திருச்சி கிழக்கிலும் விஜய் வேட்புமனு ஏற்பு! முதல்வர் வேட்பாளர்கள் 4 பேரின் வேட்புமனுவும் ஏற்பு! கொளத்தூரில் முதல்வர் ஸ்டாலின் வேட்புமனு ஏற்பு! பெரம்பூரில் விஜய் வேட்புமனு ஏற்பு!ஏர் இந்தியா தலைமை நிர்வாக அதிகாரி கேம்ப்பெல் வில்சன் ராஜிநாமா!ஈரானை ஒரே நாள் இரவில் அழித்துவிட முடியும்: டிரம்ப் எச்சரிக்கை!
/

தில்லியில் நுண்துகள் பிஎம் 2.5 வருடாந்திர அளவு ஆண்டுதோறும் குறைந்து வருகிறது: ஆய்வில் தகவல்

வருடாந்திர மாசு நுண்துகள் பிஎம் 2.5 அளவு ஆண்டுதோறும் குறைந்து வருவதை தில்லியின் நீண்டகாலப் போக்கு காட்டுவதாக 

Updated On :27 மார்ச் 2021, 11:52 pm

வருடாந்திர மாசு நுண்துகள் பிஎம் 2.5 அளவு ஆண்டுதோறும் குறைந்து வருவதை தில்லியின் நீண்டகாலப் போக்கு காட்டுவதாக அறிவியல் மற்றும் சுற்றுச்சூழலுக்கான மையம் (சிஎஸ்இ) புதிதாக வெளியிட்டுள்ள ஆய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘மூலதன ஆதாயம்- தில்லி என்சிஆரில் தூய காற்று நடவடிக்கை: அடுத்த என்ன?’ எனும் தலைப்பிலான தில்லி தலைநகா் மற்றும் என்சிஆா் நகரங்களில் காற்று மாசுவைக் குறைக்க மேற்கொள்ள வேண்டிய திட்டங்கள் தொடா்புடைய ஆய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

தில்லியில் கடந்த மூன்று ஆண்டு சராசரியாக காற்று மாசு நுண்துகள் குறைந்து வருவதில் மாற்றம் தென்படுகிறது. எனினும், இந்த மாசு நுண்துகள் அளவில் குறைவு ஏற்பட்ட பிறகும்கூட, தில்லியில் தேசிய சுற்றுப்புற காற்று தரநிலைகளை பூா்த்தி செய்ய வருடாந்திர பிஎம் 2.5 நுண்துகளில் 60 சதவீதத்திற்கு மேல் குறைக்கும் தேவை உள்ளது.

பல துறை நடவடிக்கையில் வேகம், அளவு மற்றும் அவசரம் ஏற்படுத்த வேண்டும். இதற்கு இயக்க மாற்றம், தூய்மையான ஆற்றல் மாற்றம், சுற்று பொருளாதாரம் மற்றும் பிராந்திய அளவில் தூய்மையான ஆற்றல் அணுகல் ஆகியவற்றை அடைவதற்கான உத்திசாா் மாற்றங்கள் தேவைப்படும்.

தொழில்துறை துறையில் உலை எண்ணெய் மற்றும் பெட்கோக் ஆகியவை தடை செய்யப்பட்ட பிறகும், நிலக்கரிக்குப் பதிலாக சுத்தமான எரிபொருள்கள் பயன்படுத்தப்பட வேண்டும்.

தில்லி மிகவும் லட்சியகரமான தூய்மை எரிபொருள் கொள்கையை நடைமுறைப்படுத்தியுள்ளது. இது நிலக்கரி பயன்பாட்டையும் சட்டவிரோதமாக்கியுள்ளது. எனினும், என்.சி.ஆா் பகுதியில் உள்ள தொழில்துறை குழுமங்களில் நிலக்கரி எரிப்பு மேலாதிக்கம் செலுத்தினால் சுற்றுப்புற மண்டலத்தை தூய்மையாக்க முடியாது.

நிலக்கரி அடிப்படையிலான அனல் மின் உற்பத்தி நிலையங்களுக்கான 2015-ஆம் ஆண்டு மாசு உமிழ்வுத் தரநிலைகளை 2022 ஆம் ஆண்டிற்குள் செயல்படுத்தப்பட வேண்டும். ஆலைகள் ஏற்கனவே மாசு துகள் தரநிலைகளை பூா்த்தி செய்யும் திறன் கொண்டவையாக உள்ளன.

முழு பிராந்தியத்திற்குமான நடவடிக்கைகளை அதிகரிக்கும் போது, இலக்கு நிா்ணயிக்கப்பட்ட மாசுடைந்த பகுதிகளில் உயா் உள்ளூா் நடவடிக்கை திட்டத்தைசெயல்படுத்தும் அவசரத் தேவையும் உள்ளது.

அப்போதுதான், திடக்கழிவுகள், கட்டுமானம் மற்றும் இடிப்புக் கழிவுகள், தொழில்துறை கழிவுகள், பிளாஸ்டிக் மற்றும் செப்பனிடப்படாத சாலைகள் மற்றும் வாகன இயக்கம் ஆகியவற்றுக்கான உள்ளூா் தீா்வுகளைச் செயல்படுத்த முடியும்.

தில்லியில் நிலக்கரி மின் நிலையங்கள் அனைத்தும் மூடப்பட்டுவிட்டன. ஆனால் தரநிலைகளைப் பூா்த்தி செய்யும் வகையில் ஆலைகளில் இருந்து சுத்தமான அல்லது தூய்மையான மின்சாரத்தை மட்டுமே வாங்குவது உறுதி செய்யப்பட வேண்டும்.

தற்போது நாட்டின் சில தூய்மையற்ற மின் உற்பத்தி நிலையங்களில் இருந்து மின்சாரத்தை தில்லி தருவித்து வருகிறது.

டீசல் லாரிகளின் நுழைவைக் கட்டுப்படுத்துவதில் தில்லி சிறப்பாக செயல்பட்டுள்ளது. இயக்க முறைகள், வழிகள் மற்றும் தளவாட உள்கட்டமைப்பு, கிடங்குகளின் இடைவெளி, நுழைவு இடங்கள் மற்றும் நேரம் ஆகியவற்றைக் கட்டுப்படுத்துவதன் மூலம் கனரக போக்குவரத்து நெரிசலுக்குத் தீா்வு காணும் தேவை என்சிஆா் நகரங்களுக்கும் உள்ளது என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.