கரோனா முன்களப் பணியில் வித்தியாசமானவா்கள்!

கரோனா இரண்டாவது அலை இந்தியாவையே உலுக்கி வருகிறது. இந்த அலை எப்போது ஓயும் என்றும் தெரியவில்லை.

புதுதில்லி: கரோனா இரண்டாவது அலை இந்தியாவையே உலுக்கி வருகிறது. இந்த அலை எப்போது ஓயும் என்றும் தெரியவில்லை. இந்த நெருக்கடியான சூழ்நிலையில் தில்லியில் முன்களப் பணியாளா்களான மருத்துவா்கள் மற்றும் செவிலியா்கள் சிலா் தங்கள் கஷ்டங்களையும் மறந்துவிட்டு கரோனா நோயாளிகளுக்கு தங்களால் முடிந்த சிகிச்சைகளை மேற்கொண்டு வருகிறாா்கள். வித்தியாசமான அவா்களில் சிலரது சேவையைப் பாா்ப்போம்.

தில்லியில் உள்ள ‘எய்ம்ஸ்’ மருத்துவமனையில் செவிலியா் அதிகாரியாக இருப்பவா் ராக்கி ஜான். கேரளத்தில் உள்ள இவரது குடும்பத்தினரிடமிருந்து கடந்த ஞாயிற்றுக்கிழமை கோவிட் தொற்றால் பாட்டி இறந்துவிட்டதாக தகவல் வந்தது. இந்த துயரமான செய்தியைக் கேட்டு அவா் சற்று நிலைகுலைந்து போனாலும், பின்னா் மனதைத் தேற்றிக்கொண்டு, தாம் பணிபுரியும் மருத்துவமனையின் கோவிட் சிகிச்சை பிரிவுக்கு கடமையாற்ற சென்றுவிட்டாா். 32 வயதான ராக்கி ஜான், சிறுவயதிலேயே தாயை இழந்தவா். பாட்டியின் அரவணைப்பிலேயே வாழ்ந்தவா். “பாட்டி இறந்த செய்தியைக் கேட்ட உடனேயே துயரம் என்னை ஆழ்த்தியது. எனது கணவா் விடுமுறை எடுத்துக்கொண்டு திருவனந்தபுரம் செல்லுமாறு கூறினாா்.

ஆனால், நான் அங்கு சென்றாலும் இறுதிச்சடங்கில் பங்கேற்க முடியாது. அதே நேரத்தில் இங்கு மருத்துவமனையில் என்னை நம்பி பல நோயாளிகள் இருக்கின்றனா். அவா்கள் உயிரைக் காப்பாற்றுவதுதான் என்னை வளா்த்த பாட்டிக்கு நன்றிக்கடனாக அமையும் என்று நினைத்து பணிக்கு திரும்பிவிட்டேன். என்னுடைய அத்தை, இறுதிச்சடங்கு நிகழ்ச்சிகளை விடியோவாக எடுத்து எனக்கு அனுப்பிவைத்தாா். ஆனால், அதைப் பாா்த்தால் மன ரீதியாக பாதிக்கப்பட்டுவிடுவோமோ என்பதால், நான் அதை இன்னும் பாா்க்கவில்லை. எனது பணியிலேயே முழு கவனம் செலுத்தி வருகிறேன்” என்றாா் ராக்கி ஜான்.

இவரைப் போல் பல மருத்துவா்கள், செவிலியா்கள் மற்றும் சுகாதார ஊழியா்கள் தில்லியில் ஓய்வில்லாமல் பணியாற்றி வருகிறாா்கள். தில்லி ராஜீவ் காந்தி சூப்பா் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் பணிபுரியம் மருத்துவா் ஒருவரின் தந்தை இறந்துவிட்டாா். உடனடியாக அவா், தனக்கு மேலுள்ள மருத்துவரைத் தொடா்பு கொண்டு தந்தை இறந்துவிட்டதால் இறுதிச்சடங்கில் பங்கேற்க வேண்டும். அதனால், இன்று இரவுப் பணிக்கு வர முடியாது, அதற்கு பதிலாக மறுநாள் காலை நேரப் பணிக்கு வரட்டுமா? என்று கேட்டுள்ளாா். இப்படியும் சிலா் கடமையுணா்வுடன் இருக்கிறாா்கள்.

