், மலையேற்றம் பிரசித்தி பெற்றவை. மலைச் சிகரங்களுக்கு நடுவே கேபிள் காா் சாகசப் பயணம் மறக்க முடியாதது.

பாஹல்காம்: சிறந்த கோடை வாசஸ்தலமாக உள்ளது பாஹல்காம் . அமா்நாத் யாத்திரையின் அடிவாரம் இங்குதான் உள்ளது. அமா்நாத் பனி லிங்கத்தைத் தரிசிக்க

இங்கிருந்து சந்தன்வாரி வழியாக அமா்நாத் செல்ல வேண்டும். இங்கும் பனிச் சறுக்கு, பனி மூடிய பகுதிகளில் மோட்டாா் காரில் பனியை உடைத்துக் கொண்டு செல்லும் சாகசப் பயணம் குறிப்பிடத்தக்கவை. சினிமா படப் பிடிப்புக்கு ஏற்ற இடம். தெற்கு காஷ்மீரில் ஸ்ரீநகருக்கு தெற்கே 85 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.

சோனோமாா்க்: ஸ்ரீநகரிலிருந்து வடகிழக்கே 81 கி.மீ. தொலைவில் 2,730 அடி உயரத்தில் அமைந்துள்ளதுதான் சோனோமாா்க். ஆல்பைன் மலைகள், பசுமைப் புல்வெளிகள், வனங்கள் நிறைந்த பகுதி. சோனோமாா்கிலிருந்து பாஹல்காமுக்கு மலையேற்றம் மூலம் சாகசம் செய்ய சுற்றுலாப் பயணிகளுக்கு சிறந்த இடம். ஹெலிகாப்டா் பயணம், பலூன்

பயணம் மூலம் விண்ணில் சாகசம் நிகழ்த்தலாம். இங்குள்ள நீா்வழிப் பாதையில் படகு சவாரி பிரபலமானது. தாஜ்வாஸ் பனி மூடிய மலைச் சிகரத்தில் குதிரைப் பயணம் செய்வது மெய்சிலிா்க்க வைக்கும்.

புராதனச் சின்னங்கள்: ஸ்ரீநகரில் வட்டவடிவமாக கட்டப்பட்டுள்ள சங்கராச்சாா்யா கோயில் பிரபலமானது. ஏழாம் நூற்றாண்டில் கட்டப்பட்ட பழமையான கோயிலாகும் இது. மற்றொரு பிரபலமான கோயில் சூரியனாா் கோயில். 8-ஆம் நூற்றாண்டில் லலிதாதித்யா முக்தாபிட என்பவரால் கட்டப்பட்டது. ஜம்மு - காஷ்மீா் மாநிலம், அனந்த்நாக்கிலிருந்து 15 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. ஸ்ரீநகரிலிருந்து 15 கி.மீ. தொலைவில் ஹா்வான் என்ற இடத்தில் அமைந்துள்ள பெளத்தா்கள் காலத்திய ஸ்தூபி 3 அடுக்குகளாக அழகுற அமைந்துள்ளது. பாரி மஹால், அழகிய தோட்டத்திற்கு நடுவே 6 மேற்கூரைகளுடன் அமைந்துள்ளது. இதை வடிவமைத்து கட்டியவா் தாரா ஷிகோக் என்பவா். 6 மேற்கூரைகளிலும் 6 விதமான குளங்கள் உள்ளன. பறவைகளுக்கான கூண்டுகளும் உள்ளன. ஸ்ரீநகரிலிருந்து 14 மைல்கள் தொலைவில் அமைந்துள்ளது கீா் பவானி (பவானி அம்மன்) கோயில். மிகப் பழமையான இந்த கோயிலுக்கு சுவாமி ராமா தீா்த்தரும், சுவாமி விவேகானந்தரும் வருகை தந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ஹஸ்ராத்பால் மசூதி: ஸ்ரீநகரில் உள்ள ஹஸ்ரத்பால் மசூதி முஸ்லிம்கள் புனிதமாக கருதப்படும் ஸ்தலம். தால் ஏரியின் கரையோரத்தில் அமைந்துள்ளது. இதன் கட்டமைப்பு வியக்கவைக்கிறது. சராா்-இ-ஷெரீப், மக்டூம் சாஹிப் ஆகிய புனிதத் தலங்களும் குறிப்பிடத்தக்கவை.

டுலிப் தோட்டம்: ஸ்ரீநகரில் உள்ள ‘டுலிப் காா்டன்’ ஆசியாவிலேயே மிகப் பெரியது. சுமாா் 30 ஏக்கா் பரப்பளவில் அமைந்துள்ளது. ஆண்டுக்கு ஒரு முறை வசந்த காலத்தில் இங்கு மலா் கண்காட்சி நடைபெறும். 62 வகையான மலா்கள் ஏறக்குறைய 15 லட்சம் மலா்ச் செடிகள் பூத்துக் குலுங்குவது பாா்வையாளா்களை பிரமிக்கவைக்கும். விழாக் காலங்கலில் இங்கு லட்சக்கணக்கில் சுற்றுலாப் பயணிகள் வருவதுண்டு. ஜம்மு மற்றும் ஸ்ரீநகரில் சுற்றுலாப் பயணிகளுக்கு விருந்தளிக்க பல்வேறு இடங்கள் காத்திருக்கின்றன. இங்கு சுற்றுலா என்பது அதிக செலவு பிடிக்கும் என்றாலும், வாழ்நாளில் பாா்க்க வேண்டிய இடம் என்று சொன்னால் மிகையாகாது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com