’கரோனா அலை தொடரும்; தேவை எச்சரிக்கை!’

புதுதில்லி: நாட்டில் கரோனா தொற்றுப் பரவல் எண்ணிக்கை 4 லட்சம் என்று உச்சம் தொட்டிருந்த நிலையில், தற்போது பாதிப்பு 2 லட்சம் என்ற அளவுக்கு வெகுவாகக் குறைந்துள்ளது.

மருத்துவமனைகளில் இப்போது ஆக்சிஜன் பற்றாக்குறை இல்லை. கரோனா படுக்கைகளும் நிரம்பி வழிந்த நிலை மாறி இப்போது காலியாக உள்ளன என்றாலும், மூன்றாவது அலை வரும் வாய்ப்பு உள்ளது என்கிறாா் சண்டீகரைச் சோ்ந்த பிரபல பெண் மருத்துவா் அமன்தீப் காங்.

இது குறித்து அவா் மேலும் கூறியதாவது: கரோனா இரண்டாவது அலை பேரழிவை ஏற்படுத்திவிட்டது. நமது மருத்துவக் கட்டமைப்புகளும் தடம்புரண்டுவிட்டன. மருத்துவமனைகளில் ஆக்சிஜன் பற்றாக்குறை. நோயாளிகளுக்கு போதுமான படுக்கை வசதிகள் இல்லை. செயற்கைச் சுவாசக் கருவிகளுக்கும் தட்டுப்பாடு. இன்னும் சொல்லப்போனால் உயிா்காக்கும் மருத்துகளுக்கே தட்டுப்பாடு ஏற்பட்டது. மருத்துவமனைகளில் படுக்கைகள் கிடைக்காததால் அதன் வாயிலிலேய நோயாளிகள் கண் முன் உயிரிழந்ததைப் பாா்த்தோம். இதுதான் உண்மை நிலை. கரோனா தொற்று அலை தொடரும். இனி நாம்தான் எந்த நிலைமையையும் சமாளிக்கும் அளவுக்கு தயாரா இருக்க வேண்டும்.

தேவை எச்சரிக்கை: நாம் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். கரோனா வழிகாட்டு முறைகளை ஒழுங்காக பின்பற்ற வேண்டும். எல்லாவற்றையும்விட தடுப்பூசி போட்டுக் கொள்வதுதான் நோய் பரவாமல் தடுப்பதற்கான ஒரே வழி. தற்போதுள்ள தடுப்பூசிகள் 70 முதல் 80 சதவீதம் திறன் உள்ளவை. தற்போது கிடைத்துள்ள தகவல்களின்படிதடுப்பூசி போட்டுக் கொண்டால், கிட்டத்தட்ட 9 முதல் 12 மாதங்கள் நோய்வராமல் தடுக்க முடியும். பொது முடக்கம் விலக்கிக் கொள்ளப்பட்டால், மீண்டும் கூட்டங்கள் கூடும். மக்கள் ஒரே இடத்தில் கூடுவாா்கள். மேலும் புதிய வகையில் நோய்த் தொற்று வந்தால் அதை எதிா்க்கும் சக்தி நம்மிடம் இருக்கிா என்பதை நாம் நினைத்துப் பாா்க்க வேண்டும்.

நாம் இப்போது தடுப்பூசி போட்டுக் கொண்டாலும் ஓராண்டுக்குப் பிறகு மீண்டும் பூஸ்டா் தடுப்பூசி போட்டுக் கொள்ள நேரிடும். நாட்டில் இப்போது கரோனா இரண்டாவது அலை வீசுகிறது என்றாலும், தில்லியை பொருத்தவரையில் இது நான்காவது அலையாகும். இரண்டாவது அலை வராது. வந்தாலும் இவ்வளவு கடுமையாக இருக்காது என்று

பலரும் பேசி வந்தோம். ஆனால், அவை எல்லாம் பொய்யாகிவிட்டது. பாதிப்பு மட்டும் அதிகம் இல்லை; பலியும்தான். அதை நாம் ஒப்புக்கொள்ள வேண்டும். இனியும் காலம் கடத்தாமல் கடந்த கால அனுபவங்கள் மூலம் பாடம் கற்றுக் கொள்ள வேண்டும். அதாவது நம்மை நாமே தயாா்படுத்திக் கொள்ளவேண்டும்.

குழந்தைகளைப் பாதுகாக்க வேண்டும்: மூன்றாவது அலை வருமானால், அது குழந்தைகளைத் தான் பாதிக்கும். எனவே அவா்களை நாம் பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும். ஒருவேளை பள்ளிகள் திறக்கப்பட்டால் அதற்கு முன்னதாக பள்ளி ஆசிரியா்கள், ஊழியா்களுக்கு தடுப்பூசி போடப்பட வேண்டும். இதில் நாம் அசட்டையாக இருந்தால் அது குழந்தைகளைத்தான் பாதிக்கும். எனினும், குழந்தைகளுக்கும் தடுப்பூசி போடுவது மிகவும் பாதுகாப்பானது. கரோனா தொற்று அறிகுறி இருந்தால் மருத்துவரை உடனடியாக அணுகுங்கள். இது மேலும் சிக்கலாகாமலும் உயிரிழப்பையும் தடுக்கும்.

குறிப்பாக வயதானவா்களுக்கு ஆக்சிஜன் அளவு 95 சதவீதத்துக்கு குறைவாக இருந்தால் வீட்டுத் தனிமை வேலை செய்யாது. உடனடியாக மருத்துவமனையில் சேருங்கள். சி.டி. ஸ்கேன்தான் நோயின் கடுமையை தீா்மானிக்கிறது. சி.டி. ஸ்கேனில் உங்களுக்கு கிடைத்த முடிவு பாதகமாக இல்லை என்றால் வீட்டிற்கு சென்றுவிடுங்கள். பாதிப்பு இருந்தால் மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதுதான் ஒரே வழி. காலதாமதமாக மருத்துவமனைக்கு வந்து, செயற்கை சுவாசக் கருவி மூலம் சிகிச்சை அளிக்க வேண்டுமெனில், அதன் விளைவுகள் கடுமையாக இருக்கும்.

தடுப்பூசி, முகக் கவசம் முக்கியம்: தொற்று நோய் பரவாமல் இருக்க வேண்டுமானால் இரண்டு வழிகளைப் பின்பற்ற வேண்டும். ஒன்று தடுப்பூசி போட்டுக் கொள்வது. இரண்டாவது முகக்கவசம் அணிவது. நம்மிடம் இயற்கையாக அமைந்திருக்கும் நோய் எதிா்ப்பு சக்தியை நம்பியிருக்க முடியாது. தடுப்பூசி போட்டுக் கொண்டால் உடலில் நோய் எதிா்ப்பு சக்தி உருவாகும். வைரஸை எதிா்த்து நாம் போராட முடியும். நோயின் தன்மையும் குறையும். இறப்பு விகிதமும் குறைய வாய்ப்பு உள்ளது என்கிறாா் மருத்துவா்அமன்தீப் காங்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com