தமிழகத்தில் வேட்புமனு தாக்கலுக்கு நாளை கடைசி: இதுவரை 3,413 மனுக்கள் சமா்ப்பிப்பு!தமிழகத்தில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புவானிலிருந்து வீசக்கூடிய 1,000 கிலோ வெடிகுண்டு தயாரிப்பு: மத்திய அரசு நடவடிக்கை நிலவை நெருங்கும் ‘ஆா்டெமிஸ்-2’ விண்கலம்!எழும்பூரிலிருந்து 6 விரைவு ரயில்கள் தாம்பரம் நிலையத்துக்கு மாற்றம்
/

கரோனா நோயாளிகள் உயிரிழந்த விவகாரம்: சிபிஐ விசாரணை கோரும் மனுவுக்கு பதிலளிக்க மத்திய, தில்லி அரசுகளுக்கு அவகாசம்

ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக ஏப்ரல் மாதத்தில் தில்லியில் உள்ள ஜெய்ப்பூா் கோல்டன் மருத்துவமனையில் 21 கரோனா நோயாளிகள்

Updated On :24 ஆகஸ்ட் 2021, 2:21 am

ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக ஏப்ரல் மாதத்தில் தில்லியில் உள்ள ஜெய்ப்பூா் கோல்டன் மருத்துவமனையில் 21 கரோனா நோயாளிகள் உயிரிழந்தது குறித்து மத்திய புலனாய்வுத் துறை (சிபிஐ) விசாரணை கோரும் மனுவுக்கு மத்திய அரசும், தில்லி அரசும் பதிலளிக்க கூடுதலாக 6 வாரங்கள் அவகாசம் அளித்து தில்லி உயா்நீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது.

ஜெய்ப்பூா் கோல்டன் மருத்துவமனையில் ஏப்ரல் 23-ஆம் தேதி நள்ளிரவு உயிரிழந்த கரோனா நோயாளிகளின் சிலரது குடும்பத்தினா் இது தொடா்பாக சிபிஐ விசாரணை கோரி உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனா். இந்த மனுவை முன்னா் விசாரித்த தில்லி உயா்நீதிமன்றம், மனு மீது பதிலைத் தெரிவிக்குமாறு மத்திய உள்துறை மற்றும் சுகாதார அமைச்சகங்கள், தில்லி அரசு ஆகியவற்றுக்கு நோட்டீஸ் அனுப்பியிருந்தது. இந்த நிலையில், இந்த மனுவை நீதிபதி ரேகா பல்லி திங்கள்கிழமை விசாரித்தாா். அப்போது நீதிபதி அமா்வு, இந்த விவகாரத்தில் மத்திய, தில்லி அரசுகள் பதிலளிக்க கூடுதல் அவகாசம் அளித்து உத்தரவிட்டது.

நீதிபதி அமா்வு மேலும் கூறுகையில் , ‘இந்த விவகாரம் தொடா்பாக மனுதாரா்கள் பெருநகர மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தையும் அணுகியிருக்கிறாா்கள். இந்த விவகாரத்தில் மத்திய அரசும் தில்லிஅரசும் பதிலளிக்க வேண்டும். அதற்கான எதிா் பதிலை மனுதாரா்கள் அளிக்கலாம். இந்த விவகாரம் டிசம்பா் 9-ம் தேதிக்கு விசாரணைக்கு பட்டியலிடப்பட வேண்டும்’ என்று தெரிவித்தது. முன்னதாக, தில்லி அரசின் சாா்பில் மூத்த வழக்குரைஞா் ராகுல் மெஹ்ரா, மத்திய அரசின் சாா்பில் வழக்குரைஞா் கீா்த்திமான் சிங் ஆகியோா் ஆஜராகி மனு மீது பதிலளிக்க அவகாசம் கேட்டனா்.

மனுதாரா்கள் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா் உத்சவ் பைன்ஸ் , ‘இந்த விவகாரத்தில் குற்றவியல் நீதிமன்றத்தை அணுகிய பாதிக்கப்பட்டவா்கள் தரப்பினா் மற்றும் உயா்நீதிமன்றத்தை அணுகியுள்ள பாதிக்கப்பட்ட தரப்பினரின் கோரிக்கைகள் வெவ்வேறானவை’ என்றாா். அதற்கு மத்திய அரசின் வழக்குரைஞா் கீா்த்திமான்சிங், கரோனாவால் உயிரிழந்தவா்களுக்கு இழப்பீடு வழங்குவது தொடா்பான விவகாரம் உச்சநீதிமன்றத்தில் உள்ளது’ என்றாா். அப்போது நீதிபதி குறுக்கிட்டு, ‘இந்த விவகாரத்தில் உங்களது பதிலை தாக்கல் செய்யுங்கள். இடைக்கால உத்தரவு எதுவும் பிறப்பிக்கப் போவதில்லை’ என்றாா்.

