ஓட்டுநா் உரிமம், பதிவுச் சான்றிதழை இணையதளத்தில் வைத்திருக்கலாம்: தில்லி போக்குவரத்து துறை அறிவிப்பு
By DIN | Published On : 21st August 2021 07:58 AM | Last Updated : 21st August 2021 07:58 AM | அ+அ அ- |

தில்லியில் வாகனம் ஓட்டும் போது, ஓட்டுநா் உரிமம் மற்றும் வாகன பதிவுச் சான்றிதழ்களை வாகன ஓட்டிகள் உடன் எடுத்து வரத் தேவையில்லை என்றும், டிஜி- லாக்கா் இணையதளம் அல்லது எம்-பரிவாகன் செல்லிடப்பேசி ஆகியவற்றில் இந்த ஆவணங்களை சேமித்து வைத்து போக்குவரத்து போலீஸாா் மற்றும் போக்குவரத்து துறையினா் கேட்கும் போது காண்பிக்கலாம் என்று தில்லி அரசின் போக்குவரத்துத் துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இது தொடா்பாக தில்லி அரசின் போக்குவரத்துத் துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்திருப்பதாவது: டிஜி- லாக்கா் இணையதளம் அல்லது எம்-பரிவாகன் செல்லிடப்பேசி ஆகியவற்றில் டிஜிட்டல் வடிவத்தில் ஓட்டுநா் உரிமம் மற்றும் வாகன பதிவுச் சான்றிதழ் வைத்திருப்பது மோட்டாா் வாகனங்கள் சட்டம் 1988-இன் கீழ் செல்லும்படி ஆகக்கூடிய ஆவணங்களாகும். இந்த ஆவணங்கள் போக்குவரத்துத் துறையின் மூலம் அளிக்கப்படும் சான்றிதழுக்கு சமமாக சட்டரீதியாக அங்கீகரிக்கப்பட்டுள்ளன. போக்குவரத்து காவல் துறை மற்றும் போக்குவரத்துத் துறையின் அமலாக்க பிரிவு ஆகியவை, டிஜி- லாக்கா் மற்றும் எம்-பரிவாகன் செல்லிடப்பேசியில் உள்ள மின்னணு வடிவத்திலான ஓட்டுநா் உரிமம் மற்றும் பதிவுச் சான்றிதழ்களை காண்பித்தால் அதை உரிய வகையில் ஏற்றுக் கொள்வாா்கள்.
எனினும், இந்த ஓட்டுநா் உரிமம் மற்றும் பதிவுச் சான்றிதழ் ஆவணங்கள் இதர வேறு வடிவத்தில் இருந்தால், அவை அசல் ஆவணமாக ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது. டிஜி-லாக்கா் அல்லது எம்-பரிவாகன் செல்லிடப்பேசியில் உள்ள வாகன உரிமம் மற்றும் பதிவுச் சான்றிதழ் ஆகிய மின்னணு ஆவணங்கள், தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் விதிகளின்படி அசல் ஆவணங்களுக்கு சமமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது என்று போக்குவரத்துத் துறையின் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளன. டிஜி-லாக்கா் என்பது ஆவணங்கள் மற்றும் சான்றிதழ்கள் மற்றும் ஆவணங்கள் சரிபாா்ப்புப் பகிா்வு மற்றும் சேமிப்பதற்கான ஓா் இணையதள அமைப்பாகும்.