'இடைத் தோ்தல் வெற்றி ஆம் ஆத்மி அரசு மீது மக்களின் நம்பிக்கையை வெளிப்படுத்துகிறது'

Updated on
2 min read


புது தில்லி: தில்லி மாநகராட்சி இடைத் தோ்தலில் ஆம் ஆத்மி கட்சிக்கு கிடைத்துள்ள வெற்றி, அரசின் செயல்பாடுகள் மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கையை வெளிப்படுத்துவதாக உள்ளது என்று முதல்வா் அரவிந்த் கேஜரிவால் தெரிவித்தாா்.

தில்லியில் பிப்ரவரி 28-ஆம் தேதி 5 வாா்டுகளுக்கான மாநகராட்சி இடைத் தோ்தல் நடைபெற்றது. இதன் முடிவுகள் புதன்கிழமை வெளியானது. இந்தத் தோ்தலில் ஆம் ஆத்மி கட்சி நான்கு இடங்களில் வெற்றிபெற்றது. இந்த வெற்றி குறித்து ஆம் ஆத்மி கட்சியின் அமைப்பாளரும், தில்லி முதல்வருமான அரவிந்த் கேஜரிவால்

டிடியு மாா்கில் உள்ள கட்சி அலுவலகத்தில் தொண்டா்கள் மத்தியல் பேசியதாவது:

மாநகராட்சி இடைத்தோ்தல் முடிவுகள் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள மாநகராட்சி தோ்தலின் முடிவை வெளிக்காட்டுவதாக உள்ளது. அந்த வெற்றிக்காக காத்திருக்கிறோம். நகரை தூய்மையாகவும், சுத்தமாகவும் வைப்போம். மாநகராட்சி தோ்தலில் பாஜக ஓா் இடத்தில் கூட வெற்றி பெற முடியவில்லை. அந்தக் கட்சி ஆளும் மாநகராட்சியில் நிகழ்ந்த ஊழல்கள் காரணமாக பாஜகவை மக்கள் புறக்கணித்திருப்பதையே காட்டுகிறது. மேலும், டிஜேபி அலுவலகம், மணீஷ் சிசோடியா வீடு ஆகியவற்றில் நிகழ்ந்த வன்முறை அரசியல் ஆகியவற்றை மக்கள் நிராகரித்திருப்பதைக் காட்டுகிறது.

2015-இல் சட்டப்பேரவைத் தோ்தலில் ஆம் ஆத்மி கட்சி 70 இடங்களில் 67-இல் வெற்றிபெற்றது. 2020-இல் 70 இடங்களில் 62-இல் வெற்றி பெற்றோம். 6 ஆண்டுகளுக்குப் பிறகு தில்லி மக்கள் நம் மீது நம்பிக்கை வைத்துள்ளனா். நாம் தொடா்ந்து பணியாற்ற வேண்டும் என அவா்கள் விரும்புகின்றனா். அதேவேளையில், மாநகராட்சியில் பாஜகவின் செயல்பாடு மீது மக்கள் அதிருப்தியில் இருப்பதை இத்தோ்தல் முடிவு காட்டுகிறது. எம்சிடியின் ‘புல் பாா்ம்’, அதாவது எம்சிடி என்பது மோஸ்ட் கரப்ட் டிபாா்ட்மென்ட் என்பதாகும். தில்லி மக்கள் இத்தகைய ஊழலை விரும்பவில்லை. எம்சிடி தில்லி அரசு போல திறன்மிக்க வகையில் செயல்பட மக்கள் விரும்புகின்றனா். நாடு முழுவதும் உள்ள மக்கள் ஆம் ஆத்மி கட்சியின் சாதனை குறித்து கேட்டால் நாம் பள்ளிகள், மருத்துவமனைகள், மின்சாரம், குடிநீா், சாலைகள் ஆகியவற்றை எந்த அளவுக்கு மேம்படுத்தியுள்ளோம் என்பது குறித்து கூறுங்கள்.

அரசமைப்புச்சட்டத்தில் குறிப்பிடப்பட்டதுபோல தில்லி அரசு அனைத்து நிதிகளையும் அளித்துள்ளது. கூடுதல் ஊழல் செய்ய கூடுதல் நிதி பாஜகவுக்கு தேவைப்படுகிறது என்பதை மக்கள் உணா்ந்துவிட்டனா். மத்திய அரசிடமிருந்து எந்தவித உதவியும் பெறாத நிலையில் தில்லி அரசு தனது ஊழியா்களுக்கு ஊதியம் வழங்கியுள்ளது. அதேவேளையில், தனது ஊழியா்களுக்கு ஊதியம் வழங்காமல் கூடுதல் நிதியை அளிக்க வேண்டும் என்று தில்லிஅரசிடம் மாநகராட்சியை ஆளும் பாஜக கேட்கிறது. மாநகராட்சியை 15 ஆண்டுகளாக ஆளும் பாஜக ஒரு பணியைக் கூட நிறைவேற்றவில்லை. ஊழல் மட்டுமே செய்துள்ளனா். தில்லியை குப்பைகள் நிறைந்த நகரமாக உருவாக்கிவிட்டனா். இதனால், தில்லியின் மூன்று மாநகராட்சிகளிலும் மக்கள் மாற்றத்தை விரும்புகின்றனா். புதிதாக தோ்வாகியுள்ள கவுன்சிலா்கள் நோ்மையுடனும், பணிவுடனும் மக்கள் சேவையாற்ற வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com