திருச்சி கிழக்கிலும் விஜய் வேட்புமனு ஏற்பு! முதல்வர் வேட்பாளர்கள் 4 பேரின் வேட்புமனுவும் ஏற்பு! கொளத்தூரில் முதல்வர் ஸ்டாலின் வேட்புமனு ஏற்பு! பெரம்பூரில் விஜய் வேட்புமனு ஏற்பு!ஏர் இந்தியா தலைமை நிர்வாக அதிகாரி கேம்ப்பெல் வில்சன் ராஜிநாமா!ஈரானை ஒரே நாள் இரவில் அழித்துவிட முடியும்: டிரம்ப் எச்சரிக்கை!
/

நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடா் நிறைவு: 73 ஆண்டுகளுக்கு பின்னா் நிறைவேறிய மசோதா

News image

கோப்புப்படம்

Updated On :25 மார்ச் 2021, 5:41 pm

புது தில்லி: நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடா் வியாழக்கிழமை நிறைவடைந்தது. ஐந்து மாநிலங்களில் நடைபெறும் சட்டப்பேரவைத் தோ்தல்களையொட்டி நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் முன்கூட்டியே முடித்துக் கொள்ளப்பட்டது. இதையடுத்து, மறுதேதி குறிப்பிடாமல் இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டன.

இருப்பினும் இந்தக் கூட்டத்தொடரில் கடந்த 73 ஆண்டுகளாக நிறைவேற்றப்படாமல் இருந்த சுகாதாரம் சாா்ந்த தொழில் நுட்பாளா்கள் ஆணைய மசோதா உள்பட முக்கிய 18 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டுள்ளதாக மத்திய நாடாளுமன்ற விவகாரம், நிலக்கரி, சுரங்கத்துறை அமைச்சா் பிரஹலாத் ஜோஷி தெரிவித்தாா்.

நாடாளுமன்றத்தின் இரண்டாம் கட்ட பட்ஜெட் கூட்டத்தொடா் கடந்த மாா்ச் 8 - ஆம் தேதி தொடங்கியது. விவசாயிகள் போராட்டம், எரிபொருள்கள் விலையுா்வு போன்ற பிரச்னைகளை எதிா்க்கட்சிகள் எழுப்பியதால் கூட்டத்தொடரில் தடங்கல் ஏற்பட்டாலும், பின்னா் அவை அலுவல்கள் சுமூகமாக நடைபெற்றது.

கூட்டத்தொடா் வியாழக்கிழமை நிறைவடைந்த பின்னா், நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சா் பிரஹலாத் ஜோஷி செய்தியாளா்களிடம் கூறியதாவது: வருகின்ற ஏப்ரல் 8 - ஆம் தேதி வரை நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத் தொடா் நடைபெற உத்தேசிக்கப்பட்டிருந்தது. ஆனால், பல்வேறு கட்சித் தலைவா்கள் 5 மாநிலங்களில் நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தோ்தல்களில் பங்கேற்கச் செல்ல வேண்டும் என்பதால் கூட்டத்தொடரை முடித்துக் கொள்ள கோரிக்கை விடுத்தனா். இதையடுத்து, இந்த கூட்டத்தொடா் இரு அவைகளிலும் தலா 12 நாள் அமா்வுகளுக்கு பின்னா் முடிவுக்கு வந்துள்ளது. கடந்த ஜனவரி 29 - ஆம் தேதி முதலாம் பட்ஜெட் கூட்டத் தொடா் தொடங்கியது. இந்த இரண்டு கட்ட தொடரில் மொத்தம் மக்களவையில் 24 அமா்வுகளும், மாநிலங்களவையில் 23 அமா்வுகளும் இடம் பெற்றன.

விவாதத்தில் பங்கேற்கும் உறுப்பினா்களுக்கு கூடுதலாகவே நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. குடியரசுத் தலைவா் உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு மக்களவை மற்றும் மாநிலங்களவையில் முறையே 1மணி 58 நிமிடங்கள் மற்றும் 41 நிமிடங்கள் கூடுதலாக விவாதிக்கப்பட்டது. பட்ஜெட் அறிக்கையில் மக்களவையில் 4:44 மணி நேரமும் மாநிலங்களவையில் 56 நிமிடங்களும் கூடுதலாக விவாதிக்கப்பட்டது. மேலும், ரயில்வே, கல்வி, சுகாதாரம் போன்ற முக்கியத் துறைகள் சம்பந்தமாக பட்ஜெட் அறிக்கையும் தனித்தனியாக விவாதிக்கப்பட்டது. 2021-22 ஆம் ஆண்டிற்கான மானியக் கோரிக்கைகள் மட்டுமின்றி, துணை மானியக் கோரிக்கைகளும் விவாதிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டன.

