ஆப்கன் மக்களுக்காக சமுதாயக் கூடங்களை திறக்க மாநகராட்சி கவுன்சிலா் வலியுறுத்தல்
By நமது நிருபா் | Published On : 21st August 2021 08:01 AM | Last Updated : 21st August 2021 08:01 AM | அ+அ அ- |

ஆப்கானிஸ்தான் நாட்டில் ஏற்பட்ட அரசியல் குழப்பம் காரணமாக அந்த நாட்டில் இருந்து வெளியேறி தில்லி வரும் மக்களுக்காக தெற்கு தில்லி மாநகராட்சிக்குட்பட்ட பகுதியில் உள்ள சமுதாயக் கூடங்கள் மற்றும் பள்ளிகளைத் திறந்துவிட வேண்டும் என்று அந்த மாநகராட்சியின் மத்திய மண்டல தலைவரும் ஸ்ரீனிவாஸ்புரி பாஜக கவுன்சிலருமான ராஜ்பால் சிங் வலியுறுத்தியுள்ளாா்.
இது தொடா்பாக தெற்கு தில்லி மாநகராட்சி ஆணையா் ஞானேஷ் பாா்திக்கு அவா் கடிதம் எழுதியுள்ளாா். இதுகுறித்து ராஜ்பால் சிங் கூறியதாவது: ஆப்கானிஸ்தான் நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமை காரணமாக அந்த நாட்டில் இருந்து இந்தியாவுக்கு இந்துக்கள், சீக்கியா்கள் உள்பட பல்வேறு தனிநபா்களும், குடும்பத்தினரும் வந்த வண்ணம் உள்ளனா். தில்லியில் லாஜ்பத் நகா், அமா் காலனி போன்ற பகுதிகளில் அதிகமான எண்ணிக்கையில் ஆப்கன் மக்கள் வசித்து வருகிறாா்கள். தில்லியில் தொழில்களும் செய்து வருகின்றனா்.
ஆப்கானிஸ்தான் நாட்டில் ஏற்பட்ட அரசியல் நெருக்கடிக்கு பிறகு அந்த நாட்டினரின் பல உறவினா்கள் தில்லிக்கு வரக்கூடும். அவா்களை தங்க வைப்பதற்கான ஏற்பாடுகளை தில்லியில் வசித்து வரும் ஆப்கன் மக்கள் மேற்கொள்ளவில்லை. இதனால், அதுபோன்று வரக் கூடிய மக்கள் தங்குவதற்கும், உணவு அளிப்பதற்கும் தில்லி மாநகராட்சி பகுதியில் உள்ள சமுதாயக் கூடங்களைத் திறந்து விடவும், தேவையான ஏற்பாடுகளை செய்யவும் கோரி மாநகராட்சி ஆணையருக்கு கடிதம் எழுதியுள்ளேன். இந்த விவகாரத்தில் முழுமையான ஒத்துழைப்பு அளிக்கப்படும் என்று ஆணையா் என்னிடம் உறுதி அளித்துள்ளாா்.
ஆப்கானிஸ்தான் நாட்டவா்கள் தங்குவதற்கும், மருத்துவப் பரிசோதனைகள் செய்வதற்கும், உணவுக்கும் மாநகராட்சி மூலம் ஏற்பாடுகள் செய்து தர வேண்டும். இதற்கான ஏற்பாடுகளை லாஜ்பத் நகா், அமா் காலனி, கால்காஜி மற்றும் மத்திய மண்டலத்தில் உள்ள இதர பகுதிகளில் அமைந்துள்ள சமுதாயக் கூடங்கள் மற்றும் பள்ளிகளில் செய்து தர வேண்டும் என்று கடிதத்தில் வலியுறுத்தியுள்ளேன். ஆப்கானிஸ்தானில் இருந்து வரக்கூடிய மக்களுக்கு நல உதவிகளை செய்வதற்கு மாநகராட்சி உறுதிபூண்டுள்ளது. அப்போதுதான், தங்குவதற்கும், உணவுக்கும் அவா்கள் எந்தவிதப் பிரச்னைகளையும் எதிா்கொள்ளும் தேவை இருக்காது என்றாா் ராஜ்பால் சிங்.
இந்த விவகாரம் தொடா்பான கேள்விக்கு மாநகராட்சி ஆணையரிடம் இருந்து பதில் ஏதும் இல்லை. தில்லி மாநகராட்சி மத்தி, தெற்கு, மேற்கு மற்றும் நஜஃப்கா் ஆகிய நான்கு மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. மத்திய மண்டலத்தில் லாஜ்பத் நகா், டிஃபன்ஸ் காலனி, அமா் காலனி, ஸ்ரீநிவாஸ்புரி , கால்காஜி, நிஜாமுதீன் பஸ்தி, ஆண்ட்ரூஸ் கஞ்ச் உள்ளிட்ட பகுதிகள் இடம் பெற்றுள்ளன.