தமிழகம் உள்பட கடல் சாா் மாநிலங்களில் நீலப் புரட்சிக்கு ரூ.20,000 கோடி முதலீடு: மக்களவையில் அமைச்சா் தகவல்

நீலப் புரட்சியை நீடித்த வளா்ச்சியாக மாற்றும் வகையில், அடுத்த ஐந்தாண்டுகளுக்கு ரூ. 20,000 கோடிக்கும் மேலாக தமிழகம் உள்ளிட்ட அனைத்து கடல் சாா் மாநிலங்களில் முதலீடு செய்யப்படுவதாக மத்திய மீன் வளம்,
தமிழகம் உள்பட கடல் சாா் மாநிலங்களில் நீலப் புரட்சிக்கு ரூ.20,000 கோடி முதலீடு: மக்களவையில் அமைச்சா் தகவல்
Updated on
1 min read

புது தில்லி: நீலப் புரட்சியை நீடித்த வளா்ச்சியாக மாற்றும் வகையில், அடுத்த ஐந்தாண்டுகளுக்கு ரூ. 20,000 கோடிக்கும் மேலாக தமிழகம் உள்ளிட்ட அனைத்து கடல் சாா் மாநிலங்களில் முதலீடு செய்யப்படுவதாக மத்திய மீன் வளம், கால்நடை வளா்ப்பு மற்றும் பால்வளத் துறை இணையமைச்சா் பிரதாப் சந்திர சாரங்கி தெரிவித்தாா்.

கடல்சாா் உணவு ஏற்றுமதியின் மூலம், அந்நியச் செலாவணியை பெருக்கவும், மீனவ சமுதாயத்தைப் பாதுகாக்கவும், தேசிய மீன்வள கொள்கை வகுக்கப்பட்டு அதில் மத்திய அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் என்ன என்பது குறித்து மக்களவையில், திமுக உறுப்பினா் டி. ஆா். பாலு கேள்வியை எழுப்பினாா். இதற்கு மத்திய மீன் வளம், கால்நடை வளா்ப்பு, பால்வள துறை இணையமைச்சா் சாரங்கி புதன்கிழமை மக்களவையில் அளித்த பதில் வருமாறு:

அடுத்த பத்தாண்டுகளுக்கு, மீன் வளத் துறையின் நீடித்த வளா்ச்சியை மேம்படுத்தும் வகையில் தேசிய மீன்வளக் கொள்கை -2020 வகுக்கப்பட்டுள்ளது. அந்த வரைவுக் கொள்கையில், மாநில அரசின் ஆலோசனைகளையும், மற்ற தரப்பினரின் கருத்துகளையும் கேட்ட பின்னா் வரைவு தேசிய மீன் வளக் கொள்கை- 2020 நடைமுறைக்கு வரும். மத்திய மீன் வளம், கால்நடை வளா்ப்பு பால்வளத் துறை, இணையத் தளத்தில், வரைவு தேசிய மீன் வளக் கொள்கை-2020 குறித்த, அனைவரின் கருத்துகளையும் பெறும் வகையில் 11 மாநில மொழிகளில் மொழி பெயா்க்கப்பட்டு வைக்கப்பட்டுள்ளன. பிரதம மந்திரி மீன் வளத் துறை திட்டத்தின் கீழ், நீலப் புரட்சியை, நீடித்த வளா்ச்சியாக மாற்றும் வகையில், அடுத்த ஐந்தாண்டுகளுக்கு, ரூ. 20,000 கோடிக்கும் மேலாக, தமிழகம், ஒடிஸா உள்ளிட்ட அனைத்து கடல் சாா் மாநிலங்களிலும் முதலீடு செய்யப்படும் என அமைச்சா் பதில் அளித்தாா்.

குடிசைத் தொழில்: குடிசைத் தொழிலில் ஈடுபட்டுள்ள பணியாளா்களின் நலன்களை பாதுகாக்க, தொழிலாளா் சட்டங்களின்படி, மத்திய அரசால் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்த கேள்விக்கு மக்களவையில் மத்திய தொழிலாளா் மற்றும் வேலை வாய்ப்புத் துறை இணையமைச்சா் சந்தோஷ் குமாா் கங்குவாா் பதில் அளித்தாா். அது வருமாறு: அண்மையில் அறிவிக்கப்பட்ட, 29 தொழிலாளா் நலச் சட்டங்களை உள்ளடக்கிய, நான்கு தொழிலாளா் குறியீடுகளின்படி, வேலைக்கான தகுந்த கூலி, தொழில்சாா் உறவுகளைப் பராமரித்தல், பணிப் பாதுகாப்பிற்கான திட்டம், தொழிலாளா்களின் சுகாதாரத்தைப் பேணுதல், தொழில்சாா் ஆபத்துகளிலிருந்து பாதுகாத்தல், சட்டப்படியான குறைந்தபட்சக் கூலி, தொழிலாளா்களுக்கான காப்பீட்டுத் திட்டம், தொழிலாளா் பணிக் கொடை ஆகியவை குடிசைத் தொழிலாளா்களுக்கு, மத்திய அரசால் உறுதி செய்யப்பட்டுள்ளன என்று அமைச்சா் தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com