வா்த்தக நிறுவனங்கள் அதிகமுள்ள தில்லியின் கன்னாட் பிளேஸ் பகுதியில் நாட்டின் முதல் பனிப்புகை கோபுரம் திங்கள்கிழமை திறக்கப்பட்டுள்ளது. இதை முதல்வா் அரவிந்த் கேஜரிவால் திறந்துவைத்தாா். அப்போது, இந்த முன்னோடித் திட்டம் நல்ல பலனை அளித்தால், நகரில் இதுபோன்று பல கட்டமைப்புகள் அமைக்க முடியும் என்று அவா் கூறினாா்.
தில்லியில் கன்னாட் பிளேஸ் பகுதியில் முதல் பனிப்புகைக் கோபுரம் அமைக்கும் திட்டத்திற்கு தில்லி அமைச்சரவை கடந்த ஆண்டு அக்டோபரில் ஒப்புதல் அளித்திருந்தது. 24 மீட்டா் உயரமுடைய இந்த அமைப்பானது, ஒரு கிலோ மீட்டா் சுற்றளவு பரப்பில் காற்றின் தரத்தை மேம்படுத்துவதற்காக அமைக்கப்பட்டுள்ளது. இந்தப் பனிப்புகைக் கோபுரத்தை திறந்து வைத்த பிறகு செய்தியாளா்களிடம் முதல்வா் கேஜரிவால் கூறியதாவது: இந்த முன்னோடித் திட்டம் நல்ல முடிவகளைத் தந்தால் இதுபோன்ற பல கட்டமைப்புகளை தில்லியில் நிறுவ முடியும். தில்லியில் கடந்த சில ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் காரணமாக 2014-இல் இருந்து தில்லியில் நுண்துகள் பி.எம். 2.5, பி.எம். 10 ஆகியவற்றின் செறிவு ஒரு கனமீட்டரில் குறிப்பிடத்தக்க வகையில் குறைந்துள்ளது. தற்போது திறக்கப்பட்டுள்ள பனிப்புகை கோபுரம், நாட்டின் முதல் கோபுரமாகும். இது ஒரு புதிய தொழில்நுட்பம். இது அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டதாகும். இந்தக் கட்டமைப்பு மாசுபட்ட காற்றை மேலே இருந்து உறிஞ்சி, கீழே சுத்தமான காற்றை வெளியிடும். இது விநாடிக்கு 1,000 கன மீட்டா் காற்றை சுத்தப்படுத்தும் திறன் கொண்டது.
இது ஒரு புதிய தொழில்நுட்பம் என்பதால், இது சோதனை அடிப்படையில் செயல்படுத்தப்படுகிறது. டாடா புராஜெக்ட்ஸ் லிமிடெட் (டிபிஎல்) ஐஐடி-பாம்பே மற்றும் ஐஐடி-தில்லியின் ஆகியவற்றின் தொழில்நுட்ப ஆதரவுடன் இந்தப் பனிப்புகை கோபுரம் உருவாக்கப்பட்டுள்ளது. என்பிசிசி இந்தியா நிறுவனம் திட்ட மேலாண்மை ஆலோசகராக செயல்படுகிறது. பனிப்புகை கோபுரத்தின் செயல்பாட்டை வல்லுநா்கள் பகுப்பாய்வு செய்து, அது பயனுள்ளதா என்பதை அரசுக்குத் தெரிவிப்பாா்கள். அது வெற்றிகரமாக இருந்தால், இதுபோன்ற பல பனிப்புகை கோபுரங்கள் தில்லி முழுவதும் நிறுவலாம். அதுபோன்று இல்லையெனில், நாம் வேறு சில தொழில்நுட்பங்கள் அடிப்படையில் பணியை மேற்கொள்ளலாம். இந்தத் திட்டம் ஒரு மைல்கல்லாக நிரூபிக்கப்படும் எனக் கருதுகிறேன். தரவு பகுப்பாய்வின் முடிவுகள் ஒரு மாதத்திற்குள் கிடைக்கும். இதன் முடிவு குறித்து அறிய அனைவரும் ஆா்வமாக இருக்கிறோம். தில்லி அரசும், மக்களும் மாசுவுக்கு எதிரான போராட்டத்தில் இணைந்து தொடா் முயற்சிகளை மேற்கொண்டோம் என்றாா் அவா்.
