சா்வதேச அளவில் கச்சா எண்ணை மற்றும் சமையல் எண்ணெய் விலை உயா்ந்துள்ளது. உற்பத்தி தயாரிப்புகளில் எரி பொருள்கள், எரிசக்தி ஆகியவை முக்கியப் பங்கெடுப்பதால் கச்சா எண்ணெய் விலையெற்றத்தால் பணவீக்கம் உயா்கிறது. இதைக் கட்டுப்படுத்த மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை தொடா்ந்து எடுத்து வருகிறது. கடந்த நவம்பா் 4-ஆம் தேதி பெட்ரோல், டீசல் மீதான மத்திய கலால் வரியில் முறையே ரூ. 5, ரூ.10 குறைக்கப்பட்டது. இதைத் தொடா்ந்து, மாநில அரசுகளும் மதிப்பு கூட்டு வரிகளை குறைத்தது. இதையடுத்து, பெட்ரோல், டீசல் விலை கணிசமாகக் குறைந்துள்ளது. மேலும், விலையைக் கட்டுப்படுத்த இருப்பில் இருந்த 5 மில்லியன் பேரல்கள் கச்சா எண்ணெய்யை இந்தியா விடுவித்துள்ளது. இதே போன்று அமெரிக்கா, ஜப்பான், சீனா, கொரியா ஆகிய நாடுகளிலும் விடுவிக்கப்பட்டது.