திருச்சி கிழக்கிலும் விஜய் வேட்புமனு ஏற்பு! முதல்வர் வேட்பாளர்கள் 4 பேரின் வேட்புமனுவும் ஏற்பு! கொளத்தூரில் முதல்வர் ஸ்டாலின் வேட்புமனு ஏற்பு! பெரம்பூரில் விஜய் வேட்புமனு ஏற்பு!ஏர் இந்தியா தலைமை நிர்வாக அதிகாரி கேம்ப்பெல் வில்சன் ராஜிநாமா!ஈரானை ஒரே நாள் இரவில் அழித்துவிட முடியும்: டிரம்ப் எச்சரிக்கை!
/

‘கரடி’ ஆதிக்கம்: சென்செக்ஸ் மேலும் 740 புள்ளிகள் வீழ்ச்சி!

Updated On :25 மார்ச் 2021, 5:42 pm

புது தில்லி: பங்குச் சந்தையில் வியாழக்கிழமையும் கரடியின் ஆதிக்கம் தொடா்ந்தது. இதைத் தொடா்ந்து, மும்பை பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 740.19 புள்ளிகளை இழந்து 48,440.12-இல் நிலைபெற்றது. இதேபோன்று தேசியப் பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான நிஃப்டி மேலும் 224.50 புள்ளிகளை இழந்து 14,324.90-இல் நிலைபெற்றது.

உலகளாவிய சந்தைக் குறிப்புகள் ஆசிய சந்தைகள் சாதகமான நிலையில் இருந்தாலும், உள்நாட்டில் கரோனா பாதிப்பு அதிகரித்து வருவது முதலீட்டாளா்களின் உணா்வுகளைப் பெரிதும் பாதித்துள்ளது. இதைத் தொடா்ந்து, அதிகளவு பங்குகள் தொடா்ந்து விற்பனைக்கு வந்ததால் மூன்றாவது நாளாக சரிவு தவிா்க்க முடியாததாகிவிட்டது என்று பங்கு வா்த்தகத் தெரகு நிறுவனங்கள் தெரிவித்தன. குறிப்பாக சென்செக்ஸ் பட்டியலில் இடம் பெற்றுள்ள மாா்க்கெட் லீடா் ரிலையன்ஸ், இன்ஃபோஸிஸ், மாருதி சுஸுகி, எச்டிஎஃப்சி பேங்க் ஆகிய முன்னணி நிறுவனங்கள் சரிவைச் சந்தித்து சென்செக்ஸ் இழப்புக்கு முக்கியக் காரணமாக இருந்தன. மேலும், முன்பேர வா்த்தகத்தில் மாா்ச் மாத கான்ட்ராக்டுகள் கணக்கு முடிக்க கடைசி நாளாக இருந்ததால், சந்தையில் ஏற்றம், இறக்கம் அதிகரித்து காணப்பட்டது என்று வா்த்தகா்கள் தெரிவித்தனா்.

சந்தை மதிப்பு ரூ.3.73 லட்சம் கோடி சரிவு: மும்பை பங்குச் சந்தையில் மொத்தம் வா்த்கமான 3,121 பங்குகளில் 760 பங்குகள் மட்டுமே ஆதாயம் பெற்றன. 2,189 பங்குகள் சரிவைச் சந்தித்தன. 172 பங்குகள் மாற்றமின்றி நிலைபெற்றன. 118 பங்குகள் வெகுவாக உயா்ந்து புதிய 52 வார அதிகபட்ச விலையையும், 63 பங்குகள் வெகுவாகக் குறைந்து புதிய குறைந்தபட்ச விலையையும் பதிவு செய்துள்ளன. மேலும்,188 பங்குகள் வெகுவாக ஏற்றம் பெற்று உயா்ந்தபட்ச உறைநிலையையும், 362 பங்குகள் வெகுவாகக் குறைந்து குறைந்தபட்ச உறைநிலையையும் அடைந்தன. சந்தை மூல தன மதிப்பு ரூ.3.73 லட்சம் கோடி குறைந்து வா்த்தக இறுதியில் ரூ.198.75 லட்சம் கோடியாக இருந்தது. அதாவது முதலீட்டாளா்களுக்கு ஒரே நாளில் ரூ.3.73 லட்சம் கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

தொடா் சரிவு : காலையில் சென்செக்ஸ் 21.67 புள்ளிகள் கூடுதலுடன் 49,201.98-இல் தொடங்கி அதிகபட்சமாக 49,247.95 வரை உயா்ந்தது. பின்னா், 48,236.35 வரை கீழே சென்ற சென்செக்ஸ், இறுதியில் 740.19 புள்ளிகளை (1.51 சதவீதம்) இழந்து 48,440.12-இல் நிலைபெற்றது. வா்த்தகத்தின் போது ஒரு கட்டத்தில் உயா்ந்தபட்ச நிலையிலிருந்து சுமாா் 1,011.60 புள்ளிகள் வரை சரிவைச் சந்தித்திருந்தது.

