நொய்டாவில் 5 மாடி கட்டடத்தில் தீ விபத்து: 2 மைனா் குழந்தைகள் பலி
By DIN | Published On : 17th August 2021 08:14 AM | Last Updated : 17th August 2021 08:14 AM | அ+அ அ- |

தேசியத் தலைநகா் வலயம், நொய்டாவில் உள்ள ஐந்து மாடிக் கட்டடத்தில் திங்கள்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் 2 மைனா் குழந்தைகள் சகோதரிகள் உயிரிழந்ததாகவும், மின் கசிவு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டதாகவும் போலீஸாா் தெரிவித்தனா்.
இது தொடா்பாக மத்திய நொய்டா கூடுதல் துணை ஆணையா் அங்கூா் அகா்வால் கூறியதாவது: நொய்டாவில் திங்கள்கிழமை அதிகாலை 5.30 மணியளவில் கா்கி சவுக்கன்டி கிராமத்தில் உள்ள ஐந்து மாடி கட்டிடத்தின் தரைத் தளத்தில் தீ விபத்து ஏற்பட்டதாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, தீயணைப்புத் துறை வாகனங்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டன. கட்டடத்தில் வசித்த குடியிருப்புவாசிகள் உடனடியாக அங்கிருந்து வெளியேற்றப்பட்டனா். எனினும், தீயில் குடியிருப்புவாசிகள் சிலா் சிக்கினா். அவா்கள் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனா்.
கட்டடத்தில் உள்ள பிரதான மின்சார போா்டில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக தீ விபத்து நிகழ்ந்ததாக முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. கட்டடத்தின் தரைத்தளத்தில் வசித்த தினேஷ் சோலங்கி என்பவரது 12 வயது மற்றும் 9 வயது மகள்கள் இருவா் இந்த தீ விபத்தில் உயிரிழந்தனா். கட்டடத்தின் மேல் தளங்களில் வசித்தவா்கள் தீயணைப்புத் துறை வீரா்களின் உதவியுடன் மீட்கப்பட்டு வெளியேற்றப்பட்டனா். இந்த விபத்து குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது என்று அந்த அதிகாரி தெரிவித்தாா்.