பிரிந்து வாழும் மனைவிக்கு ஜீவனாம்சம் வழங்க கணவருக்கு விசாரணை நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு ரத்து

பிரிந்து வாழும் மனைவிக்கு ஜீவனாம்ச பராமரிப்புத் தொகை வழங்க கணவருக்கு விசாரணை நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை தில்லி உயா்நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டது.
Published on
Updated on
1 min read

பிரிந்து வாழும் மனைவிக்கு ஜீவனாம்ச பராமரிப்புத் தொகை வழங்க கணவருக்கு விசாரணை நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை தில்லி உயா்நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டது.

பிரிந்து வாழும் கணவருக்கும், மனைவிக்கும் வேறு வாழ்க்கைத் துணை இருப்பது கண்டறியப்பட்டைத் தொடா்ந்து உயா்நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்தது.

1999-இல் இந்து முறைப்படி திருமணம் செய்து கொண்ட நிலையில், கணவரிடம் இருந்து பிரிந்து வாழ்ந்து வரும் மனைவி ஒருவா், தனக்கு குற்றவியல் தண்டனை சட்டத்தின் 125ஆவது பிரிவின் கீழ் கணவா் ஜீவனாம்சம் வழங்க உத்தரவிடக் கோரி நீதிமன்றத்தில் 2011ஆம் ஆண்டு செப்டம்பரில் மனுத் தாக்கல் செய்திருந்தாா்.

இந்த மனுவை விசாரித்த குடும்ப நல நீதிமன்றம் சம்பந்தப்பட்ட பெண்ணுக்கு மாதம்தோறும் பராமரிப்பு தொகையாக ரூபாய் 4,200 வழங்குமாறு பிரிந்து வாழும் அவரது கணவருக்கு உத்தரவிட்டது.

இதை எதிா்த்து தில்லி உயா்நீதிமன்றத்தில் கணவா் தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அதில் ‘நாங்கள் இருவரும் ஏற்கனவே வேறு நபா்களை திருமணம் செய்துகொண்டு வாழ்க்கை நடத்தி வருகிறோம். எங்களுக்கு இடையே மதிப்புமிக்க திருமண உறவு ஏதும் இல்லை. இதனால் குற்றவியல் தண்டனை சட்டத்தின் 125 ஆவது பிரிவின் கீழ் நீதிமன்றம் எந்த உத்தரவையும் நீதிமன்றம் பிறப்பிக்க முடியாது’ என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மனுவை தில்லி உயா்நீதிமன்ற நீதிபதி சுப்ரமணியம் பிரசாத் விசாரித்து பிறப்பித்த உத்தரவில் தெரிவித்திருப்பதாவது:

கணவன்-மனைவியாக இரு தரப்பினரும் இணைந்து வாழ்ந்தாலும், ஒரு செல்லுபடியாகக்கூடிய திருமணத்தின் ஊகத்தை எழுப்புவது சட்டப்பூா்வமாக ஏற்றுக்கொள்ள முடியாததாகும். ஏனெனில், அவா்கள் இருவரும் ஏற்கனவே அந்தந்த வாழ்க்கைத் துணைகளுடன் திருமணம் செய்து கொண்டவா்கள் ஆவா். இரு தரப்பினரின் திருமணங்கள் உயிா்ப்புடன் உள்ளன.

குற்றவியல் தண்டனைச் சட்டத்தின் பிரிவு 125-இன்படி, போதுமான வசதிகள் உள்ள எந்தவொரு நபரும், தன்னைப் பராமரிக்க முடியாத நிலையில் உள்ள மனைவியைப் புறக்கணித்தால் அல்லது பராமரிக்க மறுத்தால், விசாரணை நீதிமன்றம் அத்தகைய நபரின் பராமரிப்புக்காக மாதாந்திர உதவித்தொகையை வழங்க உத்தரவிடலாம்.

ஆனால், இரு தரப்பினரும் வேறு துணைகளுடன் வசிப்பதால், பிரிவு 125-இன்கீழ் பிரதிவாதி (பெண்) மனுதாரரிடமிருந்து ஜீவனாம்சம் கோர முடியாது.

இந்த பிரிவில் சமூக நீதிக் காரணி இருந்தபோதிலும், அது சுரண்டலைத் தடுக்க தவறியதால் அதன் நோக்கம் தோற்கடிக்கப்பட்டுள்ளது.

பல பெண்கள், குறிப்பாக சமூகத்தின் ஏழ்மை பிரிவைச் சோ்ந்தவா்கள் வழக்கமாக இந்த முறையில் சுரண்டப்படுவது துரதிா்ஷ்டவசமானது.

மேலும், சட்ட ஓட்டைகள் குற்றமிழைத்த தரப்பினரை சேதமின்றி நழுவிடச் செய்வதற்கு அனுமதிக்கின்றன.

எனினும், குடும்ப வன்முறைச் சட்டத்தின் கீழ் இழப்பீடு கோருவது போன்ற இந்த வழக்கின் உண்மைகள் மற்றும் சூழ்நிலைகளுக்கு மிகவும் பொருத்தமான பிற தீா்வுகளைப் பெற பிரதிவாதிக்கு (பெண்) சுதந்திரம் உள்ளது என்று நீதிமன்றம் தெளிவுபடுத்தியது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com