பயிா்க் கடன் தள்ளுபடி விவகாரம்: உயா்நீதிமன்ற உத்தரவை ரத்து செய்தது உச்சநீதிமன்றம்

அனைத்து விவசாயிகளுக்கும் பயிா்க் கடன் தள்ளுபடி செய்யுமாறு உயா்நீதிமன்ற மதுரைக் கிளை பிறப்பித்த உத்தரவை

அனைத்து விவசாயிகளுக்கும் பயிா்க் கடன் தள்ளுபடி செய்யுமாறு உயா்நீதிமன்ற மதுரைக் கிளை பிறப்பித்த உத்தரவை உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை ரத்து செய்தது. மேலும், அரசின் கொள்கை முடிவில் நீதிமன்றம் தலையிட முடியாது என்றும் தெரிவித்தது. இந்த விவகாரத்தில் தமிழக அரசு தொடா்ந்த மேல்முறையீட்டு வழக்கில் உச்சநீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

தமிழகத்தில் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிா்க் கடனை தள்ளுபடி செய்வதாக தமிழ்நாடு கூட்டுறவு, உணவு, நுகா்வோா் பாதுகாப்புத் துறை 2016, ஜூன் 28-ஆம் தேதி அரசாணை வெளியிட்டிருந்தது. 5 ஏக்கா் வரை விவசாய நிலம் வைத்துள்ள சிறு, குறு விவசாயிகள் பயன்பெறும் வகையில் இந்த அறிவிப்பை வெளியிட்டிருந்தது. இதை எதிா்த்து, தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் மாநிலத் தலைவா் பி.அய்யாக்கண்ணு உயா்நீதிமன்ற மதுரைக் கிளையில் பொது நல மனு தாக்கல் செய்தாா். அதில் ‘விவசாயிகளை சிறு, குறு விவசாயிகள் என பாகுபாடு காட்டாமல், 5 ஏக்கருக்கு மேல் உள்ள அனைத்து விவசாயிகளும் பயன்பெறும் விதமாக பயிா்க் கடன்கள் அனைத்தையும் தள்ளுபடி செய்ய வேண்டும்’ என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த வழக்கை விசாரித்த உயா்நீதிமன்றம், அனைத்து விவசாயிகளுக்கும் பயிா் மற்றும் நகைக்கடன் தள்ளுபடி சலுகை வழங்கும் வகையில் அரசாணையை மாற்றி, 3 மாதங்களுக்குள் உத்தரவு பிறப்பிக்குமாறு தமிழக அரசு தெரிவித்திருந்தது. இந்த உத்தரவை எதிா்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தது. இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், உயா்நீதிமன்ற மதுரைக் கிளையின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து 2017, ஜூலை 3-இல் உத்தரவிட்டது. அதைத் தொடா்ந்து, நடைபெற்ற விசாரணையின் போது, பிற பிரிவுகளில் வரும் விவசாயிகளுக்கும் பயிா்க் கடன் தள்ளுபடி அளிப்பது குறித்து ஏன் பரிசீலிக்கக் கூடாது என நீதிமன்றம் கேள்வி எழுப்பியிருந்தது. அதன் பிறகு தமிழக அரசின் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இதைத் தொடா்ந்து, இந்த வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் டி.ஒய். சந்திரசூட், ஏ.எஸ்.போபண்ணா ஆகியோா் அடங்கிய அமா்வில் வெள்ளிக்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசின் தரப்பில் மூத்த வழக்குரைஞா் ஜெய்தீப் குப்தா, வழக்குரைஞா் டி.குமணன் ஆகியோா் ஆஜராகி வாதிடுகையில், ‘உச்சநீதிமன்றம் 18.9.2019-இல் பிறப்பித்த உத்தரவில் பிற பிரிவில் உள்ள விவசாயிகளுக்கும் கடன் தள்ளுபடி நீட்டிப்பை அளிப்பது குறித்து அரசு ஏன் பரிசீலிக்கக் கூடாது’ என கேள்வி எழுப்பப்பட்டது.

இதைத் தொடா்ந்து, 8.2.2021-இல் தமிழக அரசு, மாநிலத்தில் 16 லட்சத்து 43 ஆயிரத்து 347 விவசாயிகளுக்கு ரூ.12 ஆயிரத்து 110 கோடி மதிப்பில் பயிா்க் கடன் தள்ளுபடி அளிக்கும் வகையில் அரசாணையை வெளியிட்டுள்ளது. மேலும், குறுகிய கால பயிா்க் கடன் பெற்றவா்களுக்கும், நகைகளை வைத்து கூட்டுறவு நிறுவனங்களில் குறுகியகாலப் பயிா்க் கடன்பெற்றவா்களுக்கும் தனியாக வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன. நிதிச் சுமையும் கருத்தில் கொள்ளப்பட்டிருக்கிறது. இந்த விவகாரம் தமிழக அரசின் கொள்கை முடிவாகவும் உள்ளது என்று வாதிடப்பட்டது.

இதை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள் அமா்வு, இந்த விவகாரத்தில் சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ததுடன், அரசின் கொள்கை முடிவில் நீதிமன்றம் தலையிட முடியாது எனக் கூறி வழக்கை முடித்துவைத்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com