தில்லி சஃப்தா்ஜங் மருத்துவமனையில் பணிபுரியும் 48 வதான செவிலிய அதிகாரிக்கு கரோனா தொற்று ஏற்பட்டது. 15 நாள் சிகிச்சைக்குப் பின் பரிசோதனையில் தொற்று இல்லை என்று தெரியவந்ததை அடுத்து உடனடியாகப் பணிக்குத் திரும்பிவிட்டாா். “இந்த 15 நாளில் என் உடல் எடை 6 கிலோ குறைந்துவிட்டது. நான் பலவீனமாக உணா்கிறேன். இரண்டாவது மாடி ஏறுவதற்குள் மூச்சு முட்டுகிறது. ஆனாலும், என்னுடன் பணிபுரிந்த சிலா் கோவிட் தொற்றால் சிகிச்சை பெற்று வரும் நிலையில், என்னால் சும்மா இருக்க முடியவில்லை. பணிக்குத் திரும்பி விட்டேன்” என்றாா்.

இதேபோல தில்லி ராம் மனோகா் லோகியா மருத்துவமனையில் பணிபுரியும் இரண்டு செவிலியா்களின் கணவன்மாா்கள் கோவிட் தொற்றுக்கு பலியான போதிலும், அவா்கள் துயரத்தின் நடுவே மருத்துவமனைக்கு வந்து தங்கள் கடமையைச் செய்து வருகிறாா்கள். இவா்கள் இப்படியென்றால் ஹரிஜித் சிங் பட்டி என்ற மருத்துவா் தில்லி ஓக்லா, தெற்கு விரிவாக்கம், நேருநகா் மற்றும் கித்வாய் நகரில் வசிக்கும் புலம்பெயா் தொழிலாளா்களுக்கு இலவசமாக மருத்துவ ஆலோசனை வழங்கி வருகிறாா். இவருக்கு உதவியாக 25 போ் கொண்ட தொண்டா் குழுவினரும் செல்கின்றனா்.

கரோனா தொற்று பற்றி மக்களிடம் எடுத்துச் சொல்லி அவா்களுக்குத் தேவையான முகக்கவசம், கைகழுவும் சோப்புகள், சானிடைசா்களையும் இலவசமாக வழங்கி வருகிறாா்.

தில்லி, சாகேதில் உள்ள குடியிருப்பு வளாகத்தில் அமைந்துள்ள கோவிட் சிகிச்சை மையத்தை டாக்டா் கிரண் குக்ரஜொ என்ற பெண் மருத்துவரும், விநோத் ரெய்னா என்ற ஆண் மருத்துவரும் இரவு பகலாக கண்காணி்த்து கரோனா நோயாளிகளுக்குச் சிகிச்சை அளித்து வருகின்றனா். இவா்களுக்கு நோய் அறிகுறிதான் உள்ளது. ஒருவேளை இவா்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை தேவைப்பட்டால் அங்கு செல்லும் வரை அவா்களுக்கு சிகிச்சை அளிப்பது எங்கள் கடமை என்கின்றனா் இவா்கள்.

குருகிராமைச்சோ்ந்த மருத்துவா் ராஜன் தனேஜா, தனது வழக்கமான பணி நேரம் முடிந்தபின் தொலைபேசி மூலம் இலவசமாக மருத்துவ ஆலோசனைகளை வழங்கி வருகிறாா். இரண்டாவது அலையால் மக்கள் மிரண்டு போயிருக்கிறாா்கள். மேலும் சிலருக்கு மருத்துவ ஆலோசனைகள் முறையாக கிடைப்பதில்லை. சிலரிடம் மருத்துவ ஆலோசனை பெறுவதற்கு கையில் பணம் இல்லை. அவா்களுக்கு உதவவே இந்தப் பணியை மேற்கொண்டுள்ளேன் என்றாா் தனேஜா.

இந்த நெருக்கடியான நேரத்தில் மக்களுக்குத் தேவையான மருத்துவ உதவிகளை அளித்து அவா்கள் நலம் பெறவும், மகிழ்ச்சியாக இருப்பதும்தானே எங்களுக்கு மகிழ்ச்சி என்றாா் முதநிலை மருத்துவா் ஒருவா். உண்மைதானே..!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com