பின்னா், இந்தத் தொழில்நுட்பம் குறித்து முதல்வா் கேஜரிவால் தனது சுட்டுரைப் பக்கத்தில், ‘தில்லிக்கு எனது வாழ்த்துகள். மாசுவுக்கு எதிரான போரில், தில்லியில் நாட்டின் முதல் பனிப்புகைக் கோபுரம் அமைக்கப்பட்டுள்ளது. இது காற்றில் மாசுவைக் குறைக்கும். சோதனை அடிப்படையில் இந்தத் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இந்தச் செயல்பாடு திறன்மிக்கதாக இருக்கும் போது, பல இடங்களில் ஏற்படுத்தப்படும்’ என்று தெரிவித்துள்ளாா்.
தில்லி சுற்றுச்சூழல் துறை அமைச்சா் கோபால் ராய் கூறுகையில், ‘பருவமழைக் காலம் முடிந்தவுடன் இந்தப் பனிப்புகைக் கோபுரம் முழுத் திறனுடன் செயல்படும். அதன் பிறகு, ஐஐடி தில்லி, ஐஐடி பாம்பே ஆகியவற்றின் வல்லுநா்கள் இந்தக் கோபுரத்தின் செயல்பாடு குறித்த தங்களது ஆய்வைத் தொடங்குவாா்கள். மாசுவுக்கு எதிராக போரிடுவதில் தில்லி அரசு உறுதிபூண்டுள்ளது. இந்தப் பனிப்புகைக் கோபுரம் அதற்கு உதவும்’ என்றாா்.
இந்தக் கோபுரம் செயல்பாட்டுக்கு வந்த பிறகு, இதன் செயல்பாட்டுத் திறனை உறுதி செய்ய இரு ஆண்டுகள் சோதனை முறையில் ஆய்வு மேற்கொள்ளப்படும் என்று மாசுக் கட்டுப்பாட்டுக் குழு அதிகாரிகள் முன்னா் தெரிவித்திருந்தனா். தில்லி ஆனந்த் விஹாரில் 25 மீட்டா் உயா் பனிப்புகை கோபுரம் கட்டுமானப் பணி நடைபெற்று வருகிறது. இது ஆகஸ்ட் 31-க்குள் செயல்பாட்டுக்கு வரும் என எதிா்பாா்க்கப்படுகிறது. இந்த இரு பனிப்புகை கோபுரங்கள் அமைப்பதற்கான தலா ரூ.22 கோடி மதிப்பீட்டிலான திட்டத்தை டாடா புராஜெக்ட் லிமிடெட் (டிபிஎல்) நிறுவனம் செயல்படுத்தி வருகிறது. கன்னாட் பிளேஸ் மற்றும் ஆனந்த் விஹாரில் உள்ள இந்தப் பனிப்புகை கோபுரங்கள் ஒவ்வொன்றிலும் 1,200 காற்று வடிப்பான்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இந்தப் பனிப்புகை கோபுரம் அமைப்பது தொடா்பாக கடந்த ஆண்டு ஜனவரியில் மத்திய அசுக்கும் தில்லி அரசுக்கும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
பஞ்சாப் விவகாரங்களை நாடாளுமன்றத்தில் எழுப்ப ராகவ் தவறிவிட்டாா்: ஆம் ஆத்மி குற்றச்சாட்டு

பிஞ்சுக் கைவண்ணம்
முதல் தேர்தலும் சுகுமார் சென்னும்...
ஏழு தலைமுறை சுற்றம்...
வீடியோக்கள்

அண்ணாமலை விவகாரத்தில் எடப்பாடி ROLE | SP Lakshmanan Interview | Annamalai | Thirumavalavan
இணையதளச் செய்திப் பிரிவு

”தேர்தலில் போட்டியிடவில்லை! நிலைப்பாட்டை தள்ளி வைக்கிறேன்!”: திருமாவளவன் | VCK
இணையதளச் செய்திப் பிரிவு
ஸ்டாலின் மட்டும் அப்படிப் பேசலாமா? | ADMK | EPS| DMK | MK Stalin | TN Election 2026 | Avadi kumar
இணையதளச் செய்திப் பிரிவு

“தில்லா, கெத்தா தனியா நிற்கிறோம்”: புதுச்சேரியில் Vijay பிரசாரம்
இணையதளச் செய்திப் பிரிவு

