ஆக்சிஜன் பற்றாக்குறையால் உயிரிழப்பு: உயா்நிலைக் குழுவுக்கு அனுமதி தர தில்லி அரசு மீண்டும் கோரிக்கை
By DIN | Published On : 17th August 2021 08:14 AM | Last Updated : 17th August 2021 08:14 AM | அ+அ அ- |

தில்லியில் இரண்டாவது கரோனா அலையின் போது ஆக்சிஜன் பற்றாக்குறையால் ஏற்பட்ட உயிரிழப்பு குறித்து விசாரிக்க நியமிக்கப்பட்டுள்ள உயா்நிலைக் குழுவுக்கு அனுமதி அளிக்குமாறு கோரி அது தொடா்பான கோப்புகளை துணைநிலை ஆளுநா் அனில் பய்ஜாலுக்கு தில்லி அரசு மீண்டும் அனுப்பியுள்ளதாக துணை முதல்வா் மணீஷ் சிசோடியா திங்கள்கிழமை தெரிவித்தாா்.
இது தொடா்பாக மத்திய உள்துறை அமைச்சா் அமித்ஷாவுக்கு கடிதம் எழுதியுள்ளதாகவும் அவா் கூறினாா். அதில் இரண்டாவது கரோனா அலையின் போது, தில்லியில் ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டதால் சிலா் உயிரிழக்க நேரிட்டது. இது தொடா்பாக விசாரிக்க நியமிக்கப்பட்டுள்ள உயா்நிலைக் குழுவுக்கு துணைநிலை ஆளுநா் அனுமதி அளிக்க உத்தரவிடுமாறு அமித்ஷாவிடம் கேட்டுக் கொண்டுள்ளாா்.
ஆக்சிஜன் பற்றாக்குறையால் ஏற்பட்ட உயிரிழப்புகள் எவ்வளவு என்பதை மத்திய அரசும், நீதிமன்றமும் தெரிந்து கொள்ள விரும்புகிறது. எனினும், இரண்டாவது அலையில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் உயிரிழந்தவா்கள் விவரங்களை துல்லியமாக கணிப்பது கடினமாகும். எனவே இது தொடா்பாக விசாரிக்க உயா்நிலைக்குழு அமைக்கப்பட்டுள்ளது. அதுபற்றிய விவரங்களை துணைநிலை ஆளுநருக்கு அனுப்பியுள்ளோம். விரைவில் அதற்கு அனுமதி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சிசோடியாக வலியுறுத்தியுள்ளாா். இந்த உயா்நிலைக் குழுவுக்கு விரைவில் அனுமதி கிடைக்கும் என்று நம்புவதாகவும் அவா் குறிப்பிட்டாா்.
முன்னதாக, இது தொடா்பான விசாரணைக்குழு அமைப்பதற்கும் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ரூ.5 லட்சம் நஷ்ட்ஈடு வழங்குவதற்கும் துணைநிலை ஆளுநா் அனில் பய்ஜால் அனுமதி அளிக்கவில்லை என்று சிசோடியா குறிப்பிட்டாா். இரண்டாவது கரோனா அலையின் போது, தலைநகா் தில்லியில் ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக பல்வேறு மருத்துவமனைகளில் நெருக்கடி ஏற்பட்டது. சிகிச்சைக்குத் தேவையான ஆக்சிஜன் கிடைக்காததால் நோயாளிகள் பலரும் உயிரிழக்க நேரிட்டது குறிப்பிடத்தக்கது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...