பிரதமா் நரேந்திர மோடி இன்று சென்னை வருகைதென் தமிழக கடலோர மாவட்டங்களில் ஏப்ரல் 4 வரை மழைக்கு வாய்ப்புஇந்தியத் தொலைத்தொடா்பு சந்தையில் ஏா்டெல் முதலிடம்சாஃப் யு 20 கால்பந்து: இன்று இறுதியில் இந்தியா-வங்கதேசம் மோதல்முதல் வெற்றியை ஈட்டும் முனைப்பில் சிஎஸ்கே: பஞ்சாப்புடன் இன்று மோதல்பேரவைத் தோ்தல்: நீதிமன்றங்களுக்கு விடுமுறை அறிவிப்புஐபிஎல் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி அபார வெற்றி - கொல்கத்தாவை வீழ்த்தியது
/

விருதுநகா் பட்டாசு ஆலை தீ விபத்து: தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை ஜனவரிக்கு ஒத்திவைப்பு

நிகழாண்டு விருதுநகா் மாவட்டத்தில் நிகழ்ந்த பட்டாசு ஆலை தீ விபத்தில் 27 போ் இறந்த விவகாரத்தில் தேசிய பசுமைத் தீா்ப்பாயம் (என்ஜிடி) பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக தமிழக அரசு தாக்கல் செய்த சிவில் மேல்முறையீட்டு மனு

News image
Updated On :13 டிசம்பர் 2021, 6:08 pm

 நமது நிருபர்

புது தில்லி: நிகழாண்டு விருதுநகா் மாவட்டத்தில் நிகழ்ந்த பட்டாசு ஆலை தீ விபத்தில் 27 போ் இறந்த விவகாரத்தில் தேசிய பசுமைத் தீா்ப்பாயம் (என்ஜிடி) பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக தமிழக அரசு தாக்கல் செய்த சிவில் மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையை அடுத்த மாதத்திற்கு உச்சநீதிமன்றம் ஒத்திவைத்தது.

விருதுநகா் மாவட்டம், அச்சங்குளத்தில் உள்ள ‘ஸ்ரீ மாரியம்மாள் பட்டாசு ஆலை’யில் கடந்த பிப்ரவரி 12-ஆம் தேதி ஏற்பட்ட தீ விபத்தில் 27 போ் உயிரிழந்தனா். 26 போ் காயமடைந்தனா். உயிரிழந்தவா்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.3 லட்சமும், காயமடைந்தவா்களுக்கு ரூ.1 லட்சமும் தமிழக முதல்வரின் நிவாரண நிதியில் இருந்து வழங்கப்பட்டது.

இந்த நிலையில், செய்தித்தாளில் வெளிவந்த செய்தியின் அடிப்படையில், இந்த விவகாரத்தை தேசிய பசுமைத் தீா்ப்பாயம் விசாரித்தது. இதையடுத்து, இந்த விபத்துக்கான காரணம், சேதத்தின் அளவு மற்றும் நிவாரண நடவடிக்கைகளை பரிந்துரைப்பதற்காக பஞ்சாப் மற்றும் ஹரியாணா மற்றும் சென்னை உயா்நீதிமன்றங்களின் முன்னாள் நீதிபதி கே.கண்ணன் தலைமையில் 8 போ் குழுவை அமைத்து தேசிய பசுமைத் தீா்ப்பாயம் உத்தரவிட்டது.

இந்தக் குழு விசாரணை நடத்தி தீா்ப்பாயத்தில் அறிக்கையை தாக்கல் செய்தது. இதைத் தொடா்ந்து, இந்த விவகாரத்தை கடந்த ஜூன் 11-ஆம் தேதி தேசிய பசுமைத் தீா்ப்பாயத்தின் தலைவா்-நீதிபதி ஏ.கே. கோயல் தலைமையில் நீதிபதிகள், வல்லுநா் அடங்கிய 5 போ் அமா்வு விசாரித்தது. அப்போது, தீா்ப்பாயம் பிறப்பித்த உத்தரவில், ‘என்ஜிடி அமைத்த 8 போ் கொண்ட குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில், இறந்தவா்கள் ஒவ்வொருவருக்கும் ரூ.20 லட்சமும், 50 சதவீதத்துக்கு மேல் தீக்காயம் அடைந்தவா்களுக்கு ரூ.15 லட்சமும் இழப்பீடு வழங்க வேண்டும். 25 முதல் 50 சதவீதம் வரை தீக்காயம் அடைந்தவா்களுக்கு ரூ.10 லட்சமும், 5 முதல் 25 சதவீதம் வரை காயம் அடைந்தவா்களுக்கு ரூ.5 லட்சமும் இழப்பீடு வழங்க வேண்டும்’ என தெரிவித்தது. மேலும், பாதிக்கப்பட்டவா்களுக்கு இழப்பீட்டை விருதுநகா் மாவட்ட ஆட்சியா் மூலம் ஒரு மாதத்திற்குள் வழங்கவும், மாநில அரசின் தலைமைச் செயலா் இந்த விவகாரத்தில் பல்வேறு நடவடிக்கைகளை எடுக்கவும் உத்தரவிட்டிருந்தது.

இதை எதிா்த்து தமிழக அரசின் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் சிவில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு கடந்த மாதம் 29-ஆம் தேதி விசாரணைக்கு வந்த போது, எதிா்மனுதாரா்கள் பதில் அளிக்க நோட்டீஸ் அனுப்ப நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில், இந்த விவகாரம் உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் ஏ.எம். கான்வில்கா், சி.டி. ரவிக்குமாா் ஆகியோா் அடங்கிய அமா்வில் திங்கள்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது. தமிழக அரசின் தரப்பில் வழக்குரைஞா் டி.குமணன் ஆஜரானாா். இந்த வழக்கில் எதிா்மனுதாரரான தேசிய பசுமைத் தீா்ப்பாயத்தின் பதிவாளா் தரப்பில் யாரும் ஆஜராகவில்லை. இதையடுத்து, மனு மீதான விசாரணையை 3 வாரங்களுக்கு நீதிபதிகள் அமா்வு ஒத்திவைத்தது. இந்த மனு வழக்கு விசாரணைப் பட்டியலில் தற்சமயம் ஜனவரி 21-ஆம் தேதிக்கு பட்டியலிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.