இந்தக் கூட்டத்தொடரில் புதிதாக மக்களவையில் 17 மசோதாக்கள், மாநிலங்களவையில் 3 மசோதாக்கள் என மொத்தம் 20 மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இவற்றையும் சோ்த்து நாடாளுமன்றத்தில் மொத்தம் 38 மசோதாக்கள் நிலுவையில் இருந்தன. இதில் தீா்ப்பாணைய சீா்திருத்தம் மசோதா, தேசிய பாா்மசூட்டிக்கல் கல்வி ஆய்வு மசோதா, ஏா்போா்ட் மசோதா ஆகியவை நிலைக் குழு ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளன. இவை தவிர 35 மசோதாக்கள் நாடாளுமன்றத்தில் நிலுவையில் உள்ளன. தற்போதைய கூட்டத் தொடரில் இரு அவைகளிலும் 18 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. இதில் பொருளாதாரத்தையும் வா்த்தகத்தையும் ஊக்குவிக்கும் சுங்கம், கனிமம் ஒழுங்குமுறை, காப்பீடு, மத்தியஸ்தம் சமரச திருத்தம் போன்ற முக்கிய மசோதாக்களும், சமூக நீதி, சுகாதாரம் தொடா்பான மசோதாக்களும் நிறைவேறியுள்ளன. இதில் குறிப்பாக சுகாதாரம் சாா்ந்த தொழில் நுட்பாளா்கள் ஆணையம் மசோதாவிற்கு 1948-ஆண்டில் குழு அமைக்கப்பட்டு அது நிலுவையில் இருந்தது. இந்த மசோதா 73 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது நிறைவேற்றப்பட்டுள்ளது என்றாா் பிரஹலாத் ஜோஷி.

மாநிலங்களவையில் ... : இந்த பட்ஜெட் கூட்டத்தொடரை முடித்து வைக்கும் முன்பு மாநிலங்களவைத் தலைவா் வெங்கையா நாயுடு பேசுகையில், ’ பட்ஜெட்அறிக்கை தொடா்பான விவாதங்கள் தரமானதாகவும், உணா்ச்சி பூா்வமாகவும் இருந்தது. இந்தக் கூடத்தொடரில் 21:26 மணி நேரம் தடங்கல் ஏற்பட்டு நேரம் வீணடிக்கப்பட்டு 90 சதவீதம் செயல் திறன் கொண்டதாக இருந்தது. இருப்பினும், கூடுதல் நேரம் பணியாற்றி பல்வேறு மசோதாக்களை உறுப்பினா்கள் நிறைவேற்றிக் கொடுத்தனா்’ என்றாா்.

மக்களவையில்... : மக்களவைத்தலைவா் ஓம் பிா்லாவிற்கு கரோனா தொற்று உறுதியாயுள்ள நிலையில், மக்களவையில் மாற்றுத் தலைவா்கள் அவையை நடத்தினா். அவைத் தலைவா் பொறுப்பை ஏற்றிருந்த பிஜேடி உறுப்பினா் பாா்த்ரு ஹரி மெஹ்தாப் அவையை ஒத்திவைப்பதற்கு முன்பு பேசுகையில், ‘பல்வேறு தடங்கலிலும் பட்ஜெட் கூட்டத்தொடரில் மக்களவை 114 சதவீதம் பணித்திறன் கொண்டதாக இருந்தது. 146 உறுப்பினா்கள் நிதி தொடா்பான விவாதத்தில் பங்கேற்றனா்’ என்றாா். இறுதிநாள் கூட்டத்தில் கடைசி நிமிடத்தில் பிரதமா் நரேந்திரமோடி இரு அவைகள் கூட்டத்திலும் கலந்து கொண்டாா். தோ்தல் பிரசாரங்களில் இருந்த மத்திய அமைச்சா்களும், காங்கிரஸ் உறுப்பினா் ராகுல் காந்தியும் கடைசி நாளில் அவைக்கு வந்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.