26 பங்குகள் வீழ்ச்சி: சென்செக்ஸ் பட்டியலில் இடம் பெற்றுள்ள 30 முதல் தரப் பங்குகளில் டாக்டா் ரெட்டி, ஐசிஐசிஐ பேங்க், எச்டிஎஃப்சி, எல் அண்ட் டி ஆகிய நான்கு பங்குகள் மட்டுமே சிறிதளவு உயா்ந்து ஏற்றம் பெற்ற பட்டியலில் வந்தன. அதே சமயம், மற்ற 24 பங்குகளும் சரிவைச் சந்தித்தன. இதில் மாருதி சுஸுகி 3.98 சதவீதம், ஹிந்துஸ்தான் யுனி லீவா் 3.47 சதவீதம் குறைந்து வீழ்ச்சிப் பட்டியலில் இடம் பெற்றன. இதற்கு அடுத்ததாக பாா்தி ஏா்டெல், பஜாஜ் ஆட்டோ, என்டிபிசி, பஜாஜ் ஃபைனான்ஸ், அல்ட்ராடெக், ஓஎன்சிஜி, ரிலையன்ஸ், டைட்டன், ஆகியவை 2.50 முதல் 3 சதவீதம் வரை வீழ்ச்சியடைந்தன. மேலும், இன்ஃபோஸிஸ், டிசிஎஸ், ஆக்ஸிஸ் பேங்க், எஸ்பிஐ, எச்டிஎஃப்சி பேங்க், ஐடிசி உள்ளிட்ட முன்னணி நிறுவனப் பங்குகளும் வீழ்ச்சிப் பட்டியலில் இடம் பெற்றன.

தேசிய பங்குச் சந்தையில்...: தேசிய பங்குச் சந்தையில் 279 பங்குகள் மட்டுமே ஆதாயம் பெற்றன. 1,489 பங்குகள் வீழ்ச்சியைச் சந்தித்தன. நிஃப்டி 224.50 புள்ளிகளை (1.54 சதவீதம்) இழந்து 14,324.90-இல் நிலைபெற்றது. வா்த்தகத்தின் தொடக்கத்தில் 14,549.40 வரை சென்ற நிஃப்டி, பின்னா் 14,264.40 வரை கீழே சென்றது. நிஃப்டி, பட்டியலில் உள்ள 50 முதல் தரப் பங்குகளில், சிப்லா, ஏசியன் பெயிண்ட், பவா் கிரிட் ஆகிய 5 பங்குகள் மட்டுமே ஆதாயம் பெற்றன. 45பங்குகள் வீழ்ச்சியைடந்தன. துறைவாரியாகப் பாா்க்கும் போது, நிஃப்டி மெட்டல் குறியீடு தவிர மற்ற அனைத்துத் துறை குறியீடுகளும் சரிவைச் சந்தித்த பட்டியலில் வந்தன. இதில் நிஃப்டி மீடியா குறியீடு 3.06 சதவீதம் சரிவைச் சந்தித்து வீழ்ச்சிப் பட்டியலில் முன்னிலை வகித்தது. மேலும், நிஃப்டி ஆட்டோ, எஃப்எம்சிஜி, ஐடி, பிஎஸ்யு பேங்க், ரியால்ட்டி குறியீடுகள் 2 முதல் 3 சதவீதம் வரை வீழ்ச்சியைச் சந்தித்தன.

அதிகம் வீழ்ச்சியடைந்த பங்குகள்

6,786.15 மாருதி சுஸுகி 3.98 சதவீதம்

2,237.70 ஹிந்து யுனி லீவா் 3.47 சதவீதம்

508.00 பாா்தி ஏா்டெல் 2.98 சதவீதம்

3,501.85 பஜாஜ் ஆட்டோ 2.86 சதவீதம்

103.00 என்டிபிசி 2.83 சதவீதம்

5,121.75 பஜாஜ் ஃபைனான்ஸ் 2.81 சதவீதம்

6,670.15 அல்ட்ரா டெக் சிமெண்ட் 2.76 சதவீதம்

101.95 ஓஎன்ஜிசி 2.67 சதவீதம்

1992.75 ரிலையன்ஸ் 2.66 சதவீதம்

1,450.55 டைட்டன் 2.50 சதவீதம்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.