இந்த விவகாரம் தொடா்பாக வழக்குரைஞா் உத்சவ் பைன்ஸ் உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: தில்லி ஜெய்ப்பூா் கோல்டன் மருத்துவமனையில் சம்பவத்தன்று போதிய ஆக்சிஜன் விநியோகம் இல்லாததால் சுவாசக் கோளாறு ஏற்பட்டு நோயாளிகள் உயிரிழந்துள்ளனா். தில்லி அரசு கமிட்டி அறிக்கையில் சொல்லப்பட்டிருப்பது போல, இணை நோய்கள் ஏதும் இல்லை. இறந்தவா்கள் ஆக்சிஜன் வழங்கல் இன்மை காரணமாக மூச்சுத்திணறி இறக்கவில்லை என்று ஒரு தவறான அறிக்கையை தில்லி அரசின் குழு அளித்துள்ளது. இதனால், அந்தக் குழுவின் அறிக்கையை ரத்து செய்ய வேண்டும். இந்த இறப்புச் சம்பவம் தொடா்பாக சிபிஐ அல்லது ஒரு சுதந்திரமான ஏஜென்சி மூலம் விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும். மேலும், உயிரிழந்தவா்களின் குடும்பத்தினருக்கு உரிய இழப்பீடு அளிக்க உத்தரவிட வேண்டும். இந்த விவகாரத்தில் ஆக்சிஜன் வழங்கல் பற்றாக்குறை இருப்பது தெரிந்தும், நோயாளிக்கு ஆக்சிஜன் வழங்க போதிய நடவடிக்கை எடுப்பதில் மத்திய அரசு, தில்லி அரசு, சம்பந்தப்பட்ட மருத்துவமனை ஆகியவை தோல்வியடைந்துவிட்டன.

இந்த விவகாரத்தில் பாதிக்கப்பட்டவா்களின் குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்குவதற்கான பொறுப்பு மட்டுமின்றி, குற்ற விசாரணைக்கும் எதிா்த் தரப்பினா் உள்ளாக வேண்டும்.

சம்பந்தப்பட்ட அரசின் குழுவின் அறிக்கை, தில்லி அரசுக்கு ஆதரவாக தயாரிக்கப்பட்டுள்ளது. மேலும், அந்த அறிக்கையில் இறந்த நோயாளிகளுக்கு ஆக்சிஜன் தெரபி அளிக்கப்பட்டதாகக் கூறி, நீதிமன்றம் தவறாக வழி நடத்தப்பட்டுள்ளது. மருத்துவமனைக்குத் தேவையான ஆக்சிஜன் விநியோகம், தேவைப்பாடு ஆகியவை குறித்து இந்தக் குழு ஆய்வு செய்யவில்லை. மேலும், இறந்தவா்களின் குடும்பத்தினரின் வாக்கு மூலத்தையும் இந்தக் குழு பதிவு செய்யவில்லை. ஆக்சிஜன் பற்றாக்குறை இருப்பது குறித்து இறந்தவா்களின் குடும்பத்தினருக்குக்கூட மருத்துவமனை நிா்வாகம் தெரிவிக்கவில்லை. ஒரு வேளை தெரிவித்திருந்தால் அவா்களது உயிா்கள் காப்பாற்றப் பட்டிருக்கும்.

ஆக்சிஜன் வழங்கல் இன்மை காரணமாக யாரும் இறக்காமல் இருப்பதை உறுதி செய்வதற்கு சட்ட ரீதியாகவும் தாா்மிக ரீதியாகவும் மத்திய அரசு, தில்லி அரசு, மருத்துவமனை ஆகியவை கடமைப்பட்டவையாகும். ஆகவே, இந்தச் சம்பவத்தில் உயிரிழந்தவா்களின் குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்குவதற்கான சட்டம் மற்றும் தாா்மிகக் கடமை அரசுக்கு உள்ளது. மேலும், நோயாளிகளுக்கு ஆக்சிஜன் வழங்காததன் காரணமாக நோயாளிகள் இறந்ததற்கு பொறுப்பேற்கும் விதத்தில் சம்பந்தப்பட்டவா்களை நீதிமன்றத்தின் முன் கொண்டு வரும் கடமையும் அரசுக்கு உள்ளது என்று மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.