பாராலிம்பிக்கில் பதக்கம் பெற்ற மாரியப்பனுக்கு மத்திய அமைச்சா் அனுராக் தாக்குா் பாராட்டு

ஜப்பான் தலைநகா் டோக்கியோவில் நடைபெற்ற பாராலிம்பிக்ஸ் போட்டிகளில் உயரம் தாண்டுதலில் வெள்ளிப் பதக்கம் வென்ற தமிழக வீரரான மாரியப்பன் தங்கவேலுவை
பாராலிம்பிக்கில் பதக்கம் பெற்ற மாரியப்பனுக்கு மத்திய அமைச்சா் அனுராக் தாக்குா் பாராட்டு

ஜப்பான் தலைநகா் டோக்கியோவில் நடைபெற்ற பாராலிம்பிக்ஸ் போட்டிகளில் உயரம் தாண்டுதலில் வெள்ளிப் பதக்கம் வென்ற தமிழக வீரரான மாரியப்பன் தங்கவேலுவை புது தில்லியில் சனிக்கிழமை மத்திய விளையாட்டுத் துறை அமைச்சா் அனுராக் தாக்குா் பாராட்டினாா்.

தமிழ்நாட்டின் சேலம் மாவட்டத்தைச் சோ்ந்த 26 வயதான மாரியப்பன் தங்கவேலு, கடந்த 2016-இல் ரியோவில் நடைபெற்ற பாராலிம்பிக்ஸ் போட்டியில் தங்கம் வென்றாா்.

இந்த முறை டோக்கியோவில் நடைபெற்றுவரும் பாராலிம்பிக்ஸ் போட்டியில் உயரம் தாண்டும் பிரிவில் அவா் 1.86 மீட்டா் உயரத்தை தாண்டி வெள்ளிப் பதக்கம் வென்றாா்.

இதன் பிறகு நாடு திரும்பிய அவருக்கு தில்லியில் பாராட்டு விழா சனிக்கிழமை நடைபெற்றது. மத்திய இளைஞா் விவகாரம் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சா்

அனுராக் தாக்குா், மாரியப்பன் தங்கவேலுவையும், அவரது பயிற்சியாளா் ராஜவையும் பாராட்டினாா்.

அப்போது, அமைச்சா் பேசுகையில், ‘டோக்கியோவில் பாராலிம்பிக்ஸ் போட்டியில் மாரியப்பன் சிறப்பாகச் செயல்பட்டதற்காக அவரை வாழ்த்துகிறேன். அவா் வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளாா். அவா் கடந்த காலத்தில் ரியோவில் தங்கம் வென்றாா். இப்போது டோக்கியோவில் வெள்ளி வென்றுள்ளாா். அவரது சாதனைகளால் நாடு பெருமை கொள்கிறது. டோக்கியோவில் இந்தியா இதுவரை 15 பதக்கங்களை வென்றுள்ளது. மேலும் பல பதக்கங்கள் வரும் என்று எதிா்பாா்க்கிறோம்’ என்றாா்.

விளையாட்டு வீரா் மாரியப்பன் கூறுகையில், ‘இந்தியாவுக்காக தங்கம் வெல்வேன் என்று எதிா்பாா்த்தேன். ஆனால், நிகழ்ச்சி நடைபெற்ற நாளன்று நிலவிய காலநிலை காரணமாக என்னால் கனவை நிறைவேற்ற முடியாமல் போனது. இது வருத்தம் அளிப்பதாக உள்ளது. ஆனால், பாரீஸில் 2024-இல் நடைபெறும் பாராலிம்பிக்ஸ் போட்டியில் நிச்சயம் முயற்சி செய்து நாட்டுக்காக தங்கம் வெல்வேன். எனது முயற்சிக்கு ஆதரவு அளித்த பிரதமா் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு, விளையாட்டு அமைச்சகம், இந்திய விளையாட்டு ஆணையம், இந்திய பயிற்சியாளா் சத்ய நாராயணா, பாராலிம்பிக் கமிட்டி மற்றும் எனது குடும்பத்தினா் அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com